Friday

செய்யாறு: பூஜ்ஜியத்திலிருந்து ஒரு ராஜ்ஜியம்!


ஸ்தல விருட்சம் பனைமரமும்,
திருவத்திபுரம் வேதபுரீஸ்வரர் கோயில் கோபுரங்களும்


சிரத்தாஞ்சலி புஷ்பம் – 7 

*****************************


1984-ஆம் ஆண்டு நடந்த சம்பவம் இது…

திருவண்ணாமலை சங்க கார்யாலயத்தில் ஒரு நாள் மதிய உணவு முடித்து, நானும் வீரபாகுஜியும் ஓய்வாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம். அந்த ஆண்டு நடைபெற வேண்டிய ஐடிசி முகாமை (பிராத்மிக் சிக்‌ஷண வர்கா- சங்க அடிப்படைப் பயிற்சி முகாம்) எந்த ஊரில், எந்த இடத்தில், எந்தத் தேதியில் நடத்துவது, எத்தனை சங்க்யா (பயிற்சியாளர்கள் எண்ணிக்கை) வரும் என்பது பற்றியெல்லாம் பேசிக் கொண்டிருந்தோம். பின்னர் சிறிது நேரம் உறங்கச் சென்றோம்.

மாலையில் 4 மணியளவில் வீரபாகுஜி, “ஜோதி, எனக்கு ஒரு யோசனை! இந்த செய்யாறு தாலுகாவில் சங்க வேலை ஜீரோவாக உள்ளது. உங்களாலும் அந்த தாலுகாவில் கவனம் செலுத்த முடியவில்லை. என்னாலும் நேரம் கொடுக்க முடியவில்லை. ஷாகா இல்லாத தாலுகா என்று தொடர்ந்து பட்டியலில் இருந்து கொண்டிருக்கிறது. எனவே, செய்யாறில் ஐடிசி வைத்துக் கொண்டால் எப்படி இருக்கும்?” என்றார்.

எனக்குச் சிரிப்பு வந்தது. ‘‘அங்கு ஷாகா இல்லை. பெயருக்குக் கூட ஸ்வயம்சேவகர்கள் என்று யாரும் கிடையாது. எப்படிஜி, ஐடிசி நடத்துவது?’’ என்றேன் நான்.

‘‘ஓர் ஊரில் ஷாகா நடத்தி, ஸ்வயம்சேவகர் உருவாகி, காரியகர்த்தர் தயாரான பின்னர் முகாம் நடத்துவது என்பது ஏற்கனவே உள்ள வழிமுறை. ஏன் அந்தர்பல்டியாக செய்யக் கூடாது? அந்த ஊரில் ஐடிசி நடத்துவோம். அதன்மூலம் சிலர் தொடர்புக்கு வருவார்கள். அவர்களை வைத்து ஷாகா துவக்குவோம். எப்படி?’’ என்றார் வீரபாகுஜி.

நான், ‘‘உங்கள் அந்தர்பல்டி எல்லாம் இருக்கட்டும், வியவஸ்தா (முகாம் ஏற்பாடுகள்) மற்றும் பிரபந்தகர்களுக்கு (முகாம் நடத்துவோர்) எங்கே போவது?’’ என்றேன்.

‘‘அதைப் பற்றியெல்லாம் கவலைப்பட வேண்டாம். பிறகு பார்த்துக் கொள்ளலாம். ஐடிசி நடத்துவதற்கு ஒரு இடத்தை மட்டும் கண்டுபிடித்துவிட்டால் போதும். மற்ற எல்லாவற்றையும் சமாளித்துவிடலாம்’’ என்றார் வீரபாகுஜி.

‘‘செய்யாறில் நமக்குத் தெரிந்தவர் என்று ஒருவர்கூட இல்லையே?’’ என்றேன்.

‘‘தெள்ளாறைச் சேர்ந்த டி.ஜி. மணி என்பவர் செய்யாறில் தங்கி, வக்கீல் தொழில் செய்கிறார். அவரை நான் தெள்ளாறில் ஓரிரு முறை சந்தித்துப் பேசியிருக்கிறேன். அவருக்கு நான் ஒரு கடிதம் தருகிறேன். அதை எடுத்துக்கொண்டு செய்யாறு செல்லுங்கள். அவர்மூலம் ஐடிசிக்கு எப்படியாவது ஓரிடத்தைத் தேர்வு செய்து விடுங்கள். தைரியமாக நாளையே செய்யாறுக்கு புறப்பட்டுச் செல்லுங்கள்’’ என்றார் வீரபாகுஜி.

செய்யாறு மூத்த வழக்கறிஞரும்
விஸ்டம் கல்விக் குழுமத்தின் தலைவருமான
வக்கீல் திரு. டி.ஜி.மணி, MA., BL., MBA., 

கடிதத்தைப் பெற்றுக்கொண்ட நான், செய்யாறுக்குப் பயணமானேன். வக்கீல் டி.ஜி.மணியின் வீட்டு விலாசம் தெரியாது என்பதால், நேராக கோர்ட்டுக்குச் சென்றேன். அங்கு விசாரித்து, அவரைப் பார்த்து அறிமுகம் செய்து கொண்டேன். அவர் மிகவும் சந்தோஷப்பட்டார். வீரபாகுஜியின் கடிதத்தைக் கொடுத்தேன். கோர்ட் இடைவெளி நேரத்தில் அவர் என்னை வீட்டிற்கு அழைத்துச் சென்றார்; அவருடைய மனைவிக்கு என்னை அறிமுகம் செய்து வைத்தார். இருவரும் சேர்ந்து உணவருந்தினோம்.

‘‘மீண்டும் நான் கோர்ட்டுக்குச் செல்ல வேண்டி இருக்கிறது. என்னுடைய கிளையன்ட் ராமகிருஷ்ண செட்டியார் என்பவர், செய்யாறு பஜார் வீதியில் ராதாகிருஷ்ணா ஜவுளி ஸ்டோர் கடை வைத்திருக்கிறார். அவர் புதிதாக ஒரு கல்யாண மண்டபம் கட்டியிருக்கிறார். உங்களைப் பற்றி தொலைபேசியில் தெரிவித்து விடுகிறேன். நீங்கள் போய் அவரைப் பாருங்கள்’’ என்றார் டி.ஜி.மணி; வீட்டிலிருந்த சைக்கிளையும் கொடுத்து, அவரைப் பார்த்து வரச் சொன்னார்.

நான் நேராக அந்தக் கடைக்குச் சென்றேன். என்னைப் பார்த்ததும் புரிந்துகொண்டு, வணக்கம் தெரிவித்தார் செட்டியார். அவர் ‘மெய்வழிச்சாலை’ என்னும் மத சம்பிரதாயத்தைச் சேர்ந்தவர். தலையில் பெரிய மஞ்சள் நிறத் தலைப்பாகை கட்டியிருந்தார். ‘‘எனக்கு ஆர்.எஸ்.எஸ். பற்றியெல்லாம் பெரிதாக ஒன்றும் தெரியாது. எங்கள் வக்கீல் சொல்லி இருக்கிறார் என்பதால் மண்டபத்தைத் தருகிறேன். இன்னும் ஓரிரு நாளில் பூச்சு வேலைகள் முடிந்துவிடும். உங்கள் பயிற்சி முகாம் முடிந்த பின்னர், திறப்பு விழாவை வைத்துக் கொள்கிறேன். மண்டபத்தில் வாட்ச்மேன் இருப்பார். தண்ணீர் வசதி, மின்சாரம், சமையல் கூடம் எல்லாம் இருக்கிறது. வாட்ச்மேனைப் பார்த்து, முகாம் தேதியை டைரியில் குறித்துக் கொடுத்துவிட்டுச் செல்லுங்கள்’’ என்றார் செட்டியார்.

எனக்கு உச்சி முதல் பாதம் வரை மகிழ்ச்சி பாய்ந்தோடியது. நான், மண்டி தெருவில் இருந்த ராதாகிருஷ்ணா கல்யாண மண்டபம் சென்று வேலையை முடித்துவிட்டு, வக்கீல் டி.ஜி.மணியிடம் விஷயங்களை எல்லாம் சொல்லிவிட்டு, நேராக வேலூர் கார்யலாயம் சென்றேன்.

கார்யாலயத்தில் வீரபாகுஜி இருந்தார். முழு விஷயத்தையும் அவரிடம் சொல்லி சந்தோஷப்பட்டேன். ‘‘பார்த்தீர்களா ஜோதி! நம்பிக்கைதான் வாழ்க்கை. சிரத்தையோடு முயற்சித்தால், முள்ளும் மலராகும்!’’ என்றார் வீரபாகுஜி.

அன்று அவர் சொன்ன இந்தப் பொன்மொழி இன்றும் என் மனதில் அழியாமல் அவர் நினைவாக இருக்கிறது.

‘‘ஜோதி, ஐடிசியோடு சேர்த்து விபாக் கோஷ் வர்காவும் (கோட்ட அளவிலான சங்க வாத்தியப் பயிற்சி முகாம்) வைத்துக் கொள்ளலாமே!’’ என்றார் வீரபாகுஜி.

நான் அவரை முறைத்துப் பார்த்தேன். ‘‘என்ன விளையாடுகிறீர்களா?’’ என்றேன்.

‘‘ஒரே செலவில் இரண்டையும் முடித்துவிடலாம். இல்லாவிட்டால் தனித்தனியே ஏற்பாடுகள் செய்ய வேண்டும். ஆகவே, இரண்டையும் ஒன்றாக வைத்து முடித்துவிடுவோம்! வருகின்ற ஜில்லா பைட்டக்குகள் மற்றும் பிரசாரக் பைட்டக்கிற்கு முன்பாக சர்க்குலர் (சுற்றறிக்கை) தயார் செய்துவிட வேண்டும். மீண்டும் நாம் பிரசாரக் பைட்டக்கில் சந்திப்போம். இப்போது நீங்கள் திருவண்ணாமலைக்குப் புறப்படுங்கள்’’ என்றார் வீரபாகுஜி.

பிரசாரக் பைட்டக்கில் ஐடிசி மற்றும் கோஷ் வர்கா பற்றிய சர்க்குலர் கிடைத்தது. ‘‘ஜோதி, முகாமிற்கு நான்கு நாட்களுக்கு முன்னதாக செய்யாறுக்கு வந்துவிடுங்கள். நாம் இருவரும் அங்கே தங்கியிருந்து எல்லா முன்னேற்பாடுகளையும் செய்ய வேண்டும்’’ என்று சொல்லி, தேதியை ஒரு சீட்டில் எழுதி என்னிடம் கொடுத்தார் வீரபாகுஜி.

அந்தத் தேதியில், நான் கணவேஷ் (சங்கச் சீருடை) போன்ற முகாமிற்குத் தேவையான பொருட்களை எடுத்துக் கொண்டு, திருவண்ணாமலையிலிருந்து செய்யாறு போய்ச் சேர்ந்தேன். எனக்கு முன்னதாகவே டி.ஜி.மணி வீட்டில் வீரபாகுஜி வந்திருந்தார். நாங்கள் இருவரும் அவரது வீட்டிலேயே தங்கியிருந்தோம்.

டி.ஜி. மணியின் ஆலோசனைப்படி ஊரில் உள்ள இந்து உணர்வு கொண்ட பெரியோர்கள் சிலரின் பட்டியலைத் தயார் செய்தோம். வாடகைக்கு சைக்கிள் எடுத்துக்கொண்டு இருவரும் பகல் முழுவதும் சம்பர்க (மக்கள் தொடர்பு) செய்தோம். வழியில் பள்ளி மாணவர்கள், இளைஞர்கள் எவராவது கண்ணில் பட்டால், வலியச் சென்று அறிமுகம் செய்து கொள்வோம். மாலை 5 மணிக்கு குறிப்பிட்ட ஒரு மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சார்பாக கராத்தே பயிற்சி வகுப்பு இருப்பதாகவும், அதற்கு வருமாறும் அழைப்புக் கொடுத்தோம்.

முதல் நாள் மாலை, மைதானத்துக்கு 10 மாணவர்கள் வந்திருந்தனர். வீரபாகுஜி கராத்தே பயிற்சி எடுத்தார். நான் சங்கத்தின் விளையாட்டுகளை எடுத்தேன். மறுநாள் மாணவர்களின் எண்ணிக்கை 20-ஐத் தொட்டது. உடற்பயிற்சிக்குப் பிறகு, வட்டமாக அமர்ந்து, அறிமுகம், தேசபக்திப் பாடல், கதை நிகழ்ச்சிகள் இருந்தன. இவை யாவும் அவர்களுக்குப் புதுமையாகவும் உற்சாகமாகவும் இருந்தன. நான்கு நாட்கள் தொடர்ந்து இப்படி கூடுதல் நடந்தது.

கோஷ் வர்கா சிக்‌ஷார்த்திகள் தங்குவதற்கும் பயிற்சிகள் செய்வதற்கும், தனியாக ஒரு திருமண சத்திரம் கண்டுபிடித்தோம். கோஷ் வர்காவுக்கு பிரமுக்காக பாண்டிச்சேரி இந்திரசேன் வந்திருந்தார். சென்னையைச் சேர்ந்த ஸ்வயம்சேவர்கள் குழு, விசேஷ அனுமதி பெற்று சிக்‌ஷார்த்திகளாக செய்யாறு கோஷ் வர்காவுக்கு வந்தனர். அப்போது அடையாறு நகர் காரியவாஹ் பொறுப்பில் இருந்த எச்.எஸ்.கோவிந்தாஜி (பின்னாளில் சங்கத்தின் மாநில அமைப்பாளர் ஆனவர்) அந்தக் குழுவுடன் வந்திருந்தார். அவர் வர்காவில் வம்சி சிக்‌ஷக்காக (குழலிசைப் பயிற்சியாளர்) கலந்து கொண்டார்.

மாணவர்களைத் தொடர்பு செய்து, தினசரி கூடுதல் நடத்தினோமே, அதே மைதானம்தான் வர்காவின் சங்கஸ்தானமாகவும் அமைந்தது. தினசரி சந்தித்துவந்த மாணவர்கள் அணி – சங்கஸ்தானத்தில் தனி கணாவாகச் செயல்பட்டது. அதற்கும் சிக்ஷகர்கள் மாறி மாறிச் சென்று பயிற்சியும் விளையாட்டும் எடுத்தனர். முறையான தினசரி ஷாகா பயிற்சிகள் அவர்களுக்குக் கிடைத்தன.

வர்கா நடைபெறும் மண்டபத்திலிருந்து சங்கஸ்தானம் 2.5 கி.மீ. தூரத்தில் இருந்தது. காலை, மாலை இருவேளையும் சங்கஸ்தானத்திற்கு, தண்டவுடன் (சிலம்பத் தடி), கோஷ் வாத்தியம் முழங்க சிக்‌ஷார்த்திகள் சஞ்சலனில் (அணிவகுப்பு ஊர்வலம்) சென்று வருவர். அது ஊரையே ஒரு கலக்குக் கலக்கிவிட்டது. ஊரெங்கும் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி முகாம் பற்றிய செய்தி பரவியது. காவல் துறையினர் முகாமிற்கு வந்தனர். முகாம் பற்றிய விஷயங்களைக் கேட்டறிந்தனர்.

வீரபாகுஜி போலீஸ் நிலையம் சென்று, பேண்ட் வாத்தியம் முழங்க சங்கஸ்தானத்திற்கு சிக்‌ஷார்த்திகள் சென்றுவர அனுமதி கோரி, மனு கொடுத்துவிட்டு வந்தார். வேலூர் விபாக் முழுவதும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்வயம்சேவகர்கள் சிக்‌ஷகர்களாகவும் பிரபந்தகர்களாகவும் முகாமில் பணியாற்றிக் கொண்டிருந்தனர். எல்லாம் சுமுகமாக நடந்து கொண்டிருந்தன.

இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால், ஒவ்வொரு நாளும் ஊரின் ஒவ்வொரு பிரதான வீதி வழியாக சிக்‌ஷார்த்திகளை பேண்ட் வாத்தியம் முழங்க சஞ்சலனில் சங்கஸ்தானத்திற்கு வீரபாகுஜி அழைத்துச் செல்வார். மாலையில் சங்கஸ்தானம் முடித்து மண்டபம் திரும்பும்போது, பிரபந்தகர்கள் ஆர்.எஸ்.எஸ். அறிமுக நோட்டீஸை வீதியின் இருபுறத்திலும் உள்ள வீடுகள், கடைகளுக்கு விநியோகம் செய்துகொண்டே வருவார்கள். இதனால், ஒவ்வொரு நாளும் ஊர் முழுவதும் ஆர்.எஸ்.எஸ். பற்றிய பேச்சும் பரபரப்பும் கூடிக்கொண்டே வந்தது.

மாலையில் மண்டபம் வந்து சேர்ந்ததும், வீரபாகுஜி என்னிடம் நன்கொடை ரசீது புத்தகத்தைக் கொடுத்து, எந்த வீதி வழியாக சஞ்சலன் வந்ததோ, அந்த வீதியில் உள்ள கடைகள், வியாபார நிறுவனங்களைத் தொடர்பு கொண்டு நன்கொடை பெற்று வருமாறு என்னை அனுப்பி வைத்தார். யாரேனும் பிரபந்தகர் ஒருவரை உடன் அழைத்துக்கொண்டு நான் தினசரி வசூல் வேட்டைக்குச் செல்வேன். ஆர்.எஸ்.எஸ். என்றால் எப்படி இருக்கும் என்பதை கண்கூடாக மக்கள் காணுமாறு செய்ததால், எனக்கு வேலை சுலபமாக இருந்தது. முகமலர்ச்சியுடன் வரவேற்று, ஊர் மக்கள் பணமாகவும், பொருளாகவும் நன்கொடை அளித்தனர். எவ்விதப் பற்றாக்குறையும் இல்லாமல், மகிழ்ச்சியுடனும் கலகலப்புடனும் முகாம்கள் நடந்து கொண்டிருந்தன.

மாலை உடற்பயிற்சி நடக்கும் சமயத்தில் வக்கீல் டி.ஜி.மணி அவர்கள் தனக்குப் பரிச்சயமான, நெருங்கிய நண்பர்கள், பிரமுகர்கள் சிலரை சங்க ஸ்தானத்திற்கு ஒவ்வொரு நாளும் அழைத்து வருவார். அவர்களுக்கு சங்கத்தை அறிமுகம் செய்து வைப்பார். செய்யாறு நகரத்தில் சங்கத் தொடர்பு விரிவடைய அது காரணமாகியது. 

ஹெல்த் இன்ஸ்பெக்டர் (ஓய்வு)
திரு. டி.ஏ.சண்முகம். 

சற்றும் அறிமுகம் இல்லாத ஒருவர் சைக்கிளில் தன் புதல்வர்கள் இருவரையும் உடன் அழைத்துக்கொண்டு தினசரி சங்கஸ்தானத்திற்கு வருவார். சங்கஸ்தானில் நிகழ்ச்சிகள் முடியும் வரை இருந்து கண்டுகளிப்பார். நான் அவரை அறிமுகம் செய்து கொண்டேன். அவர், ‘‘சார், என் பையன்கள் (மூத்தவன் காமராஜ்- நான்காம் வகுப்பு மாணவன், இளையவன் மோதிலால்- இரண்டாம் வகுப்பு மாணவன்) இருவரையும் இந்த அமைப்பில்தான் சேர்த்துவிடப் போகிறேன். நல்ல இளைஞர்களை உருவாக்கும் அமைப்பு இதுதான்’’ என்றார். அவர் பெயர் டி.ஏ.சண்முகம். செய்யாறில் அரசு சுகாதார ஆய்வாளராக (பிளாக் ஹெல்த் இன்ஸ்பெக்டர்) பணிபுரிந்து வந்தார்.

வர்காவின் கடைசி நாளன்று அன்றைய பிராந்த பிரசாரக் (மாநில அமைப்பாளர்) சண்முகநாதன்ஜி வந்திருந்தார். அவருடன் வர்காவில் மதிய உணவு அருந்த ஊரில் உள்ள பெரியவர்களை அழைத்திருந்தோம். கிட்டத்தட்ட 30 பேர் வந்திருந்தனர். உணவு முடித்த பின், அவர்களுடன் சண்முகநாதன்ஜி கலந்துரையாடினார். மாலையில் அணிவகுப்பு ஊர்வலமும் பொது விழாவும் இருந்தது. மண்டி தெருவில் உள்ள பச்சீஸ்வரர் கோயிலுக்கு அருகில் மேடை அமைத்து, பொதுவிழா நடந்தது.

ஹெல்த் இன்ஸ்பெக்டர் சண்முகம் அவர்கள், பொது விழா ஏற்பாடுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அவர் வசித்து வந்த ஒத்தவாடை பிராமணர் தெருவில் இருந்து, இளைஞர்களையும் பெரியோர்களையும் தொடர்புகொண்டு பொது விழாவைப் பார்வையிட அழைத்து வந்திருந்தார். குட்டிப்பையன்கள் காமராஜுவும் மோதிலாலும் அப்பாவுடன் ஓடியாடி உதவி செய்து கொண்டிருந்தனர். வி.சண்முகநாதன்ஜியின் சிறப்புரைக்குப் பின், நிறைய விலாசங்கள் கிடைத்தன.

அன்பர்களே! இந்த வர்கா முடிந்த பின்னர், மாணவர்களின் அணி, தினசரி சாயம் ஷாகாவாக (மாலைநேர கூடுதல்) ஆனது. அதுமட்டுமல்லாமல், செய்யாற்றின் கரையில் உள்ள ஊரான திருவத்திபுரத்திலும் ஷாகா ஆரம்பிக்கப்பட்டது.

திருவத்திபுரத்தில் திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற வேதபுரீஸ்வரர் கோயில் உள்ளது. ஞானசம்பந்தப் பெருமான் தெய்வ பலத்தின் துணை கொண்டு, ஆண் பனை மரத்தை குலை தள்ளும் (பெண்) பனை மரமாக மாற்றிய திருத்தலம் அது. அவ்வூரில் நெசவுத் தொழில் செய்யும் செங்குந்தர் மரபினர் பெரும்பான்மையாக வசித்து வந்தனர். பொதுவிழாவில் விலாசம் தந்த இளைஞர்களைக் கொண்டு அங்கு ராத்திரி ஷாகா (இரவு நேரக் கூடுதல்) ஆரம்பிக்கப்பட்டது.

வேதபுரீஸ்வரர் கோயிலின் உள்ளே,
குலை தள்ளும் ஆண் பனையும்
திருஞானசம்பந்தரும்- சிலா ரூபங்கள். 

ஹெல்த் இன்ஸ்பெக்டர் சண்முகம் தினசரி ஷாகாவுக்கு வருவார். அவர் பின்னாட்களில் சங்க சிக்‌ஷா வர்கா (முதலாம் ஆண்டு பயிற்சி முகாம்) முடித்தார்; செய்யாறு தாலுகா கார்யவாஹ் ஆனார். அவரின் இரு புதல்வர்களும் சங்கத்தின் காரியகர்த்தகர்களாயினர். மூத்த மகன் காமராஜ் பி.இ. படிப்பு முடித்து, சங்க பிரசாரகராக ஆனார்; திருவண்ணாமலை ஜில்லா பிரசாரக்காகவும், காஞ்சிபுரம் சக விபாக் பிரசாரக்காகவும் பணிபுரிந்தார்; தற்பொழுது பாண்டிச்சேரி விபாக் பிரசாரகராக சங்கப் பணி ஆற்றி வருகிறார்.

அன்பர்களே! ஒன்றுமே இல்லாத ஊரில் தைரியமாக ஐடிசி முகாமும், கோஷ் வர்காவும் நடத்தி – ஊரையே ஒரு கலக்கு கலக்கி – பதசஞ்சலனும் பொது விழாவும் நடத்தி – அதன் பிறகு ஷாகாக்கள் முறையாக ஆரம்பிக்கப்பட்டு – காரியகர்த்தர்கள் உருவாகி – பின்னாட்களில் அந்த ஊரிலிருந்து விபாக் பிரசாரக் ஒருவர் நமக்குக் கிடைத்திருக்கிறார் என்றால், அது பூஜ்ஜியத்திலிருந்து ஒரு ராஜ்ஜியம்தானே?

செயற்கரிய காரியத்தைச் செய்து, செய்யாறில் ஒரு வரலாற்றைப் படைத்தவர் நம் வீரபாகுஜி!

*****************************

சகோதரர்களே! 

மானனீய சூரிஜி சங்க பைட்டக்குகளில் – மானனீய யாதவராவ்ஜியுடன் ரயில் பயணத்தின்போது தனக்கு நேர்ந்த ஓர் அனுபவத்தை பலமுறை சொல்ல, நான் கேட்டிருக்கிறேன். ஒருமுறை அவரும் யாதவராவ்ஜியும் ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்தனர். ஒரு ஸ்டேஷனில் ரயில் சிறிதுநேரம் நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது பிளாட்பாரத்தில் கந்தலாடை அணிந்த ஒரு பிச்சைக்காரன் தன் மடியில் சப்பாத்தித் துண்டுகளை வைத்திருந்தான்; ஒவ்வொரு துண்டாக எடுத்து இன்னொரு உள்ளங்கையில் வெறுமனே தொட்டுத் தொட்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தான். இதைக் கவனித்த யாதவராவ்ஜி “சூரு, அங்கே பார்! வெறும் உள்ளங்கையில் தொட்டுத் தொட்டு சப்பாத்தியைச் சாப்பிடுகிறான். நீ போய் என்னவென்று கேட்டு வா” என்றார்.

சூரிஜி அவனிடம் சென்று கேட்டார். அவன், “என்ன செய்வது? சப்பாத்தி கிடைத்தது; சப்ஜி கிடைக்கவில்லை. அதனால்தான், இந்த உள்ளங்கையில் சப்ஜி இருப்பதாகக் கற்பனை செய்துகொண்டு தொட்டுத் தொட்டு சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன்” என்றான்.

யாதவராவ்ஜியிடம் வந்து அதனைத் தெரிவித்தார் சூரிஜி. ”சூரு, இதைத்தான் ‘கற்பனா தரித்திரம்’ என்பார்கள். கற்பனைதானே செய்கிறான்? சப்ஜி என்று ஏன் கற்பனை செய்ய வேண்டும்? கையில் பாசுந்தி இருப்பதாக நினைத்து சாப்பிடலாமே?’’ என்றார் யாதவ ராவ்ஜி.

இதை சங்க பைடக்குகளில் சூரிஜி அடிக்கடி குறிப்பிடுவார். “நாம் சங்கப் பணியை விஸ்தரிக்க யோசிக்கும்போது, பல கற்பனைகளுடன் திட்டமிடுவோம். அதில் கற்பனா தரித்திரம் கூடாது. எது உச்ச இலக்கோ அதை முன்வைத்துக்கொண்டு காரியங்களை ஆற்ற வேண்டும்’’ என்பார் சூரிஜி.

நம் அன்பிற்குரிய வீரபாகுஜியும் அப்படித்தான். அவரிடத்தில் கற்பனா தரித்திரத்தை நான் பார்த்ததே இல்லை. மாநாடாக இருக்கட்டும், ஷிபிராக இருக்கட்டும், எதையும் உச்சமாக, பிரமாண்டமாகச் செய்ய வேண்டுமென்று ஆசைப்படுவார். உடன் காரியகர்த்தர்களையும் அந்த வீச்சிலேயே அழைத்துச் செல்வார்.

அப்படி அவர் வேலூரில் நடத்திய இந்து ஒற்றுமை மாநாடு மற்றும் பிராந்த ஷிபிர் பற்றிய அரிய தகவல்களுடன் அடுத்த சிரத்தாஞ்சலி புஷ்பத்தில் உங்களைச் சந்திக்கிறேன்.

வணக்கம்!  




No comments:

Post a Comment