Friday

செங்கம் மண்ணில் சங்கத்தின் பகவாக் கொடி பறந்த கதை - 3


சிரத்தாஞ்சலி புஷ்பம் -8

பாகம் – 3   

முஸ்லிம் எதிர்ப்பை நிர்மூலமாக்கிய 

வீரபாகுஜியின் சமயோசித யுக்தி

  *****************************

ரஜுபையா ஜி

1985ஆம் ஆண்டு
. அப்போது சர் காரியவாஹ் (அகில பாரத பொதுச் செயலாளர்) பொறுப்பில் இருந்த பேராசிரியர் ராஜேந்திர சிங் அவர்கள் (ரஜுபையா ஜி)  தமிழகத்தில் டிசம்பர் மாதத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அவரது வருகையில் வேலூர் விபாகிற்கு இரண்டு நாட்கள் கிடைத்தன. 

டிசம்பர் 4ஆம் தேதி திருவண்ணாமலை ஜில்லாவிற்கும், டிசம்பர் 5ஆம் தேதி வேலூர் ஜில்லாவிற்கும் ஒதுக்கப்பட்டன. நிகழ்ச்சியின் வடிவம் குறித்து திருவண்ணாமலை ஜில்லா பைட்டக்கில் ஆலோசனை நடந்தது. செங்கத்தில் இதுவரை பெரிய நிகழ்ச்சி ஏதும் நடந்ததில்லை என்பதாலும், தற்போது தாலுகாவில் நல்ல ஷாகாக்கள் மலர்ந்துள்ளன என்பதாலும், தாலுகா காரியகர்த்தர்கள் குழு தயாராகி உள்ளதாலும், இந்த ஆண்டு ஜில்லா பதசஞ்சலன் (மாவட்ட அளவிலான சீருடை அணிவகுப்பு) மற்றும் பொதுவிழா நிகழ்ச்சியை செங்கத்தில் நடத்துவது என்று ஏகமனதாக முடிவாகியது.

உடனே, செங்கம் காரியகர்த்தர்கள் நிகழ்ச்சி ஏற்பாட்டில் சுறுசுறுப்பாகினர். நகரின் முக்கிய இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் குறித்து சுவர் விளம்பரங்கள் செய்யப்பட்டன. பெரிய பேனர்களும் வைக்கப்பட்டன. பொதுவிழாவுக்கு நகரத்தின் ஜனதா கட்சித் தலைவரும், ‘பெரியவர்’ என்று ஊர் மக்களால் மிகுந்த மரியாதையுடன் அழைக்கப்பட்டவருமான வழக்கறிஞர் குலசேகரன் அவர்கள் தலைமை தாங்க இசைவு தந்தார். நாட்டறம்பள்ளி ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் தலைமை சுவாமிஜியான பூஜனீய குமரானந்த மகராஜ் அவர்கள் ஆசியுரை வழங்குவதற்கு ஒப்புக்கொண்டார்.

செங்கம் தாலுகா அலுவலகத்தின் பெரிய சுவர் ஒன்றில் பல வண்ண மைகளைக் கொண்டு,  “மலைப்பாம்பு போல, வாலில் தீப்பிடித்து எரியும்போது உறங்கும் வழக்கம் இனி இந்துக்களுக்கு வேண்டாம். ஜனத்தொகை குறையும்போதே விழித்துக்கொள்ளுங்கள் - சுப்பிரமணிய பாரதி” எனும் வாசகத்துடன் விழாக் குறித்த அறிவிப்பு வரையப்பட்டது. அது நகருக்குள் நுழையும் மக்கள் அனைவரின் கண்களையும் கவர்ந்த வண்ணமாக இருந்தது. மேலும் நகரின் பல இடங்களில் அரவிந்தர், விவேகானந்தர், சகோதரி நிவேதிதை, வீர சாவர்க்கர் ஆகியோரின் பொன்மொழிகளுடன் கூடிய விளம்பரங்கள் எழுதப்பட்டன.

விழா ஏற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக வீரபாகுஜி, செங்கம் வந்து இரண்டு நாட்கள் தங்கினார். பெங்களூரு சாலையில் உள்ள தோக்கவாடி, திரெளபதி அம்மன் கோயிலிலிருந்து ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் புறப்பட்டு, பஸ் நிலையம், நீதிமன்றம், தாலுகா அலுவலகம், சிவன் கோயில், பெரிய மசூதி போன்ற முக்கிய இடங்களை எத்தனை மணிக்கு எத்தனை நிமிடத்தில் ஊர்வலம் கடக்கும் என்பதைத் தீர்மானித்து நிகழ்ச்சி அழைப்பிதழில் அச்சிட வேண்டும் என்றும், ‘காலம் தவறாமை’யைக் கடைப்பிடிப்பதில் சங்கம் எவ்வளவு உறுதியாக உள்ளது என்பதை மக்களுக்குத் தெரியப்படுத்த இது ஒரு வாய்ப்பு என்றும் வீரபாகுஜி கூறினார். 

அதற்காக நடுநிசியில் தன்னுடன் மூன்று காரியகர்த்தர்களை அழைத்துக்கொண்டு அவரே சஞ்சலன் (அணிவகுப்பு ஒத்திகை) செய்து, முக்கிய இடங்களைக் கடக்கும் நேரத்தைக் குறிப்பெடுக்கச் செய்தார். அதன்படி அழைப்பிதழ்கள் தயாராகின; மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டன.

அழைப்பிதழைக் கண்ணுற்ற மக்களுக்கு மிகுந்த ஆச்சர்யம்! பொதுவிழா தலைவர் வழக்கறிஞர் குலசேகரன் கூட, ‘‘நிமிஷத் துல்லியமாகப் போட்டிருக்கிறீர்களே! இது  சாத்தியமா?’’ என்று வியப்புற்றார். பதசஞ்சலனை கண்டுகளிக்கப் பேரார்வம் ஊர் மக்களிடையே ஏற்பட்டது.

பதசஞ்சலன்,  பொது விழா, காவல் துறை அனுமதி, காரியகர்த்தர்கள் பைட்டக்,  இரவு உணவு ஏற்பாடு என அனைத்து ஏற்பாடுகளையும் முழுமையாக ஆவன செய்து, தேவையான குறிப்புகளைக் கொடுத்துவிட்டு வீரபாகுஜி வேலூருக்குப் புறப்பட்டுச் சென்றார்.

ஸ்வயம்சேவகர்கள் வீடு வீடாகச் சென்று அழைப்பிதழைக் கொடுத்து மக்களை அழைத்தனர். அதன் பிறகுதான் கலாட்டா ஆரம்பித்தது. முஸ்லிம்கள் தரப்பிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பின. முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த முக்கியப் பிரமுகரின் தலைமையில், முஸ்லிம் வியாபாரிகள் குழுவும் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த முஸ்லிம் தலைவர்களும் ஒன்றாகச் சேர்ந்து போலீஸ் நிலையம் சென்றனர். ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தைத் தடை செய்ய வேண்டும் என்றும், அணிவகுப்பு ஊர்வலம் என்ற பெயரில் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடைபெறலாம் என்றும், முஸ்லிம் வியாபார நிறுவனங்கள் மற்றும் பெண்களின் பாதுகாப்புக் கருதி, ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சிக்குத் தடைவிதிக்க வேண்டும் என்றும் புகார் மனு அளித்தனர். அது மட்டுமல்லாமல், தாசில்தார் அலுவலகம் முன்பு ஒன்றுகூடி, ஆர்.எஸ்.எஸ். எதிர்ப்புக் கோஷங்களை எழுப்பினர். தாசில்தாரிடமும் புகார் மனு அளிக்கப்பட்டது. இதனால் ஊரில் மக்களிடையே பரபரப்பு உண்டானது. எங்கும் கடைவீதிகளில் வாதப் பிரதிவாதங்கள் ஏற்பட்டன.

ஆர்.எஸ்.எஸ். அகில பாரதத் தலைவர் வருகை  தொடர்பான நிகழ்ச்சி என்பதால், இதுகுறித்து உள்ளூர்க் காவல் நிலையத்தில் முடிவெடுக்க இயலாது என்றும், முஸ்லிம்களின் புகாரை மாவட்டக் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு அனுப்பி வைப்பதாகவும், வேலூர் சென்று எஸ்.பி.யைச் சந்திக்குமாறும் முஸ்லிம் தரப்பினரிடம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் தெரிவித்தார். அதே சமயம், சங்க காரியகர்த்தர்களான தாயுமானவன், ராஜா, பன்னீர்செல்வம் ஆகியோரை காவல் நிலையத்திற்கு இன்ஸ்பெக்டர் அழைத்தார். “ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சிக்கு முஸ்லிம்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்கள். அவர்கள் நாளை வேலூர் சென்று எஸ்.பி.யைச் சந்திப்பதாகக் கூறி இருக்கிறார்கள். ஆர்.எஸ்.எஸ். தரப்பிலும் நீங்கள் சென்று எஸ்.பி.யைச் சந்திப்பது அவசியம்’’ என்று அவர் கூறினார்.

நான் தாயுமானவனை அழைத்து, வேலூர் காரியாலயத்திற்கு அனுப்பினேன். வீரபாகுஜி எப்போதும் தன் சுற்றுப்பயண விவரங்களை ஒரு பேப்பரில் எழுதி, மேஜை மீது வைத்துவிட்டுச் செல்வது வழக்கம். அவர் எந்த ஊரில் இருந்தாலும் அந்த ஊருக்குச் சென்று செங்கத்தின் நிலைமையை எடுத்துச்சொல்லி, நாளையே வேலூரில் எஸ்.பி.யைச் சந்திக்குமாறு வீரபாகுஜியிடம் கூறவும் என்று தாயுமானவனிடம் சொன்னேன். 

அன்று அதிர்ஷ்டவசமாக வீரபாகுஜி வேலூர் காரியாலயத்திலேயே இருந்தார். செங்கம் நிலவரம் குறித்து முழு விவரங்களையும் கேட்டறிந்த வீரபாகுஜி, ‘‘நாளை எஸ்.பி.யைச் சந்திப்பதாகவும், நாளை இரவே செங்கம் வந்து சேர்வதாகவும்’’ கூறி, தாயுமானவனை செங்கத்திற்குத் திரும்பிச் செல்லுமாறு அனுப்பி வைத்தார்.

அதன்படி மறுநாள், வேலூரில் உள்ள நகர் சங்கசாலக் ஏழை. அ.முனுசா­மி, இந்து முன்னணி பொருளாளர் மிட்டாய் கம்பெனி ஏ.சி.என்.நாகேந்திரன், மாவட்டச் செயலாளர் பாஸ்கரத் தொண்டை நாடன் ஆகியோரை அழைத்துக்கொண்டு எஸ்.பி. அலுவலகத்திற்கு வீரபாகுஜி சென்றார். அவர் சென்ற அதே நேரத்தில், செங்கத்திலிருந்து முஸ்லிம்கள் சென்ற வேனும் அலுவலகத்திற்குள் நுழைந்தது. அவர்கள் கிட்டத்தட்ட 15 பேர் இருந் தனர். ஊரில் செல்வாக்கு மிக்க முஸ்லிம் வியாபாரிகள் மற்றும் அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் ஒரு குழுவாக அங்கு வந்திருந்தனர். அதில் ஆச்சர்யம் என்னவென்றால், அந்த முஸ்லிம் குழுவுடன் செங்கம் எம்.எல்.ஏ. சாமிக்கண்ணு வந்திருந்தார்; முஸ்லிம்களுக்கு ஆதரவாக அவர் செயல்பட்டார். 

(செங்கம் சட்டமன்றத் தொகுதி பட்டியலின (எஸ்.சி.) மக்களுக்காக ஒதுக்கப்பட்ட தனித் தொகுதியாகும். அப்போது அதிமுக தான் ஜெயிக்கும் என்ற நிலைமை இருந்தது. எனவே முஸ்லிம்கள் புத்திசாலித்தனமாக அதிமுக வேட்பாளரான சாமிக்கண்ணுவுக்கு தேர்தல் நிதி என்ற பெயரில் பெரும் தொகையை அளித்து, அவரைத் தங்கள் வசமாக்கி வைத்திருந்தனர்.) 

முதலில் முஸ்லிம் தரப்பினரைச் சந்தித்த எஸ்.பி  (அப்போது இருந்தவர் வால்டர் தேவாரமா அல்லது ஐ.பி.எஸ். அதிகாரி திலகவதியா என்று என்னால் உறுதியாக நினைவுபடுத்த முடியவில்லை) அவர்களின் கருத்துகளைக் கேட்டறிந்த பின்னர், வீரபாகுஜியைச் சந்தித்தார். இந்த விவகாரத்தை திருவண்ணாமலையில் உள்ள டி.எஸ்.பி. கருப்புசாமி அவர்களைக் கவனிக்கும்படி உத்தரவிட்டுள்ளதாகவும், ஆகவே நீங்கள் டி.எஸ்.பி.யைச் சந்திப்பது நல்லது என்றும் கூறி அனுப்பி வைத்தார்.

அன்றிரவே வீரபாகுஜி செங்கம் புறப்பட்டு வந்தார். வேலூர் எஸ்.பி. அலுவலகத்தில் அவர் கண்ட காட்சி, அவரின் உள்ளத்தில் புதியதொரு சிந்தனைப் புயலை உண்டாக்கி இருந்­தது. அவரது முகத்தில் ஒருவித பரபரப்பு இருந்­தது. ஏதோ ஒரு யுக்தி, தந்திர யோசனையுடன் அவர் செங்கம் நகருக்கு வந்திருப்பதை என்னால் யூகிக்க முடிந்தது. மறுநாள் காலை காரியகர்த்தர்களின் அவசரக் கூட்டம் நடைபெற்றது. ஏற்பட்டுள்ள பிரச்னைகள் அனைத்தையும் கேட்ட பிறகு, வீரபாகுஜி தன் எண்ணத்தை முன்வைத்தார்.

வீரபாகு ஜி

‘‘பிரச்னை என்று வந்தால் முஸ்லிம் சமுதாயத்தின் முன்னணிப் பிரமுகர்கள் அரசியல் பேதமின்றி, ஷியா- சன்னி பேதமின்றி, சமுதாயப் பொறுப்புடன் ஒன்றுதிரண்டு களத்தில் நிற்கின்றார்கள். ஆனால், இந்து மதத்திற்கோ இயக்கத்திற்கோ, கோயிலுக்கோ, கலாசாரத்திற்கோ சவால்கள் என்றால், நம்மவர்கள் தூர நின்று வேடிக்கை பார்க்கின்றார்கள். இந்த நிலை மாற வேண்டும்; மாற்றியே தீர வேண்டும். சங்கம் வேறு, இந்து சமுதாயம் வேறு அல்ல. இந்து சமுதாயப் பாதுகாப்பிற்காகப் பாடுபடும் இயக்கம் ஆர்.எஸ்.எஸ். இதற்கு ஒரு பிரச்னை என்றால், சமுதாயத்தில் உள்ள பெரியோர்கள், கனவான்கள் முன்வந்து களத்தில் நிற்க வேண்டும்; நிற்குமாறு செய்திட வேண்டும். இனி, தாயுமானவனோ, ராஜாவோ, பன்னீர்செல்வமோ காவல் நிலையத்திற்குப் போகக் கூடாது. இந்த ஊர்ப் பெரியோர்கள் ஆர்.எஸ்.எஸ்.ஸுக்காக வாதாடட்டும், போராடட்டும். அவர்களைத் தயார்ப்படுத்த வேண்டும். ஆகவே, மானனீய ரஜுபையாவை வரவேற்கும் விதமாக நகரப் பெரியோர்களைக் கொண்ட ஒரு வரவேற்புக் குழுவை உடனடியாக அமைக்க வேண்டும். அது அனைத்துக் கட்சிகளையும், சமூகப் பிரிவுகளையும் உள்ளடக்கியதாக இருப்பது அவசியம். ஜாதி – கட்சி வேறுபாட்டினைக் கடந்து இந்து சமுதாயத்தால் ஒருங்கிணைந்து செயல்பட முடியும் என்பதை நிரூபிக்க இந்தத் தருணம் நமக்கு ஓர் அரிய வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம்’’ என்று நீண்டதொரு விளக்கத்தைத் தந்து, வழிகாட்டுதலைக் கொடுத்து, அனைத்துக் காரியகர்த்தர்களின் மனதில் புதுத் தெம்பையும் கண்ணோட்டத்தையும் ஏற்படுத்தினார் வீரபாகுஜி.

அனைத்து பிரதானக்  கட்சிகளைச் சேர்ந்த, ஓரளவு சங்கத்தின் மீது ஆதரவோ அனுதாபமோ கொண்டவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டது. செங்கம் நகரில் உள்ள முக்கிய ஜாதிப் பிரிவுகளின் முன்னணிப் பிரமுகர்களின் பட்டியலும் எடுக்கப்பட்டது. இவர்களை நேரில் சந்தித்து ஒப்புதல் பெறுவதற்கு வீரபாகுஜி தலைமையில் மூன்று காரியகர்த்தர்களின் குழுக்கள் அமைக்கப்பட்டு உடனே செயலில் இறங்கின.

வீரபாகுஜி எனக்கொரு பணியைத் தந்தார். அதற்கு ஒரு காரணமும் இருந்தது. 

திருவண்ணாமலையில் அண்ணாமலையார் கோயிலின் மேற்குக் கோபுரத்தை ஒட்டியுள்ள  உள் பிரகாரத்தில், அதாவது பேய் கோபுரத்திற்கும் அம்மணி அம்மாள் கோபுரத்திற்கும் இடையே உள்ள மைதானத்தில்தான் பிரபாத் ஷாகா (சங்கத்தின் தினசரி காலைநேரக் கூடுதல்) நடந்து கொண்டிருந்தது. டி.எஸ்.பி. கருப்புசாமி அவர்கள் தெய்வபக்தி உள்ளவர். அவர் கார்த்திகை, மார்கழி மாதங்களில் தினசரி கோயிலுக்கு வந்து இறைவனை வழிபடும் வழக்கம் கொண்டவராக இருந்தார். 

அவரது ஜீப் வண்டி பேய் கோபுர வாசலில் வந்து  நிற்கும். அங்கிருந்து நடையாக, நமது பிரபாத் ஷாகா நடப்பதைப் பார்த்துக்கொண்டே செல்வார். அம்மணி அம்மாள் கோபுர வாசல் வழியாக மூலஸ்தானத்திற்குச் செல்வார். சில தினங்கள் சற்றே நின்று ஷாகாவைக் கவனிப்பார். அச் சந்தர்ப்பங்களில் அவருடன் நான் பேசி இருக்கிறேன். சங்கத்தைப் பற்றி நேர்மறையான எண்ணங்கள் அவருக்கு இருந்ததை என்னால் உணர முடிந்தது. 

அந்த நிகழ்வை அடிப்படையாகக் கொண்டுதான், வீரபாகுஜி என்னிடம், ‘‘ஜோதி! நீங்கள் திருவண்ணாமலை சென்று டி.எஸ்.பி.யை நேரில் சந்தியுங்கள். ஏற்பட்டுள்ள பிரச்னையைப் பற்றி அவருக்கு எத்தகைய மனநிலை உள்ளது என்பதை முன்கூட்டியே நாம் தெரிந்துகொள்ள வேண்டும். ஆகவே நீங்கள் உடனே திருவண்ணாமலைக்குப் புறப்படுங்கள்’’ என்றார். 

திருவண்ணாமலை நகர் காரியவாஹ் சோனாசலம் ராஜேந்திரன், நகர இந்து முன்னணித் தலைவர் அடமானக் கடை குப்புராஜ் ஆகியோருடன் ஸ்ரீ ரமணர் ஆசிரமத்திற்கு அருகில் இருந்த டி.எஸ்.பி. கேம்ப் ஆபீஸுக்குச் சென்றேன்.  என்னைப் பார்த்ததும் அடையாளம் கண்டுகொண்டார் டி.எஸ்.பி. 

‘‘வாங்க சார்! நீங்கள் நிச்சயம் வருவீர்கள் என்று எதிர்பார்த்தேன். சற்று முன்புதான் எஸ்.பி. என்னிடம் விவரமாகப் பேசினார். வரும் வியாழக்கிழமையன்று நான் செங்கம் வருகிறேன். இந்து - முஸ்லிம் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யும்படி, ஆர்.டி.ஓ.வுக்கு தகவல் அனுப்பி உள்ளேன். நிச்சயம் சுமுகத் தீர்வு ஏற்படும் என்ற நம்பிக்கை உள்ளது’’ என்றார் டி.எஸ்.பி. 

நான், ‘நிகழ்ச்சிக்கான எல்லா ஏற்பாடுகளும் முறையாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஆர்.எஸ்.எஸ். பற்றி உங்களுக்குத் தெரியும். இது ஒரு கட்டுப்பாடான இயக்கம்” என்றேன். 

‘‘அவசியம் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைக் கவனியுங்கள். ஆனால் ஒன்று,  முஸ்லிம்கள் எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள் என்பதற்காக உங்கள் தரப்பில் எந்த ஒரு எதிர்வினையும் ஆற்ற வேண்டாம். அது பிரச்னையை மேலும் சிக்கலாக்கும்’’ என்றார் டி.எஸ்.பி. 

அவருக்கு நன்றி கூறி, வணக்கம் செலுத்தி, நாங்கள் விடைபெற்றோம். செங்கத்தில் அனைத்து சமுதாய மற்றும் அரசியல் பிரமுகர்களைக் கொண்ட ஒரு வரவேற்புக் குழுவை துரித கதியில் அமைத்தார் வீரபாகுஜி. பொது விழாவுக்குத் தலைமை தாங்கும் வழக்கறிஞர் குலசேகரன் (ஜனதா கட்சி) அவர்களே வரவேற்புக் குழுவுக்கும் தலைவராக இருப்பதற்கு இசைவு தெரிவித்தார். செங்கம் வட்டார இந்திரா காங்கிரஸ் தலைவர் சொக்கலிங்கம், செங்கம் நகர சுமை தூக்குவோர் சங்கத்தின் தலைவரும், இந்து முன்னணி நகரத் தலைவருமான தீர்த்தகிரி ஆகிய இருவரும் துணைத் தலைவர்களாக அங்கம் வகித்தனர். செயலாளராக தாலுகா காரியவாஹ் பன்னீர்செல்வம் இருந்தார். பொருளாளராக பூம்புகார்  துணியகம் எல்.மணி இருந்தார்.

வரவேற்புக் குழு உறுப்பினர்கள்:

1. அதிமுக ஒன்றியச் செயலாளர் ஜெமினி கோபால்

2. இந்திரா காங்கிரஸ் நகரச் செயலாளர் உரக் கடை ராஜாமணி

3. தோக்கவாடி ஹரிஜனத் தலைவர் அட்வகேட் தேவராஜன்

4. சிவன் கோயில் தர்மகர்த்தா சின்ன வெங்கடாசலம்

5. ஜெயின் சமூகப் பிரமுகர் ஜம்புகுமார்

6. இரும்பு வியாபாரி காயம்பட்டு கிருஷ்ண யாதவ்

7. தாழையூத்து வன்னியர் தலைவர் நடராஜ பூபதி

8. செங்கம் நகர திமுக பிரமுகர்  ஜவுளிக்கடை தியாகராஜன்

9. காயம்பட்டு அதிமுக தலைவர் வையாபுரி உடையார்

- இப்படி செல்வாக்கு மிக்க பிரமுகர்களைக் கொண்ட வரவேற்புக் குழு அமைக்கப்பட்டது.

விழாக் குழுவினர் சார்பில் நகர மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கும் வண்ணம் புதிய அழைப்பிதழ்கள் அச்சிடப்பட்டு, விநியோகம் செய்யப்பட்டன. முழு இந்து சமுதாயத்தின் ஒருங்கிணைந்த, ஒரே குடும்பம் போன்ற காட்சியை அழைப்பிதழ் வெளிப்படுத்தியது.

மானனீய ரஜுபையாஜி பொதுவிழா முடிந்த பிறகு விழாத் தலைவர் வழக்கறிஞர் குலசேகரன் அவர்களின் வீட்டில் இரவு உணவு சாப்பிட நான் ஏற்பாடு செய்திருந்தேன். அதை வீரபாகுஜி மாற்றி அமைத்தார். மாலை 3.30 மணியளவில் வரவேற்புக் குழுவினருடன் தேநீர் அருந்தும் நிகழ்ச்சியை குலசேகரன் அவர்களின் வீட்டிலும், இரவு உணவை திமுக பிரமுகர் ஜவுளிக்கடை தியாகராஜன் அவர்களின் வீட்டிலும் வைத்துக் கொள்வது என்று தீர்மானித்தார். அதன்படியே ஏற்பாடுகளும் நடந்து கொண்டிருந்தன.

செங்கம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் டி.எஸ்.பி. கருப்புசாமி தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தை துவங்கியது. ‘ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம் மற்றும் பொதுவிழா வரவேற்புக் குழு’ என்கிற பேனரில் அனைத்து ஜாதி, கட்சிகளைச் சேர்ந்த இந்துப் பிரமுகர்கள் பேச்சுவார்த்தை வட்டமேஜையில் அமர்ந்திருப்பதைப் பார்த்த முஸ்லிம்களுக்கு அதிர்ச்சியும் ஆச்சரியமும் ஏற்பட்டன.

ஆர்.டி.ஓ. அலுவலகத்தின் வாசலில் இரு தரப்பிலும் இளைஞர்கள் கூட்டம் பெரிய எண்ணிக்கையில் குழுமி இருந்தது. டி.எஸ்.பி.க்கு வரவேற்புக் குழுவினரைச் சார்ந்த அனைவரும் அறிமுகப்படுத்தப்பட்டனர். வீரபாகுஜியின் முறை வந்தபோது, எழுந்து நின்று அறிமுகம் செய்து கொண்டார். உடனே முஸ்லிம் தரப்பிலிருந்து எதிர்ப்பு வந்தது. ‘‘இவர் வெளியூர்க்காரர். இது உள்ளூர்ப் பிரச்னை. இவ்வூரைச் சேர்ந்தவர்களாகிய நாங்கள் பேசித் தீர்த்துக்கொள்வோம். இவர் கூட்டத்தில் இருப்பது நியாயமில்லை. தயவு செய்து வெளியே இருக்கச் சொல்லுங்கள்’’ என்று முஸ்லிம்கள் கூறினர்.

டி.எஸ்.பி. கருப்புசாமியும் அந்தக் கூற்றை ஆமோதித்து, ‘‘வீரபாகு சார்! தயவு செய்து நீங்கள் வெளியே இருங்கள்’’ என்றார்.

செங்கம் நகரத்தின் பெரும்பான்மைப் பிரிவான அகமுடைய முதலியார் சமூகத் தலைவரும், நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞரும், ஆர்எஸ்எஸ் வரவேற்புக் குழுவின் தலைவருமான குலசேகரன் அவர்கள் கடுகடுப்பான முகத்துடன் எழுந்து நின்றார். ‘‘இங்கே நாங்கள் அனைவரும் ஜாதி, அரசியல் வேற்றுமைகளை ஓரமாக வைத்துவிட்டு, இந்துக்களாக வாதாட வந்திருக்கிறோம். ஆர்.எஸ்.எஸ். எங்கள் இந்து சமுதாயத்திற்காகப் பாடுபடுகிற இயக்கம். அவர் எங்கள் தலைவர். பிரச்னையே ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் பற்றியது தானே? பேச்சுவார்த்தை நடைபெறும்போது, அதன் தலைவர் இங்கே முக்கியமாக இருப்பது  நியாயமில்லையா? அவரை வெளியேறச் சொல்லி கட்டாயப்படுத்தினால், நாங்கள் அனைவரும் அவருடன் சேர்ந்து வெளியேறி விடுவோம்’’ என்று சிங்கம் போன்று கர்ஜித்தார்.

உடனே டி.எஸ்.பி. கருப்புசாமி அவர்கள், ‘‘ஓகே, ஓகே. வீரபாகு சார் இங்கேயே இருக்கட்டும். விவாதத்தில் பங்கெடுக்காமல், பார்வையாளராக அவர் இருப்பதில் ஆட்சேபனை இல்லை’’ என்றார்.

முஸ்லிம்கள் தரப்பில், ‘‘இந்த ஊரில் இந்துக்களும் முஸ்லிம்களும் மாமன் - மச்சான்களாக ஒன்றுபட்டு இருந்து வருகிறோம். திடீரென்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பு இந்த ஊரில் நுழைந்திருக்கிறது. அணிவகுப்பு, ஊர்வலம் என்ற பெயரில் மாவட்டத்தின் பல ஊர்களிலிருந்து ஆர்.எஸ்.எஸ்.காரர்களை அழைத்து வந்து முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருக்கிறார்கள். எங்கள் வியாபார நிறுவனங்கள் மற்றும் பெண்களின் பாதுகாப்புக் கருதியும் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு போலீசார் தடை விதிக்க வேண்டும்’’ என்று கூறினர்.

அப்போது இந்திரா காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சொக்கலிங்கம், ‘‘இந்த ஊரில் நீங்கள் முஸ்லிம் லீக் கட்சியை வைத்திருக்கிறீர்கள். ரம்ஜான், பக்ரீத் சமயத்தில் ஊர்வலமாகச் செல்கிறீர்கள். அப்படி இருக்கும்போது, இந்துக்களுக்காக ஆர்.எஸ்.எஸ். ஏன் செயல்படக் கூடாது? வீணாகப் பீதியைக் கிளப்ப வேண்டாம். ஆர்.எஸ்.எஸ். கட்டுப்பாடான இயக்கம். அப்படித்தான் நான் கேள்விப்பட்டிருக்கிறேன்’’ என்றார்.

முஸ்லிம்கள் தரப்பில், ‘‘அப்படியென்றால் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் இந்துக்கள் வசிக்கும் பகுதிகள், தெரு வழியாகச் செல்லட்டும். நாங்கள் வசிக்கும் தெருக்களுக்கு வர வேண்டிய அவசியமில்லை’’ என்றனர்.

வழக்கறிஞர் குலசேகரன்

உடனே வழக்கறிஞர் குலசேகரன் ஆவேசமாக எழுந்து நின்று, ‘‘வரவேற்புக் குழுவுக்குத் தலைவராக மட்டுமல்ல, பொதுக்கூட்டத்திற்கும் நான்தான் தலைமை ஏற்கிறேன். உங்களுக்கு எந்தப் பிரச்னையும் வராது என்று உறுதியளிக்கிறேன். நீங்கள் பிடிவாதம் காட்டினால், ஒரு காரியம் செய்வோம். இந்துக்கள் வசிக்கும் பகுதிக்குள் முஸ்லிம்களின் நிகழ்ச்சியோ, ஊர்வலமோ, ஏன், தள்ளுவண்டி வியாபாரிகள்கூட வரக் கூடாது. அதேபோல, முஸ்லிம்கள் வசிக்கும் பகுதிக்குள் இந்துக்கள் யாரும் வர மாட்டோம். ஒப்பந்தம் போட்டுக் கொள்ளலாமா, சம்மதமா?’’ என்று சவால் விடுக்கும் தொனியில் பேசினார். 

இப்படியொரு சவாலான பதிலை முஸ்லிம்கள் எதிர்பார்க்கவில்லை. அவர்கள் வாயடைத்துப் போயினர்; நிலைகுலைந்து காணப்பட்டனர். சில நிமிடங்கள் அப்படியே அமைதி நிலவியது.

‘‘எங்கள் மசூதிக்கு முன்னால் மேளதாளம் வாசிக்கக் கூடாது’’ என்றனர் முஸ்லிம்கள்.

அப்போது தலையிட்ட டி.எஸ்.பி. கருப்புசாமி அவர்கள், ‘‘நான் நெல்லை, குமரி மாவட்டங்களில் பணியாற்றி இருக்கிறேன். ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தைப் பார்த்திருக்கிறேன். அரசியல் கட்சிகளின் ஊர்வலம் போலல்லாமல், ராணுவம் போன்ற கட்டுப்பாட்டுடன், கோஷங்கள் இல்லாமல் செல்வார்கள். எங்கள் போலீஸ் March-past  செய்வது போன்றது. வாத்தியங்கள் முழங்க, பேண்டு அடித்துக்கொண்டு சென்றால்தான், Left – Right, Left – Right என்று மிடுக்கான நடை போட்டுச் செல்ல முடியும். உங்கள் மத நம்பிக்கையைக் காரணம் காட்டி, தயவு செய்து, அடுத்தவரின் பொது உரிமையை (Public Rights) பறிக்க வேண்டாம். உங்களுக்குப் பிடிக்கவில்லையென்றால், மசூதியைத் தாளிட்டுவிட்டு, வீட்டில் இருந்து கொள்ளுங்கள். குறிப்பிட்ட நாளில் காவல் துறை அனுமதியுடன் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடக்கும். முஸ்லிம்களின் பாதுகாப்புக்கு காவல் துறை பொறுப்பேற்றுக் கொள்கிறது. டி.எஸ்.பி. ஆகிய நான் உத்தரவாதம் அளிக்கின்றேன். சமாதானக் கூட்டம் இத்துடன் நிறைவு பெறுகிறது’’ என்றார். 

கூட்டம் கலைந்து அனைவரும் வெளியேறினர்.

கோபி ஜி


டிசம்பர் 3ஆம் தேதி மானனீய ரஜுபையாஜி நிகழ்ச்சி பாண்டிச்சேரியில் இருந்தது. டிசம்பர் 4ஆம் தேதி ரஜுபையாவுடன்  சங்க பிரசாரக் (அமரத்துவம் ஆகிவிட்ட) கோபி உடன் வந்தார். திருவண்ணாமலை வழியாக கார் செங்கம் வந்து சேர்ந்தது. அன்று விடியற்காலை முதலே செங்கம் நகரம் விழாக்கோலம் பூண்டு தயாராகியது. வீட்டில் உள்ள தாய்மார்கள், நகரப் பெரியோர்கள், வியாபாரிகள், இளைஞர்கள் என எல்லோரும் தத்தம் பகுதிகளில் அலங்கார வளைவுகள் அமைப்பது, தோரணங்கள் கட்டுவது என்று நகரை அழகுபடுத்தும் பணிகளில் தங்களை உற்சாகமாக ஈடுபடுத்திக்கொண்டனர். அநேகமாக பதஞ்சலன் செல்லும் அனைத்துப் பாதைகளிலும் உள்ள வீடுகள் மற்றும் கடைகளுக்கு முன்பாக நீர் தெளித்து கோலமிட்டு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. 

அன்று மாலை 3 மணியளவில் வரவேற்புக் குழுவினரை மானனீய ரஜுபையாஜி சந்திக்கும் தேநீர் விருந்து  நிகழ்ச்சி வழக்கறிஞர் குலசேகரன் வீட்டில் நடந்தது. தேநீர் அருந்தியபடியே, குலசேகரன் அவர்கள், நகரில் ஏற்பட்ட பிரச்னைகள் குறித்தும் டிஎஸ்பி நடத்திய அமைதிப் பேச்சுவார்த்தைக் கூட்டம் பற்றியும், அங்கு நடந்த வாதப் பிரதிவாதங்களைப் பற்றியும் ரஜுபையா அவர்களுக்கு எடுத்துரைத்தார். அகமகிழ்ந்து போன ரஜுபையா அவர்கள், செங்கம் நகர மக்களின் திடமான ஹிந்து சிந்தனை மற்றும் ஆர்எஸ்எஸ் மீது வைத்துள்ள அபார நம்பிக்கைக்கு நன்றி கூறினார். 

அதன்பிறகு ரஜுபையாஜியுடன் விழாக் குழுவினர் அனைவரும் திமுக பிரமுகர் தியாகராஜன் அவர்களின் ஜவுளிக்கடை மாடியில் இருந்த நீண்ட பால்கனியில் அமர்ந்தவாறு பதஞ்சலனைக் கண்டுகளிக்க புறப்பட்டுச் சென்றனர்.

பதஞ்சலனில் கணவேஷ்தாரி (சங்கத்தின் சீருடை அணிந்தோர்) ஸ்வயம்சேவகர்கள் எண்ணிக்கை 650. வந்தவாசி தாலுகாவிலிருந்து மட்டும் 35௦ பேர் வந்திருந்தனர். அப்போது வந்தவாசி தாலுகாவில் 5௦-க்கு மேற்பட்ட ஷாகாக்கள் இருந்தன. 

பதஞ்சலன் புறப்படும் இடமான தோக்கவாடி திரெளபதி அம்மன் கோயில் திடலில் 2,௦௦௦க்கும் அதிகமான பொதுமக்கள் திரண்டிருந்தனர். அவர்களிடையே ஹிந்துப் பெருமித உணர்வும் உற்சாகமும் நிரம்பி வழிந்ததைக் காண முடிந்தது. ‘‘ஆர்.எஸ்.எஸ். வாழ்க! இந்து மதம் வாழ்க!  இந்து என்று சொல்லுவோம், தலை நிமிர்ந்து செல்லுவோம்!’’ போன்ற கோஷங்களை மக்கள் ஆங்காங்கே முழங்கிய வண்ணம் நின்றிருந்தனர். 

அன்பர்களே! அன்றைய தினத்தில் செங்கம் நகரத்தின் வரலாற்றில் புதியதொரு அத்தியாயம் துவங்கியது.



பதஞ்சலன் புறப்பட்டது. சீருடை அணிவகுப்பின் கடைசி கணத்திற்குப் பின், பொதுமக்களும் அணிவகுத்து நடைபோட ஆரம்பித்தனர். சிக்ஷகர்கள் தடுத்து நிறுத்தினர்கள். இது ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம்; மற்றவர்கள் யாரும் பின்தொடரக் கூடாது’’ என்றனர் சிக்ஷகர்கள். ‘‘ ஐயா! இது ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் மட்டுமல்ல; செங்கம் ஹிந்துக்களின் தன்மான ஊர்வலம். நாங்களும் ஊர்வலத்தின் பின்னே நடந்து வருவோம்.’’ என்று பொதுமக்கள் பிடிவாதம் பிடித்தனர். 

அந்தச் சமயத்தில் வீரபாகுஜி  ஓடி வந்தார். ‘‘என் பிரசாரக் வாழ்க்கையில் இது போன்றதொரு எழுச்சியை நான் பார்த்ததே இல்லை. தடுக்க வேண்டாம். அவர்களையும் வரிசைக்கு மூன்று நபர்களாக நடைபோட்டுச் செல்ல அனுமதியுங்கள்’’ என்றார் அவர்.

சங்க ஸ்வயம்சேவகர்களின் சீருடை அணிவகுப்பைத் தொடர்ந்து, 2,௦௦௦ பொதுமக்கள் தலைநிமிர்ந்து, வீறுநடையிட்டு உடன் சென்றனர். அதனால் ஊர்வலத்தின் நீளம் பிரமாண்டமானதாக அமைந்தது. 

பேண்ட் வாத்தியம் முழங்க பெரிய மசூதி வழியாக அணிவகுப்பு ஊர்வலம் செல்லும்போது, மக்கள் புளகாங்கிதம் அடைந்தனர். பலரின் கண்களில் ஆனந்தக் கண்ணீர். அழைப்பிதழில் அச்சிட்டபடியே, குறிப்பிட்ட இடத்தை, குறிப்பிட்ட நேரத்தில் அந்த அணிவகுப்பு ஊர்வலம் கடந்து சென்றது. மக்கள் மெய்சிலிர்த்தனர்.

தாலுகா காரியவாஹ் பன்னீர்செல்வம், த்வஜப் பிரமுக்காக, பகவாக் கொடியைக் கையிலேந்தியபடி கம்பீரமாக நடையிட்டுச் சென்றார். முடி திருத்தும் சமுதாயத்தைச் சேர்ந்த சாதாரணக் குடிமகன் – ஊர்வலத்தின் மையத்தில் – காவிக்கொடியை ஏந்தியபடி பிரதானமானவராகச் சென்றதைப் பார்த்த மக்கள் ‘ஓஹோ, ஓஹோ’ என்று ஆர்ப்பரித்தனர். தெருவெங்கும் கூடியிருந்த மக்கள் காவிக் கொடிக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். மானனீய ரஜுபையாவுடன் வரவேற்புக் குழுவினர் பால்கனியில் நின்றவாறு ஊர்வலத்தைக் கண்டு களித்தனர். பதஞ்சஞ்சலன் இறுதியாக சிவன் கோயிலுக்கு அருகிலுள்ள அறிஞர் அண்ணா கலையரங்கத் திடலை அடைந்தது.

பொதுவிழா துவங்கியது. ஸ்வயம்சேவகர்கள் உடற்பயிற்சிகளைச் செய்துகாட்டினர். திருவண்ணாமலை நகர் காரியவாஹ் சோனாசலம் ராஜேந்திரன் அவர்களின் அறிமுக உரை முடிந்த பின், விழாக்குழுத் தலைவர் வழக்கறிஞர் குலசேகரன் பேசினார். அவர் பேசும்பொழுது, ‘‘இன்றைய தினம் நாங்கள் அனைவரும் மகிழ்ச்சி வெள்ளத்தில் நீந்திக் கொண்டிருக்கிறோம். செங்கம் வரலாற்றில் இது ஒரு பொன்னாள்; ஹிந்துக்கள் ஒருங்கிணைந்த திருநாள். வேற்றுமையால் ஒடுங்கி இருந்த சமுதாயத்தை, சுயநலத்தால் வீழ்ந்து கிடந்த சமுதாயத்தை, எழுச்சிபெறச் செய்த ஆர்.எஸ்.எஸ். இயக்கத்திற்கு நாங்கள் நன்றிக்கடன் பட்டுள்ளோம். இந்த ஒற்றுமைக் காட்சியை, ஹிந்து உணர்வை என்றைக்கும் பாதுகாப்போம்’’ என்று வீரஉரை  நிகழ்த்தினார்.

மானனீய ரஜுபையா அவர்கள் ‘‘கடந்த சில தினங்களாக தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்து கொண்டிருக்கிறேன். நாளை வேலூர் நிகழ்ச்சியுடன் எனது பயணம் நிறைவுபெறுகிறது. நான் பங்கேற்ற அனைத்து நிகழ்ச்சிகளிலும் இன்று செங்கத்தில் நடைபெறும் நிகழ்ச்சி சிகரம் போன்றது. தமிழ்நாடு மாறிக்கொண்டு இருக்கிறது; ஹிந்துக்கள் எழுச்சி பெற்றுக்கொண்டு இருக்கிறார்கள் என்பதற்கு இன்று நடைபெற்ற பதஞ்சஞ்சலனும் பொதுவிழாவும் சான்றாகும்....’’ என்று 40 நிமிடங்கள் மேடையில் நின்றபடியே பேசினார். அவரது ஆங்கில உரையை அன்றைய பிராந்த பிரசாரக் (மாநில அமைப்பாளர்) ஸ்ரீ வி.சண்முகநாதன்ஜி மொழிபெயர்த்தார். 

பொதுவிழா முடிந்து நடைபெற்ற காரியகர்த்தர்கள் பைட்டக்கில், சண்முகநாதன்ஜி ‘‘ சர் காரியாவாஹ் ரஜுபையாஜியுடன் சுற்றுப்பயணத்தில் தொடர்ந்து நான் பயணித்து வருகிறேன். எல்லா ஊர்களிலும் அவரது உடல்நிலையைக் கருத்தில்கொண்டு மேடையில் அமர்ந்தபடியே சொற்பொழிவு ஆற்ற ஏற்பாடுகள் இருந்தன. ஆனால் இன்று அவர் தனது உடல் உபாதைகளை மறந்து, மேடையில் நின்றபடியே பேசினார். செங்கம் நிகழ்ச்சி அவரது உள்ளத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது’’ என்று கூறினார்.

திடலுக்கு அருகிலுள்ள அரிசி ஆலை ஒன்றில்தான் காரியகர்த்தர்கள் பைட்டக் நடந்தது. அது உள்ளூர் கம்யூனிஸ்ட் கட்சிப் பிரமுகர் ஒருவரின் உறவினருக்குச் சொந்தமான அரிசி ஆலை. பைட்டக் நடைபெற அனுமதியையும் அந்த கம்யூனிஸ்ட் கட்சிப் பிரமுகர்தான் பெற்றுத் தந்தார்.

தானிப்பாடியில் போஸ்ட் மாஸ்டராகப் பணிபுரிந்தவர் சஞ்சீவி ராவ். அவர் ஜில்லா பெளதிக் பிரமுக். அவரின் அன்பான தொடர்பினால் சங்கத்துக்கு அறிமுகமானவர்  விமலநாதன். சொந்தமாக சவுண்ட் சர்வீஸ் வைத்திருந்தார். மேடை அலங்காரம், மின்விளக்கு அலங்காரம், ஒலிபெருக்கி ஏற்பாடுகளை அவர் மிகவும் அற்புதமாகச் செய்திருந்தார். அவரது மின்விளக்கு அலங்காரத்தில் முழு மைதானமும் ஜொலித்தது. பேசிய பணத்தைத் தந்தபோது, பெற்றுக்கொள்ள மறுத்துவிட்டார். ‘‘எங்கள் செங்கம் மக்களை தலைநிமிரச் செய்த நிகழ்ச்சி இது. இது என் பாக்கியம்’’ என்றார் விமலநாதன். 

அதேபோன்று, டாக்டர்ஜி, குருஜி படங்களை பெரிய தேர் போன்று அலங்காரம் செய்திருந்தார் வழக்கறிஞர் சத்யகுமார். அவரும் பணம் வாங்க மறுத்துவிட்டார். அனைத்து ஸ்வயம்சேவகர்களுக்கும் இரவு உணவு ஏற்பாட்டை தன் சொந்தச் செலவில் செய்திருந்தார் தீர்த்தகிரி. இவர்களின் அன்பும் உழைப்பும், இன்றும் என் நினைவில் பசுமையாக உள்ளன.

திட்டமிட்டப்படியே திமுக பிரமுகர் ‘சரவணா ஃபேன்ஸி ஸ்டோர்’  தியாகராஜன் அவர்களின் வீட்டில் மானனீய ரஜுபையா அவர்களுக்கு இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தியாகராஜனும் அவரது மனைவியும் சங்க அதிகாரிகளுக்கு அன்புடன் உணவு பரிமாறினர். 

இரண்டு நாட்கள் கழிந்தபின்பு, ஒரு பிரச்னை ஏற்பட்டது. ஆர்.எஸ்.எஸ். தலைவருக்கு விருந்து உபசாரம் செய்த தியாகராஜன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று திமுகவில் சிலர் குரல் எழுப்பினர். திமுக ஒன்றியச் செயலாளர் தண்டராம்பட்டு ராமசாமி அவர்கள், திமுக நிர்வாகிகள் சிலருடன் தியாகராஜன் அவர்களின் ஜவுளிக்கடைக்குச் சென்று ஆட்சேபனை தெரிவித்தனர். அதற்கு,  ‘‘நான் முதலில் ஹிந்து. பிறகு தான் திமுக. ஆர்.எஸ்.எஸ். தலைவருக்கு என் வீட்டில் உணவளித்ததை பாக்கியமாகவும் பெருமையாகவும் கருதுகிறேன். இது தவறு என்றால் என்னை திமுகவில் இருந்து நீக்கிக் கொள்ளுங்கள். இதற்காக நான் மன்னிப்புக் கோர மாட்டேன்’’ என்றார் தியாகராஜன்.

அதேபோன்று, நிகழ்ச்சி முழுவதையும் போட்டோ எடுத்தவர் மினர்வா ஸ்டுடியோ ராமமூர்த்தி. அவரும் திமுகவைச் சேர்ந்தவர்தான். போட்டோ ஆல்பத்திற்கான கட்டணத்தைச் செலுத்த கார்யகர்த்தர்கள் சென்றபொழுது, ‘‘நான் திமுகவில் இருந்தாலும், எனக்கும் ஹிந்து உணர்வு இருக்கிறது’’ என்று கூறி கட்டணத்தை வாங்க மறுத்துவிட்டார்.

அன்பர்களே! இதுவரை, செங்கத்தில் ஷாகா ஆரம்பித்த கதை -  கார்யகர்த்தர்கள் உருவாக்கம் - வெற்றிகரமான ஷாகா செயல்முறை  - மானனீய ரஜுபையாஜி நிகழ்ச்சி - அதனால் விளைந்த ஹிந்து எழுச்சி - அமரர் வீரபாகுஜியின் சீரிய வழிகாட்டுதல்கள் என செங்கம் சங்க வரலாற்றை மூன்று பாகங்களாக உங்களிடம் முன்வைத்தேன். 

கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் நிலவிய அரசியல், சமூகச் சூழ்நிலையில், இந்துக்களை ஜாதி - கட்சி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு ஒருங்கிணைத்தது அவ்வளவு சுலபமான விஷயமல்ல. செங்கம் நகர மக்களின் மனதில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை தங்களுடையதாக எண்ண, ‘Own’ பண்ண வைத்தார்; சங்க நிகழ்ச்சி வெற்றிகரமாக நடைபெற, வாதாடவும் போராடவும் உள்ளூர் மக்களையே முன்வரச் செய்தார் வீரபாகுஜி.

இது எதிர்கால ஸ்வயம்சேவகர்களுக்கு ஊக்கம் அளிக்கும் நிலையான ஆவணமாக இருக்கும். 

*****************************

அன்பர்களே!

இன்று வேலூர், திருவண்ணாமலை, வந்தவாசி, ராணிப்பேட்டை என சங்க மாவட்டங்கள் ஐந்தாக உள்ளன. இவை அனைத்தும் அன்று (வட ஆர்க்காடு) வேலூர் மாவட்டம் என்று ஒரே மாவட்டமாக இருந்தது. அந்தச் சமயத்தில், அதாவது 1970களின் கடைசிக் காலகட்டம் வரை, மாவட்டத்தில் பெருமைப்பட்டுக்கொள்ளும் அளவுக்கு இந்து கல்வி நிறுவனங்கள் - பள்ளிக்கூடங்கள் இல்லை. இந்து சிறார்கள், சிறுமியர்கள் கிறிஸ்தவ, அல்லது இஸ்லாமியக் கல்வி நிறுவனங்களில்தான் படிக்கும் நிலை இருந்தது.

கண் பார்வைக்கு எட்டிய தூரத்தில் ஓரிரு இந்து கல்வி நிறுவனங்கள் இருந்தன. அவை யாவும், அரசிடம் மானியம் பெறுகின்ற, ‘செக்யூலர்’ கருத்துகளைப் போதிக்கின்ற பாடசாலைகளாகத்தான் இருந்தன. வலிமையான கலாசார தேசியத்தையும் திடமான இந்து சிந்தனையையும் வளர்க்கும் கலாசாலைகளாக அவை இயங்கவில்லை. 

அதனால் என்ன குடிமுழுகிப் போயிவிட்டது? மொழி, கணிதம், விஞ்ஞானம், சரித்திரம், புவியியல் – இவைகளைப் படிப்பதற்காகத் தானே நமது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புகிறோம்? என்று சிலர் கேள்வி எழுப்பலாம்.

1979-இல் குடியாத்தம் நகரில் நடந்த சம்பவம்- அதனால் இந்துக் குடும்பங்களில் ஏற்பட்ட மன உளைச்சல் – பாதிக்கப்பட்டவர்கள் வழி தேடி ஆர்.எஸ்.எஸ். காரியாலயத்தை அணுகியது – அமரர் வீரபாகுஜியின் சீரிய வழிகாட்டுதல்-  அதற்கான தீர்வாக விதையை ஊன்றியது மட்டுமல்ல, அதனை ஓர் ஆலமரமாக வளர்த்த பெருமை – என இந்து, தேசிய கல்வி நிறுவனங்கள் உருவாகிய வரலாற்றுச் சுவடுகளை அடுத்த சிரத்தாஞ்சலி புஷ்பத்தில் உங்கள் முன்வைக்கிறேன்.

வணக்கம்!

---------------------------------------------------------

No comments:

Post a Comment