Friday

செங்கம் மண்ணில் சங்கத்தின் பகவாக் கொடி பறந்த கதை

 

1980-களில் எடுக்கப்பட்ட 
வீரபாகுஜியின் நிழற்படம்.


சிரத்தாஞ்சலி புஷ்பம் -8

 பாகம்-1 / இது இறைவனின் காரியம்!

 *****************************

1980 ஜனவரி - பிப்ரவரி மாதங்களுக்கு இடைப்பட்ட காலம் என்று நினைக்கிறேன். அப்போது செங்கம் தாலுகாவில் இறையூர் எனும் கிராமத்தில் மட்டும்தான் ஷாகா இருந்தது. (1979-ஆம் வருடம் ஜனஜாகரண்துக்ளக் இதழில் சூரிஜியின் பேட்டிசங்க ஆதரவு கடிதங்கள்அதன் மூலம் இறையூரில் ஷாகா துவங்கப்பட்டது.) தாலுகா கேந்திரமான செங்கத்தில் ஷாகா இல்லை; சங்கத் தொடர்பு ஏதும் இல்லை. 

ஒருநாள், ஷாகா சுற்றுப்பயணமாக திருவண்ணாமலைக்கு வீரபாகுஜி வந்திருந்தார். வருகின்ற பனிக்கால முகாமிற்குள் மாவட்டத்தின் ஷாகா இலக்கை அடைவது பற்றி எங்கள் இருவருக்குமிடையே பேச்சு இருந்தது. அந்த ஆண்டு, தாலுகா கேந்திரங்களில் ஷாகாக்கள் நடைபெறுவது கட்டாயம் என்பது பிராந்த அதிகாரிகளின் குறிப்பு. வீரபாகுஜிக்கு அது குறித்த கவலை இருந்ததை அவர் பேச்சு வெளிப்படுத்தியது. 

நாங்கள் இருவரும் அதுகுறித்துப் பேசிக்கொண்டே தேரடி வீதியில் உள்ள சங்க ஆதரவாளர் உபாத்தியாயா அவர்களின் உடுப்பி ஓட்டலுக்கு காபி அருந்தச் சென்றோம். வீரபாகுஜி ஒரு யோசனை சொன்னார். 

‘‘நாளையும் நான் திருவண்ணாமலையில் இருக்கின்றேன். நாம் அதிரடியாக ஒரு முயற்சி செய்து பார்ப்போம். நம் செயல் ஊக்கத்திற்கு ஒரு பரிசோதனையாகவே எடுத்துக் கொள்வோம். நாளை காலை எட்டு மணிக்குப் புறப்படும் ராமஜெயம் பஸ்ஸில் நீங்கள் செங்கத்திற்கு புறப்பட்டுச் செல்லுங்கள். கையுடன் டாக்டர்ஜி, குருஜி படங்கள், த்வஜம், த்வஜக் கம்பி ஆகியவற்றையும் உடன் எடுத்துச் செல்லுங்கள்… 

காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செங்கம் நகரில் சுற்றிச் சுற்றி வாருங்கள். கண்ணில் படும் மாணவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள் யாராக இருந்தாலும் அவர்களிடம், ‘இன்று மாலை 6 மணிக்கு குறிப்பிட்ட ஒரு இடத்தில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் துவக்க விழா உள்ளதாக அறிவிப்பு செய்து, அழையுங்கள். மாலை 6 மணிக்கு எத்தனை பேர் வருகின்றார்கள் என்று பார்ப்போம். 

நான் மாலை 4 மணிக்கு திருவண்ணாமலையில் இருந்து புறப்படும் ராமஜெயம் பஸ்ஸில் செங்கம் வருகிறேன். அது மாலை 5 மணிக்கு செங்கம் வந்து சேரும். நீங்கள் பஸ் ஸ்டாண்டிற்கு வந்து அழைத்துச் செல்லுங்கள். முதலில் நிகழ்ச்சி நடத்துவதற்காக ஓர் இடம் - அது கோயிலோ, மண்டபமோ, மைதானமோ, சத்திரமோ ஏதாவது ஓர் இடத்தை முடிவு செய்துவிட்டு, பிறகு வேலையை ஆரம்பியுங்கள். நான் திருவண்ணாமலையில் பெரியவர்கள் சிலரை சம்பர்க செய்துவிட்டு, அங்கு வருகிறேன்’’ என்றார். 

நான், ‘‘ஜி! ஊர் பேர் தெரியாத இடத்துக்கு தனியாக நான் மட்டும் சென்று...... முடியக் கூடிய காரியமா?’’ என்றேன். 

‘‘ஏன் முடியாது! ஒற்றை ஆளாக நின்றுகொண்டு, கோயில் முன்போ, ஆஸ்பத்திரி முன்போ, பஸ் ஸ்டாண்டிலோ கிறிஸ்துவப் பாதிரி, ‘ஏசு அழைக்கிறார்என்று மதப் பிரசாரம் செய்வதைப் பார்த்திருக்கிறோம் அல்லவா? அவன் செய்யும்போது, நம்மால் ஏன் செய்ய முடியாது? நாளை இதை ஒரு சவாலாகவே நாம் செய்து பார்ப்போம்’’ என்றார். 

மறுநாள் காலை சிற்றுண்டி முடித்த பின், ஒரு கைப்பையில் டாக்டர்ஜி, குருஜி படங்கள், த்வஜம் (காவிக் கொடி), த்வஜக் கம்பி ஆகியவற்றை எடுத்துக் கொண்டேன். காரியாலயத்தில் இருந்து காலாறப் பேசிக் கொண்டே வீரபாகுஜி என்னுடன் பஸ் ஸ்டாண்டு வரை வந்தார். எட்டு மணிக்குப் புறப்படும் ராமஜெயம் பஸ்ஸில் (தற்போது வேலூரில் வி..டி. தலைவராக இருக்கும் திரு. ஜி.விஸ்வநாதன் அவர்கள்தான் அப்போது ராமஜெயம் பஸ் சர்வீஸ் குழுமத்தின் தலைவர். ‘ராமஜெயம் பஸ் சர்வீஸின் அனைத்துத் தடங்களிலும் எப்போது வேண்டுமானாலும் இலவசமாகப் பயணிக்க அனுமதிக்கவும்என்று எழுதி அவர் கையொப்பமிட்டுக் கொடுத்த இலவச பஸ் பாஸ் எங்கள் இருவரிடமும் இருந்தது. அப்போதிலிருந்தே அவர் சங்கத்தின் ஆதரவாளர்) ஏற்றிவிட்டு, கையசைத்து, கட்டைவிரலை உயர்த்தியபடிக் காண்பித்து, வழியனுப்பி வைத்தார். 

நான் அண்ணாமலையை பார்த்தபடியே, ‘‘ஐயனே! சங்கப் பணியை  தெய்வப் பணி என்பார்கள். உன் காரியமாகத்தான் சென்று கொண்டிருக்கிறேன். துணை இருப்பாய்’’ என்று மலையைப் பார்த்து கைகூப்பி வணங்கியபடி பஸ்ஸில் பயணம் செய்தேன். 

காலை 9 மணிக்கு செங்கம் பஸ் நிலையத்தில் இறங்கினேன். சிறிது நேரம் ஓரமாக அப்படியே நின்றேன். எந்தத் திசையில் செல்வது? யாரைப் பார்ப்பது? வேலையை எப்படி ஆரம்பிப்பது? என்ற சிந்தனையில் அக்கம்பக்கம் நோட்டமிட்டேன். பஸ் நிலையத்திற்கு நேர் எதிரில் முருகவிலாஸ் ஓட்டல் இருந்தது. அதற்குப் பக்கத்தில் பட்டாணிக் கடை தென்பட்டது. 

அந்தக் கடைக்காரரிடம் பேச்சுக் கொடுத்துப் பார்ப்போமே என்ற எண்ணத்தில், கடைக்குச் சென்று, ‘ஐயா, 50 காசுக்கு பட்டாணி தாருங்கள்என்றேன். அவர் பொட்டலம் கட்டும்போது, சுவரில் மாட்டப்பட்டிருந்த படம் என்னை ஆச்சர்யத்தில் மூழ்கியது. 

அதைக் கண்ட கடைக்காரர், ‘‘தம்பி, அந்தப் படத்தில் உள்ளவரை உங்களுக்குத் தெரியுமா?’’ என்றார்.  நன்றாகத் தெரியும். அவர் வீரசாவர்க்கர்’’ என்றேன். ‘‘எல்லோரும் அந்தப் படத்தில் இருப்பவரை என் தாத்தாவா, முப்பாட்டனா என்றுதான் கேட்பார்கள். நீங்கள்தான் பார்த்த மாத்திரத்தில் கரெக்டாகச் சொல்லி விட்டீர்கள். ஆமாம்! நீங்கள் யார்?’’ என்றார் கடைக்காரர். 

‘‘நான் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைச் சேர்ந்த முழுநேர ஊழியர். இன்று மாலை எங்கள் மாவட்ட அமைப்பாளர் செங்கத்திற்கு வருகை தர உள்ளார். இன்று ஆர்.எஸ்.எஸ். துவக்க விழாவில் அவர் சொற்பொழிவு இருக்கிறது. மீட்டிங் ஏற்பாட்டிற்காக வந்துள்ளேன்’’ என்றேன் நான். 

‘‘நீங்கள் ஆர்.எஸ்.எஸ்.காரரா! தயவு செய்து கடைக்குள்ளே வாருங்கள்’’ என்று கூறி அழைத்துச் சென்று, நான் உட்கார ஸ்டூல் ஒன்றைக் கொடுத்தார். “ஐயா! நான் உங்கள் பெயரைத் தெரிந்துகொள்ளலாமா?” என்றேன். அவர், ‘‘தம்பி! என் பெயர் கோவிந்தசாமி நாயுடு. நான் பழைய இந்து மகா சபாக்காரன். திருவண்ணாமலைக்கு வீரசாவர்க்கர் வந்தார்; பெரிய கூட்டத்தில் பேசினார். அப்போது எடுத்த படம் இதுஎன்றார். 

நான், ‘‘பக்கத்தில் திமுக தலைவர் அண்ணாதுரை படமும் இருக்கிறதே?’’ என்றேன். ‘‘நான் அரசியலில் திமுகவில் இருக்கிறேன். பின்னாட்களில் அண்ணாவின் தமிழ்ப் பேச்சு என்னைக் கவர்ந்தது. திமுகவில் மெம்பர் ஆனேன். ஆனாலும் நான் ஒரு இந்து. சரி, நீங்கள் இவ்வூரில் டெய்லர் பழனி என்பவரைப் போய் பாருங்கள். உங்கள் மீட்டிங்கிற்கு அவர் உதவி செய்வார்என்று சொல்லிவிட்டு, கடைப்பையனை அழைத்து, என்னை டெய்லர் பழனியிடம் அழைத்துச் செல்லுமாறு கூறினார். 

செங்கம், பெருமாள் கோயில் தெருவில் உள்ள எஸ்.எம்.டெய்லர்ஸ் கடைக்கு பையன் அழைத்துச் சென்றான். கடை மும்முரமாக இருந்தது. கடையின் சுவற்றில் மாட்டப்பட்டிருந்த படத்தைப் பார்த்ததும் எனக்கு தூக்கி வாரிப்போட்டது. தாடி வைத்த தி.. தலைவர் பெரியாரின் படம் அது. 

அந்தப் பையன் டெய்லர் பழனியிடம் கிசுகிசுத்தான். அவர் என்னைப் பார்த்து, “வணக்கம், உட்காருங்கள்என்றார். பத்து நிமிடம் கழித்து, கடையின் பக்கத்தில் உள்ள அறைக்கு அழைத்துச் சென்றார். ‘‘சார்! நீங்கள் ஆர்.எஸ்.எஸ்.காரரா? எங்கள் ஊரில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை ஆரம்பிக்க வேண்டுமென்று ரொம்ப நாளாக யோசித்து வருகிறேன். ஆனால், யாரை, எங்கு, எப்படித் தொடர்பு கொள்வது என்று தெரியவில்லை. இது இந்துக்களுக்காக பாடுபடும் ரகசிய இயக்கம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்’’ என்றார். 

நான், ‘‘இது ரகசிய இயக்கம் இல்லை. வெளிப்படையாகச் செயல்படும் அமைப்பு. இந்து ஒற்றுமைக்காகப் பாடுபடும் சங்கமாகும். இன்று இந்த ஊரில் ஆர்.எஸ்.எஸ். கிளை துவக்குவதற்காக எங்கள் மாவட்ட அமைப்பாளர் வீரபாகுஜி மாலையில் வருகை தர உள்ளார். இளைஞர்கள் சிலரைச் சந்தித்து, கூட்டத்திற்கு ஏற்பாடு செய்வதற்காக நான் வந்திருக்கிறேன்’’ என்றேன். 

‘‘கவலை வேண்டாம்! நான் ஏற்பாடு செய்கிறேன்’’ என்றார் டெய்லர் பழனி. 

அதன்பின் தேனீர் அருந்தியபடி பேசினோம். ‘‘பெரியார் படம் மாட்டியிருக்கிறீர்களே! நீங்கள் தி..வா?’’ என்றேன் நான். ‘‘ஆமாம்! நான் இந்த ஊர் தி.. செயலாளர். இந்த ஊரில் முஸ்லிம்கள் செய்யும் அழிச்சாட்டியத்திற்கு அளவே இல்லை. மூன்று மாதங்களுக்கு முன்பு ஒரு பெண் தொடர்பான விவகாரத்தில் முஸ்லிம்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். இந்துக்களின் கடைகளுக்கு தீ வைத்து நாசம் செய்தனர். பெரிய அளவில் இந்துக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது. அவர்களிடம் இருக்கும் ஒற்றுமை நம்மிடம் இல்லை. அதன் பிறகு இந்து இளைஞர் மன்றம் என்ற அமைப்பைத் தொடங்கி, நான் செயலாளராகவும், தீர்த்தகிரி என்பவர் தலைவராகவும் உள்ளோம். இந்துக்களின் இன்றைய நிலைமை இப்படியே தொடருமேயானால் வருங்காலத்தில் இந்து மதமும் இருக்காது; தமிழ்ச் சமுதாயமும் இருக்காது. இதை உணர்ந்துதான் இந்து இளைஞர்களை ஒன்றுபடுத்த மன்றத்தைத் துவக்கி உள்ளோம்!’’ என்றார். 

உடனே, மன்றத்தின் நோட்டுப்புத்தகத்தை எடுத்து, ‘இந்து இளைஞர் மன்றத்தின் அவசரக் கூட்டம் இன்று மாலை 7 மணிக்கு வழக்கமாக நாம் சந்திக்கும் பெருமாள் கோயிலில் ஏற்பாடாகி இருக்கிறது. ஆர்.எஸ்.எஸ். எனும் இந்து மத இயக்கத்தின் தலைவர் திரு. .வீரபாகு அவர்களின் சொற்பொழிவு இருக்கிறது. மன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டுகிறேன்’’ என்று எழுதி, கடையில் ஊழியம் செய்யும் பையனிடம் கொடுத்துமன்ற உறுப்பினர்கள் அனைவரிடமும் காண்பித்து, கையொப்பம் வாங்கி வருமாறு அனுப்பினார். 

எனக்கு மதிய உணவு வந்தது. செய்தி அனுப்பிய பிறகு மன்றத்தின் இளைஞர்கள் சிலர் ஆர்வத்துடன் நான் இருந்த அறைக்கு வந்தனர். அவர்களுடன் நான் அறிமுகம் செய்து கொண்டேன். பிறகு, மதிய உணவு முடித்து, அந்த அறையிலிருந்த பென்ச் ஒன்றின் மீது அயர்ந்து படுத்து, சற்றே ஓய்வெடுத்தேன். 

மாலை நான்கு மணி இருக்கும். பெருமாள் கோயிலுக்குச் சென்று நிகழ்ச்சி ஏற்பாடுகள் செய்ய, இளைஞர்கள் இருவரை என்னுடன் அனுப்பி வைத்தார் டெய்லர் பழனி. 

அங்கிருந்த மற்றொரு இளைஞரிடம் நான், ‘‘தம்பி, சரியாக ஐந்து மணிக்கு திருவண்ணாமலையிலிருந்து ராமஜெயம் பஸ் வரும். அதில் கருகருவென கொடுவாய் மீசையுடன், வெள்ளை வேட்டி, சந்தனக் கலர் சட்டை அணிந்து இருப்பார் ஒருவர். அவரது இடது கை மணிக்கட்டில் ஸ்டீல் பட்டையுடன் வாட்சு கட்டியிருப்பார். கையில் நீல நிற சூட்கேஸ் ஒன்றும், தோளில் ஜோல்னா பை ஒன்றும் இருக்கும். பஸ்ஸை விட்டு இறங்குவார். அவர் பெயர் வீரபாகு. அவரை அழைத்து வந்து டெய்லர் பழனியிடம் அறிமுகம் செய்யவும். அவருக்கு காபி மிகவும் பிடிக்கும். காபி தருவதற்கு ஏற்பாடு செய்யுங்கள். நான் கோயிலில் கூட்ட ஏற்பாடுகளை முடித்துவிட்டு ஐந்தரை மணிக்குத் திரும்பி வருகிறேன் என்று டெய்லர் பழனியிடமும் கூறிவிட்டு, கோயிலுக்குப் புறப்பட்டுச் சென்றேன். 

அந்த இளைஞர் (அவர் உருவம் என் மனதில் இருக்கிறது. பெயர் ஞாபகத்தில் இல்லை) தன்னுடன் இன்னும் இரு வாலிபர்களை அழைத்துச் சென்றார். எல்லாம் நல்லபடியே நடந்தன. வீரபாகுஜிக்கு ஒரே ஆச்சர்யம். ‘பாவம் ஜோதி! தனியாக அனுப்பினோம், என்ன கஷ்டப்படுகிறாரோ? நிகழ்ச்சி இருக்குமா, இல்லையா? எத்தனை பேர் இருப்பார்கள்?’ என்றெல்லாம் சிந்தனை செய்துகொண்டே வந்தவருக்கு, பஸ் ஸ்டாண்டிலிருந்து அழைத்துச்செல்ல செய்யப்பட்டிருந்த ஏற்பாட்டினைக் கண்டு, ஆச்சர்யம் கலந்த சந்தோஷம். 

டெய்லர் பழனியின் கடையின் அறைக்கு ஏராளமானோர் வந்து குழுமிவிட்டனர்,  வீரபாகுஜியைப் பார்ப்பதற்காக. அவரது கம்பீரமான உருவத்தைப் பார்த்து, நிச்சயம் இவர் ஆர்.எஸ்.எஸ். தலைவர்தான் என்று உறுதி செய்து கொண்டனர். மிகுந்த மரியாதையுடன் அவரிடம் பேசினர். நானும் வந்து சேர்ந்தேன். 

வீரபாகுஜியிடம் காலை முதல் மாலை வரை நடந்த அனைத்து விஷயங்களையும் கூறினேன். எங்களுக்குள் சிரிப்பும், சந்தோஷமும் வெள்ளமெனப் பெருக்கெடுத்து ஓடியது. 

ஆம்! சகோதரர்களே! சங்க காரியம் இறைவனின் காரியம். நாம் வெறும் கருவிகள் மட்டுமே! இதை நாங்கள் இருவரும் அன்று அனுபவப்பூர்வமாக உணர்ந்தோம். அன்று அந்த ஊருக்கு ஆர்.எஸ்.எஸ். வர வேண்டுமென்று இறைவன் சித்தம் வைத்தான்; அவனே செய்து முடிக்கிறான். அவ்வளவே! 

அன்பர்களே! இந்தக் கதையின் தொடர்ச்சியை அடுத்த சிரத்தாஞ்சலி புஷ்பத்தில் தொடருகிறேன். 

வணக்கம்!

 



No comments:

Post a Comment