![]() |
| சேலம் ஸ்ரீ எம்.ராமசாமி |
சிரத்தாஞ்சலி புஷ்பம் – 5
****************************
1978 – 79 களில் நடைபெற்ற சம்பவம் இது. இந்துக்களுக்காக வாதாடவும் போராடவும் ‘இந்து முன்னணி’ எனும் மாபெரும் அமைப்பு உதயமாகாத காலகட்டம். ஆயினும் உள்ளூர் இந்துக்கள் ஏதாவது ஓர் அமைப்பின் பெயரில், ஒன்றுதிரண்டு தங்களுக்கு ஏற்பட்ட சவால்களைச் சமாளித்தும் முறியடித்தும் வந்தனர். அவற்றில் ஒன்றான, வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு நகரில் சாதாரண பொதுஜன இந்துக்கள் ஒருங்கிணைக்கப்பட்டு, ஜெயபேரிகை முழங்கிய வீரவரலாற்றை உங்கள் முன் இப்போது வைக்கிறேன்.
இந்த வெற்றிக்கதைக்கு நாயகர்கள் மூன்று பேர்:
1. சேலம் எம்.ராமசாமிஜி,
2. வீரபாகுஜி,
3. பேர்ணாம்பட்டு டி.பத்மநாபன்ஜி (குடியாத்தம், சரஸ்வதி வித்யாலயா நிறுவனர்களுள் ஒருவர்).
பேர்ணாம்பட்டு நகருக்குத் தெற்கே 2 கி.மீ. தூரத்தில் உள்ள கிராமம் ஓம்குப்பம். அவ்வூர் இந்துக்கள் 15 கி.மீ. தூரத்தில் கைலாசகிரி மலையில் உள்ள முருகப் பெருமானுக்கு காவடி செலுத்த வேண்டிக்கொள்வர். அந்தப் பிரார்த்தனையை நிறைவேற்றுவதற்கு காவடி ஊர்வலம் செல்வது பாரம்பரிய வழக்கம்.
அதன்படி, 1978 ஜூலை 25 அன்று காவடி ஏந்தி ‘வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, ஞானவேல் முருகனுக்கு அரோகரா’ என இறைநாமம் பாடியவாறு பக்தர்கள் ஊர்வலமாகச் சென்றனர்.
பேர்ணாம்பட்டு நகரில் உள்ள ரஷீதாபாத் எனுமிடத்தில் மசூதி இருக்கும் பிரதான வீதி வழியாகச் சென்றபோது, மசூதியில் இருந்து கற்களும் செருப்புகளும் சோடா பாட்டில்களும் வீசப்பட்டன. எதிர்பாராத வகையில் நடந்த இத்தாக்குதலால் ஹிந்துக்கள் நிலைதடுமாறி விழுந்தனர். பலருக்கு பலத்த காயம்; காவடிகள் சிதறின. பாதுகாப்புக்கு உடன் வந்த காவலர்களும் தாக்கப்பட்டனர். குறிப்பாக இன்ஸ்பெக்டர் ஸ்ரீசைலம் அவர்களுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது; காவடி ஊர்வலம் தடைபட்டுப் போனது.
![]() |
| குடியாத்தம் ஸ்ரீ. டி.பத்மநாபன் (பேர்ணாம்பட்டு) |
‘‘இது அனைவருக்கும் பொதுவான வீதி. குறிப்பிட்ட மதத்தினர் பெரும்பான்மையாக வசிப்பதால், வீதி அவர்களுக்குச் சொந்தமாகிவிடாது. இவ்வழியே காவடி ஊர்வலம் செல்வது எங்கள் உரிமை. நீங்கள் தடுக்கமுடியாது’’ என்று இந்துக்கள் வாதாடினர். நீதி வழங்கவேண்டிய கலெக்டர், உடனே 144 தடை உத்தரவைப் பிறப்பித்து, காவடி ஊர்வலத்தினரைக் கலைந்து செல்லுமாறு வற்புறுத்தினார். ‘மாட்டோம்’ என்றனர் இந்துக்கள். போலீஸ் தடியடிப் பிரயோகம் செய்தது. பலருக்கு ரத்தக் காயங்கள். பத்மநாபன்ஜிக்கு பலத்த அடி. காவடி ஊர்வலம் நடைபெறாமல் மீண்டும் நின்றுபோனது.
பேர்ணாம்பட்டு சம்பவங்கள் பற்றி பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகின. பேர்ணாம்பட்டு சுற்றுவட்டாரப் பகுதி முழுவதும் பதற்றமான சூழ்நிலை நிலவியது.
இதுதொடர்பாக, பத்மநாபன்ஜி, ஜனார்த்தனம்ஜி (பங்களாமேட்டில் தனது சொந்த நிலத்தில் விவசாயம் செய்து வந்தவர்; 1948-இல் சங்கம் மீதான தடையின்போது சத்யாகிரகம் செய்து சிறைக்குச் சென்றவர்) மற்றும் பேர்ணாம்பட்டு மாணிக்கம்ஜி ஆகிய மூவரும் வேலூர் சென்று ஜில்லா பிரசாரக் வீரபாகுஜியைச் சந்தித்து மேற்கொண்டு செய்ய வேண்டிய பணிகள் பற்றி ஆலோசனை செய்தனர்.
![]() |
| சென்னையில் பட்டியலினத்தவர் வழிபடும் பரமேஸ்வரி அம்மன் ஆலயம்-வெளிப்புறத் தோற்றம் |
வீரபாகுஜி ‘‘பேர்ணாம்பட்டு சுற்றுவட்டார இந்துக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். காவடி பக்தர்களை ஒருங்கிணைப்பது அவசியம். ஏதாவது ஓர் அமைப்பின் பெயரில் போராட்டத்தை நடத்திச் செல்வதுதான் வெற்றியைத் தரும்’’ என்று வழிகாட்டினார். அதற்காக விசேஷ முயற்சிகளைச் செய்ய வேண்டும் என்றும் கூறினார். தெருமுனைப் பிரசாரம், சைக்கிள் ஊர்வலம், வீடுவீடாகச் சென்று பிரசுரங்கள் விநியோகிப்பது என்றும் முடிவுகள் எடுக்கப்பட்டன.
இந்தப் போராட்டம் குறித்து சேலம் சென்று ராமசாமிஜியைச் சந்திக்க வேண்டும் என்று வீரபாகுஜி ஆலோசனை கூறினார். உடனே பத்மநாபன்ஜியும் ஜனார்த்தனன்ஜியும் சேலம் சென்றனர். யார் இந்த ராமசாமிஜி? எனும் இக்கேள்வி இன்றைய தலைமுறையினரின் மனதில் எழக்கூடும்.
சகோதரர்களே! 1960-களிலேயே ஹிந்துக்களின் நலனுக்காக வாதாடவும் போராடவும் ‘தமிழ்நாடு ஹிந்து ஆலய பாதுகாப்பு கமிட்டி’ எனும் அமைப்பை உருவாக்கியவர் சேலம் ராமசாமிஜி; அதனுடைய மாநிலச் செயலாளராக சி.கே.நரசிம்மாச்சாரிஜி (மதுரை சங்கசாலக்), பொருளாளராக சேலம் ரங்கநாதன்ஜி (ஜில்லா சங்கசாலக்) ஆகியோர் செயல்பட்டனர். அந்தக் காலகட்டத்திலேயே, இந்துக்களுக்கு எங்கேனும் பிரச்னையென்றால், தானே வலியச்சென்று, முன்னின்று, போராட்டத்தில் குதிப்பார் ராமசாமிஜி. சேலத்தில் ‘பாரத் பவர் பிரஸ்’ என்னும் அச்சுக்கூடத்தை சொந்தமாக நடத்திவந்தார். கமிட்டியின் அலுவலகமாகவும் அது செயல்பட்டது. மேலும் அவர், இந்துக்களின் பிரச்னைகளை பொதுவெளியில் எடுத்துரைக்கவும், இந்துக்களின் தரப்பில் உள்ள நியாயங்களை வலியுறுத்தவும், ‘ஹிந்து மறுமலர்ச்சி’ என்ற மாதம் இருமுறை வெளிவரும் இதழை தன் கைப்பணத்தைக் கொண்டு நடாத்திவந்தார். தமிழ்நாடு முழுவதும் உள்ள சங்கம் மற்றும் பரிவார் அலுவலகங்களுக்கு இலவசமாக இதழை அனுப்பிவந்தார்.
‘Hindu Vote Bank – இந்து வாக்கு வங்கி’ எனும் கருத்தை 1970-களிலேயே உருவாக்கம் செய்து, தமிழகத்தின் பொதுவெளியில் முதன்முதலாக முன்வைத்த சமூக விஞ்ஞானி அவர். மதம் மாறிச் சென்றவர்களை மீண்டும் தாய்மதம் கொணர்ந்திட, ‘தமிழ்நாடு ஹிந்து மிஷன்’ என்ற அமைப்பை ஏற்படுத்தி, மாதந்தோறும் தாய்மதம் திருப்பும் நிகழ்ச்சியையும் நடத்திவந்தார். அதற்காக விசேஷ யாகம் நடத்தி, இந்துப் பெயர்களைச் சூட்டி, அரசு கெஜட்டில் பதிவேற்றம் செய்துவைப்பார்.
![]() |
| அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயம் -உள்புறத் தோற்றம் |
ஒருமுறை சென்னையில் பட்டியலினத்தவர் (துப்புரவாளர்கள்) வழிபட்டுக் கொண்டிருந்த சாலையோர அம்மன் கோயிலை மாநகராட்சியினர் இடித்துத் தள்ள புல்டோசர் இயந்திரத்துடன் வந்தனர். அதற்கு பட்டியலினத்து மக்கள் சூழ்ந்து நின்று எதிர்ப்புத் தெரிவித்தனர். அந்த வழியே பஸ்ஸில் பயணம் செய்துகொண்டிருந்த ராமசாமிஜி அதைக் கவனித்துவிட்டார். உடனே பஸ்ஸை நிறுத்தச் சொல்லி கீழே இறங்கிச் சென்று, விவரங்களைக் கேட்டறிந்து, புல்டோசர் முன்பு படுத்துவிட்டார். ‘‘என்னை மிதித்துக் கொன்றுவிட்டுத்தான் கோயில் மீது கைவைக்க முடியும்’’ என்று கர்ஜித்தார்; அதைப் பார்த்து ஆவேசம் அடைந்த மக்களில் சிலரும் அவருடன் புல்டோசரின் முன்பு படுத்துக் கொண்டனர். அம்மன் கோயில் காப்பாற்றப்பட்டது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எதிரே மேம்பாலத்தைக் கடந்துசென்றால்- வலதுபக்கம் பாடிகார்டு முனீஸ்வரன் கோயில் வரும். அதன் எதிரே அம்மன் ஆலயத்தைத் தரிசிக்க முடியும். இன்றைக்கும் பட்டியலினத்து மக்கள் அம்மனை வழிபட்டு வருவதைக் காணலாம்.
![]() |
| சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் ராஜகோபுரம் |
சேலம், கோட்டை மாரியம்மன் கோயிலுக்கு ராஜகோபுரம் கட்டுவதற்காக 100 நாட்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தினை நடத்தினார். ராஜகோபுரம் கட்டினால் அதன் நிழல் பக்கத்திலுள்ள மசூதி மீது விழும்; முஸ்லிம்கள் பிரச்னை செய்வார்கள் என்ற காரணத்திற்காக அரசு அனுமதி தராமல் இழுத்தடித்து வந்தது. தொடர் உண்ணாவிரதப் போராட்டம் காரணமாக, அரசு பணிந்து, ராஜகோபுரம் கட்ட அனுமதியளித்தது. அந்த ராஜகோபுரத் திருப்பணியின் மூலகர்த்தா ராமசாமிஜி தான். ஆனால் கால்கோள்விழா தொடங்குவதற்கு முன்னதாகவே இறைவன் அவரை தன் திருவடி நீழலுக்கு அழைத்துக்கொண்டான் (1984 பிப். 14). அவரைப் பற்றி முழுமையாகச் சொல்ல வேண்டுமாயின், தனியொரு அத்தியாயமே தேவை என்பதால் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன். இந்த அசகாய சூரரை வேலூர் சங்க கார்யாலயத்தில் நான் பலமுறை சந்தித்து, பேசி மகிழ்ந்து, அடிபணிந்திருக்கிறேன்.
ராமசாமிஜி பேர்ணாம்பட்டு வருகை தந்து, தமிழ்நாடு ஹிந்து ஆலயப் பாதுகாப்பு கமிட்டியின் கிளையை அமைத்தார். ஓம்குப்பம் ஜகன்நாதன் தலைவராகவும், பேர்ணாம்பட்டு கமலநாதன் செயலாளராகவும், பேர்ணாம்பட்டு பத்மநாபன்ஜி அலுவலகச் செயலாளராகவும் செயல்படத் துவங்கினர். வீரபாகுஜி பேர்ணாம்பட்டு வந்து, மூன்று நாட்கள் தங்கினார். பேர்ணாம்பட்டில் தெருமுனைப் பிரசாரங்கள் நடந்தன. துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. சுற்றுவட்டாரக் கிராமங்களில் சைக்கிள் ஊர்வலங்கள் நடந்தன. ‘ஹிந்து மறுமலர்ச்சி’ பத்திரிகை மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது; சந்தாக்கள் சேகரிக்கப்பட்டன. வீரபாகுஜி தங்கியிருந்த மூன்று நாட்களும் மக்கள் தொடர்புப் பணிகள் விறுவிறுப்பாக நடந்தன.
அலுவலகச் செயலாளர் பத்மநாபன்ஜி, தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் முக்கிய எம்.எல்.ஏ.க்களுக்கும், எம்.பி.க்களுக்கும் கடிதம் எழுதினார். தங்கள் ஊரில் காவடி ஊர்வலங்கள் தாக்கப்பட்டது குறித்தும், இந்துக்கள் மீது நடத்தப்படும் அநியாயங்கள் பற்றியும், அகில இந்திய அளவில் பத்திரிகைகளுக்கு -குறிப்பாக ‘ஆர்கனைசர், தருண் பாரத்’– செய்திகள் அனுப்பினார். பேர்ணாம்பட்டு மற்றும் சுற்றுவட்டார மக்களிடையே காவடி ஊர்வலம் குறித்த பேச்சே பிரதானமாக இருந்தது. ஒருவித பரபரப்பும் எதிர்பார்ப்பும் மக்களிடையே கூடிக்கொண்டே வந்தன.
போலீஸ் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. முஸ்லிம்கள் தரப்பில் பேரூராட்சித் தலைவர் (இஸ்லாமியர்) முன்னிலை வகித்தார். இந்துக்கள் தரப்பில் பத்மநாபன்ஜி, ஓம்குப்பம் ஜகன்நாதன், ஏரிக்குத்தி செங்கம நாயுடு, கமலநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
‘‘காவடி ஊர்வலம் மசூதி தெரு வழியாக வரக் கூடாது, வேண்டுமானால், ஆற்றில் ரோடு போட்டுத் தருகிறோம். அதன்வழியே ஊர்வலம் செல்லட்டும்’’ என்றனர். முஸ்லிம்கள்.
‘‘நகரத்தின் பொதுவீதி வழியாகத்தான் ஊர்வலம் செல்லும். வேண்டுமானால், நீங்கள் மசூதியை இடமாற்றம் செய்து கொள்ளுங்கள்’’ என்றனர் இந்துக்கள். எந்த முடிவும் எடுக்க முடியாமல் கூட்டம் கலைந்தது.
‘வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி, பங்குனி மாதக் கிருத்திகையன்று பத்தாயிரம் காவடிகள் பங்கேற்கும் ஊர்வலம் பேர்ணாம்பட்டில் நடைபெறும்’ என்று ராமசாமிஜி ‘ஹிந்து மறுமலர்ச்சி’ பத்திரிகையில் காரசாரமாக எழுதினார். பத்தாயிரம் காவடி என்கிற செய்தி போலீஸார் மற்றும் இஸ்லாமியர்கள் மத்தியில் ஒருவித கலக்கத்தை ஏற்படுத்தியது. ஹிந்து ஆலயப் பாதுகாப்பு கமிட்டி அலுவலகம், அதைச் சார்ந்தோரின் வீடுகள், போலீஸாரால் ரெய்டு செய்யப்பட்டன. ‘ஹிந்து மறுமலர்ச்சி’ பத்திரிகைகளை போலீஸார் தேடித் தேடி பறிமுதல் செய்தனர். பத்மநாபன்ஜி உள்ளிட்ட முக்கிய ஊழியர்கள் தலைமறைவாயினர். அவர்கள் பங்களாமேட்டில் ஸ்வயம்சேவகர் ஜனார்த்தனன்ஜிக்கு சொந்தமான விவசாய பம்ப்செட் கட்டடத்தில் நள்ளிரவில் சந்தித்து திட்டங்கள் குறித்து ஆலோசனை செய்து வந்தனர்.
போலீஸ் சேலத்திற்குச் சென்று ராமசாமிஜியைக் கைது செய்தது; மத நல்லிணக்கத்துக்கு ஊறு விளைவிப்பதாகக் குற்றம் சாட்டி வேலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தியது; மூன்று நாட்கள் ரிமாண்டில் வைக்கப்பட்டார்; பின்னர் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். பிரச்னைக்குரிய பேர்ணாம்பட்டு எல்லைக்குள் வரக் கூடாது என்றும், எந்தப் பத்திரிகையிலும் பேர்ணாம்பட்டு காவடி ஊர்வலம் குறித்து எழுதக் கூடாது என்றும் இரு நிபந்தனைகளை விதித்தது நீதிமன்றம். ஆனால் அவரோ அசகாய சூரர். வேலூர் கார்யாலயத்தில் வந்து தங்கினார்; எழுதுவதை மட்டும் தவிர்த்தார். மாறுவேடத்தில் பேர்ணாம்பட்டு சென்று, ஆக வேண்டிய காரியங்களைக் கவனித்து வருவார்.
இதனிடையே முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்கள் வேலூர் மாவட்ட எஸ்.பி.யாக இருந்த வால்டர் ஐசக் தேவாரம் (டபிள்யூ.ஐ.தேவாரம்) அவர்களை சென்னை தலைமை செயலகத்திற்கு அழைத்து, ‘‘சட்டப்படி எது சரியோ அதை நிலைநிறுத்தவும். அதற்குத் தக்க நடவடிக்கை எடுத்து பிரச்னையை முடிவுக்குக் கொண்டுவரவும்’’ என உத்தரவு பிறப்பித்து அனுப்பிவைத்தார்.
வால்டர் தேவாரம் பேர்ணாம்பட்டிற்கு வந்து பேச்சுவார்த்தைக்கு இரு தரப்பினரையும் அழைத்தார். ‘‘மசூதி தெரு வழியாக காவடி ஊர்வலம் செல்ல எங்களுக்கு ஆட்சேபணை இல்லை. ஆனால், 10,000 காவடிகள் கூடாது. ஏரிக்குத்தி கிராமக் காவடிகளை மட்டும் ஊர்வலமாகச் செல்லுமாறு போலீஸார் அனுமதிக்க வேண்டும்’’ என்று கீழே இறங்கி வந்தனர் முஸ்லிம்கள்.
‘‘எங்களுக்கு எண்ணிக்கை முக்கியமல்ல. எந்தத் தெரு வழியாகவும் ஹிந்து சமய ஊர்வலம் அதன் பாரம்பரிய மரபுப்படி செல்வதற்கு உரிமை இருக்க வேண்டும். சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்த வேண்டும்.’’ என்றனர் இந்துக்கள்.
வால்டர் தேவாரம் அவர்கள் ‘ஏப்ரல் 1-ஆம் தேதியன்று ஏரிக்குத்தியில் இருந்து மட்டும் காவடி ஊர்வலம், அதன் பாரம்பரிய முறைப்படிச் செல்லும். வெளியூர்க்காரர்கள் எவரும் ஊர்வலத்தில் கலந்துகொள்ள அனுமதியில்லை’ என்று அறிவிப்பு செய்தார்.
முன்கூட்டியே போலீஸாரால் கைது செய்யப்படலாம் என்று கருதி, மார்ச் 26 அன்றே தலைமறைவாகி விடுவது என்றும், மாறுவேடத்தில் ஏரிக்குத்தி கிராமத்திற்குள் சென்று, மக்களோடு மக்களாக ஊர்வலத்தில் வருவது என்றும் ஆலயப் பாதுகாப்பு கமிட்டி தலைவர்கள் முடிவெடுத்தனர். பத்மநாபன்ஜியும் வீரபாகுஜியும், மார்ச் 31 இரவு ஜனார்த்தனன்ஜியின் பம்ப்செட்டில் தங்கியிருந்து, பொழுது விடியும் நேரத்தில், ஏரிக்குத்தி கிராமத்திற்குள் நுழைந்துவிட்டனர்.
சென்னையிலிருந்து ஆர்.எஸ்.எஸ். பிராந்த கார்யவாஹ் (மாநிலச் செயலாளர்) ‘ஹண்ட்ரட்’ ஸ்ரீனிவாசன்ஜி காவடி ஊர்வலத்தில் கலந்துகொள்வதற்காக மார்ச் 30 அன்றே பேர்ணாம்பட்டுக்குள் நுழைந்துவிட்டார். நல்ல உயரம், பரந்த நெற்றி, கூரிய பார்வை என, அவர் பார்ப்பதற்கு உயர் புலனாய்வு அதிகாரி போன்று காணப்பட்டார்.
வால்டர் தேவாரம் தலைமையில் போலீஸ் நூற்றுக்கணக்கில் குவிக்கப்பட்டது. கெடுபிடியான பந்தோபஸ்து ஏற்பாடுகள். பேர்ணாம்பட்டு எல்லை ‘சீல்’ வைக்கப்பட்டது. ஏரிக்குத்தி கிராமமும் ‘சீல்’ வைக்கப்பட்டது. வாகனப் போக்குவரத்துகள் ஏப்ரல் 1 விடியற்காலையிலிருந்து நிறுத்தப்பட்டன. காவடி ஊர்வலம் அதன் பாரம்பரிய முறைப்படி நடக்கும் என்றும், முஸ்லிம் மக்கள் தங்கள் வீட்டுக்குள்ளே இருந்து அமைதி காக்கும்படியும், வெளியாட்கள் யாரையும் ஊருக்குள் அனுமதிக்க வேண்டாம் என்றும், போலீஸார் ஊர் முழுவதும் அறிவிப்பு செய்தனர். மசூதியில் தொழுகை நேரம் மாற்றியமைக்கப்பட்டது. அனைத்துக் கடைகளும் மூடப்பட்டன.
1979 ஏப்ரல் 1-ஆம் நாள், பங்குனிக் கிருத்திகையன்று காலை 9 மணிக்கு ஏரிக்குத்தியிலிருந்து காவடி ஊர்வலம் பக்தி சிரத்தையுடன், முருகப் பெருமானின் திருநாமங்களை கோஷமிட்டுக்கொண்டு, தாரை, தப்பட்டை, பம்பை, உடுக்கை இசைத்துக்கொண்டு நாதஸ்வர மேளதாளங்களுடன் சிறப்பாகப் புறப்பட்டது. வால்டர் தேவாரம் ஊர்வலத்தின் முன்னே நின்று வழிநடத்திக் கொண்டிருந்தார். மசூதி இருந்த தெரு சுமார் 1.5 கி.மீ. நீளமாகும். அதன்வழியே அருள்மிகு வேலாயுத தண்டபாணியின் காவடிகள் ஆர்ப்பாட்டத்துடன், ஜெயபேரிகை முழங்க, ‘வெற்றிவேல், வீரவேல்’ கோஷங்களுடன் கடந்து சென்றது. அனைவரின் கண்களிலும் ஆனந்தக் கண்ணீர். ஒரு மசூதியல்ல; மூன்று மசூதிகளைக் கடந்து வந்தது ஊர்வலம்.
‘ஹண்ட்ரட்’ ஸ்ரீனிவாசன்ஜி, வீரபாகுஜி, பத்மநாபன்ஜி, ஜனார்த்தனம்ஜி, செங்கம நாயுடு, கமலநாதன் ஆகியோர் பக்தர்களோடு பக்தர்களாக ஊர்வலத்தில் வந்து கொண்டிருந்தனர்.
சேலம் ராமசாமிஜி, தலையில் தலப்பாக்கட்டுடன் வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு பனியன் அணிந்துகொண்டு ஒரு கிராமத்து விவசாயி போன்று வேடம் தரித்து, அந்த ஊர்வலத்தில் கலந்துகொண்டார். என்னே அவரின் துணிச்சல்! என்னே லட்சிய பக்தி! பாரதத் தாயின் தவப்புதல்வன்.
காவடி ஊர்வலம், பேர்ணாம்பட்டு பஸ் நிலையத்தை நெருங்கியது. ஊர் மக்கள் இந்த அற்புதக் காட்சியைக் காண்பதற்காக (கிட்டத்தட்ட 5,000 பேர்) திரண்டு நின்றனர். அனைவரின் குரலிலும் ஜெயகோஷம்; கண்களில் ஆனந்த ஊற்று. அனைவரின் உள்ளத்திலும் திருப்தி; வெற்றிக் களிப்பு. ஆலயப் பாதுகாப்பு கமிட்டியின் செயல்வீரர்களான பத்மநாபன்ஜி, ஓம்குப்பம் ஜெகன்நாதன், ஏரிக்குத்தி செங்கம நாயுடு, கமலநாதன், ஜனார்த்தனன்ஜி மற்றும் வீரபாகுஜி ஆகியோருக்கு மக்கள் மாலை அணிவித்து அரோகரா கோஷமிட்டனர்.
15 கி.மீ. தூரமுள்ள கைலாசகிரியை நோக்கி ஊர்வலம் சென்றது. வழியில் எல்லாக் கிராமங்களிலும் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையில் வசிக்கும் உம்ராபாத்தைக் கடந்து காவடி ஊர்வலம் கைலாசகிரி முருகப் பெருமானின் ஆலயத்தை வந்தடைந்தது. பத்மநாபன்ஜி அவர்கள் கோயிலில் மொட்டையடித்து, விபூதி தரித்து முருகப் பெருமானுக்கு நன்றிக்கடன் செலுத்தினார்.
சகோதர்களே, அன்று நமது வீரபாகுஜியின் வழிகாட்டுதலாலும், ஸ்வயம்சேவகர்களின் விடாமுயற்சியாலும், இந்து மக்களின் ஒற்றுமையினாலும் நிலைநாட்டப்பட்ட பொதுவழி உரிமை மற்றும் சட்டத்தின் ஆட்சி, இந்துக்களின் தன்மானம், பேர்ணாம்பட்டில் இன்றும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.
****************************
சகோதரர்களே!
பேர்ணாம்பட்டில் நடந்தது போன்று ஒரு சம்பவம், வந்தவாசியிலும் நடைபெற்றது; காவடி ஊர்வலம் தாக்கப்பட்டது. இந்துக்களின் உரிமைக்கும் தன்மானத்துக்கும் சவால்கள் விடப்பட்டன. அந்த சந்தர்ப்பத்திலும், நம் அன்பிற்குரிய வீரபாகுஜி ஒரு போராளியின் மனப்பான்மையுடன் களமிறங்கி, இந்துக்களின் உரிமையை மீட்டெடுத்தார். அதுபற்றிய விவரங்களை அடுத்துவரும் சிரத்தாஞ்சலி புஷ்பத்தில் முன்வைக்கிறேன்.
வணக்கம்!
வணக்கம்!







No comments:
Post a Comment