சிரத்தாஞ்சலி புஷ்பம் – 6
*****************************
1981-ஆம் ஆண்டு நடந்த சம்பவம் இது.
வந்தவாசி - திருவண்ணாமலை சாலையில் உள்ள கிராமம் மாம்பட்டு. அந்தக் கிராமத்து மக்கள் ஆடிக்கிருத்திகையன்று திருத்தணிகையில் உள்ள முருகப் பெருமானுக்கு காவடி ஏந்தி, புனிதப் பயணம் செல்வர். மாம்பட்டு கிராமத்திலிருந்து நடைப்பயணமாக, வந்தவாசி பேருந்து நிலையம் வரை வந்து, திருத்தணிகைக்கு பேருந்தில் பயணிப்பர். கிராம மக்களுடன் அக்கம்பக்கத்து ஊர்களைச் சேர்ந்தவர்களும், வந்தவாசி நகரைச் சேர்ந்தவர்களும் விரதம் இருந்து, காவடி சுமந்து உடன் செல்வர்.
1981ஆம் ஆண்டு ஆடிக்கிருத்திகையின்போது, மாம்பட்டு காவடி ஊர்வலம் வந்தவாசி பஜார் வீதி வழியாகச் சென்றது. அங்கிருந்த மசூதியைக் கடந்து சென்றபோது, காவடி ஊர்வலம் மீது முஸ்லிம்கள் தாக்குதல் நடத்தினர். மசூதிக்குள்ளிலிருந்து கற்களும், செருப்புகளும், மூத்திரச் சட்டிகளும் (சிறு பானைகள்) வீசப்பட்டன. காவடி பக்தர்கள் படுகாயம் அடைந்தனர். காவடி ஊர்வலம் தடைப்பட்டுப் போனது.
அதுமட்டுமல்லாமல், இரண்டு நாட்கள் கழித்து, மசூதியின் முன்புள்ள சாலையில், வலது மற்றும் இடதுபக்க திசைகளில் 100 மீட்டர் இடைவெளியில் வெள்ளை நிறக் கோடுகளைப் போட்டனர் முஸ்லிம்கள். ஒரு வெள்ளைக் கோட்டிலிருந்து மற்றொரு வெள்ளைக்கோட்டைத் தொடும் தூரம் வரை மேளதாளம் வாசிக்கக் கூடாது என்றும், கோஷங்கள் போடக் கூடாது என்றும், மசூதியின் இருபுறத்திலும் கம்பங்கள் நட்டு, பெரிய அறிவிப்புப் பலகைகளில் (போர்டு) எழுதி வைத்தனர்.
அதன்பிறகு, வந்தவாசி- பஜார் வீதியில் இந்துக்களின் எந்த ஊர்வலமாக இருந்தாலும், மசூதியின் முன்பாக மேளம் கொட்டுவதை நிறுத்திவிட்டு, மெளன ஊர்வலமாகச் செல்லும் வழக்கம் ஏற்பட்டது. இந்த அவமானகரமான நிலை குறித்து, இந்துக்களின் மனதில் கொந்தளிப்பு இருந்து வந்தது இயல்புதான். இச்சந்தர்ப்பத்தில் வந்தவாசியில் இந்து முன்னணியின் கிளை அமைக்கப்பட்டது. பிரின்டிங் பிரஸ் நடத்தி வரும் ராஜாராம் அவர்கள் வந்தவாசி நகர இந்து முன்னணி தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்தக் காலகட்டத்தில், எல்.மோகன் வந்தவாசி தாலுகா பிரசாரகராக இருந்தார். கடலூர்- மஞ்சக்குப்பம் ஷாகாவைச் சேர்ந்த சீனிவாசன் ஆரணியில் பிரசாரகராக இருந்தார். பென்னாடம் ரத்னசபாபதி வேலூர் நகர் பிரசாரகராக இருந்தார். மாம்பலம் ஷாகா சு.விஸ்வநாதன், கடலூர் ஜில்லா பிரசாரகராக இருந்தார். பரமக்குடி டி.ஆர்.நாராயனன் திருக்கோவிலூரில் பிரசாரகராக இருந்தார். நான் வேலூர் ஜில்லா பிரசாரகராக இருந்தேன். செங்கத்தைச் சேர்ந்த ராஜா ஆற்காட்டிலும், தாயுமானவன் திருவள்ளூரிலும் பிரசாரகர்களாக இருந்தனர்.
மாதந்தோறும் பிரசாரக் பைட்டக் (சங்க அமைப்பாளர்கள் ஆலோசனை அமர்வு) நடக்கும். அந்த நாள் எப்போது வரும் என்று காத்திருப்போம். காரணம், பிரசாரக் பைடக்குகளை விபாக் பிரசாரக் (கோட்ட அமைப்பாளர்) வீரபாகுஜி கலகலப்பாக நடத்துவார்; உற்சாகமாக இருக்கும்; பொழுதுபோவதே தெரியாது. அவரிடம் சுற்றுப்பயணத் தேதி வாங்குவதில் பிரசாரகர்களிடையே போட்டியும் முந்துதலும் இருக்கும்.
1982-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் வேலூர் விபாகின் பிரசாரகர்கள் பைட்டக் வந்தவாசியில் நடந்தது. அதில், சென்ற ஆண்டு இதே ஆகஸ்ட் மாதம் காவடி ஊர்வலம் தாக்கப்பட்டு, தடைப்பட்டுப் போனது குறித்து சர்ச்சை நடந்தது. இதை மாற்றியாக வேண்டும் என்று தீர்மானித்தோம். இறுதியில் வீரபாகுஜி, வரும் ஆடிக்கிருத்திகை அன்று தான் வந்தவாசியில் இருப்பதாகவும், காவடி ஊர்வலத்தில் கலந்து கொள்வதாகவும், அதிக எண்ணிக்கையில் ஸ்வயம்சேவகர்கள் காவடி ஏந்தி, ஊர்வலத்தில் கலந்துகொள்ளச் செய்ய வேண்டும் என்றும் கூறினார்.
காவடி ஊர்வலத்தில் வீரபாகுஜி கலந்து கொள்கிறார் என்ற செய்தி, வந்தவாசி தாலுகாவில் உள்ள ஸ்வயம்சேவகர்களுக்கு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.
12.08.1982 ஆடிக்கிருத்திகை அன்று மாம்பட்டு கிராமத்திலிருந்து பம்பை, உடுக்கை, மேளம் அடித்துக்கொண்டு காவடி ஊர்வலம் புறப்பட்டுவந்தது. வந்தவாசி தேரடியை நெருங்கியபோது, முன்தயாரிப்புடன் இருந்த ஸ்வயம்சேவகர்கள் காவடி ஏந்தி ஊர்வலத்தில் சேர்ந்து கொண்டனர். தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்வயம்சேவர்கள் நீளமான கம்புகளில் மஞ்சள் கொடி ஏந்தி வந்தனர். ஊர்வலத்தின் முன்பாக வீரபாகுஜி, தாலுகா காரியவாஹ் (வட்டச் செயலாளர்) ராமநாதன்ஜி, ஜில்லா விவஸ்தா பிரமுக் கோ.கணேசன்ஜி, நகர் பௌத்திக் பிரமுக் பாண்டுரங்கன்ஜி, தாலுகா பிரசாரக் மோகன்ஜி, இந்து முன்னணி தலைவர் ராஜாராம்ஜி ஆகியோர் நடந்து வந்தனர். ‘வெற்றிவேல், வீரவேல்’ கோஷத்துடன் காவடி ஊர்வலம் ஆர்ப்பாட்டமாக பஜார் வீதியில் சென்று கொண்டிருந்தபோது, மசூதியை நெருங்கியதும் (வெள்ளைக்கோட்டைத் தொட்டதும்) மேளம் வாசிப்பவர்கள் நிறுத்திவிட்டனர்.
வீரபாகுஜி அவர்களைப் பார்த்து, “ஏன் மேளம் வாசிப்பதை நிறுத்திவிட்டீர்கள்?” என்றார்.
மேளம் வாசிப்பவர்கள், ‘‘இங்கு இதுதான் வழக்கம்” என்றனர்.
“மேளம் அடித்துக்கொண்டுதான் செல்ல வேண்டும். இல்லையேல் ஊர்வலம் ஓர் அங்குலம் கூட நகராது. இங்குதான் நிற்கும்” என்று கர்ஜித்தார் வீரபாகுஜி.
அதற்குள் முஸ்லிம்கள் சூழ்ந்துகொண்டு எதிர்ப்பைத் தெரிவித்தனர். வாக்குவாதம் நடந்தது. வந்தவாசி டிஎஸ்பி வந்தார்.
“பஜார் வீதி என்பது ஊரின் முக்கியமான வழி. இந்தப் பக்கம் காஞ்சிபுரத்திற்கும், அந்தப் பக்கம் திண்டிவனத்திற்கும் இந்தச் சாலை வழியாகத்தான் பேருந்துகளும் வாகனங்களும் செல்கின்றன. பஸ் சத்தம் கேட்கலாம்; ஹார்ன் அடிக்கலாம்; கழுதை கத்தலாம்; நாய்கள் குரைக்கலாம்; ஆனால் இந்துக்கள் எப்பொழுதாவது வழிபாட்டு ஊர்வலம் சென்றால் உங்கள் தொழுகைக்கு பாதிப்பு வந்துவிடுமா? இந்துக்கள் மீது நீங்கள் காட்டும் ஆக்கிரமிப்பு மனப்பான்மையே இது. பொதுவான வீதியில் சமய ஊர்வலம், அதன் மரபுப்படி செல்வதற்கு உரிமை இருக்க வேண்டும். மேளதாளம் வாசித்துக் கொண்டுதான் செல்வோம். இல்லையேல் ஊர்வலம் இங்கேயே நிற்கும்” என்று முழக்கமிட்டார் வீரபாகுஜி.
நீண்டநேரம் போலீஸுக்கும் காரியகர்த்தர்களுக்கும் இடையே வாக்குவாதம் நடந்து கொண்டிருந்தது. பக்தர்கள் காவடிகளுடன் வீதியில் அமர்ந்துகொண்டு தர்ணா செய்தனர். இந்தச் செய்தி, ஊர் முழுவதும் பரவியது. கேள்விப்பட்ட பொதுஜன இந்துக்கள் கூட்டம் கூட்டமாக மசூதிக்கு முன்பு குழுமிவிட்டனர். ‘அரோகரா’ கோஷம் விண்ணைப் பிளந்தது.
’எதற்கும் தயார்!’ என்ற மனநிலை இந்துக்களிடையே மேலோங்கி நின்றது. இதைக் கண்ட போலீஸாரும் முஸ்லிம்களும் தங்கள் நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்கினர். முஸ்லிம்கள் அனைவரையும் மசூதிக்குள் செல்லும்படி டிஎஸ்பி உத்தரவிட்டார்; கதவையும் தாளிட்டுவிட்டார். மேளதாளம் முழங்க முருகனின் திருநாம கோஷங்களுடன் காவடி ஊர்வலம் ஆர்ப்பாட்டத்துடன் சென்றது. பொதுஜன இந்துக்களும் ஊர்வலத்தோடு சேர்ந்துகொண்டு ‘அரோகரா’ கோஷமிட்டபடி, வெற்றிப் புன்னகையுடன் சென்றனர். வந்தவாசி, பஜார் வீதியில் மசூதி முன்பு, மீண்டும் மேளதாளம் முழங்க வைத்த பெருமை வீரபாகுஜியையே சேரும்.
**********
இங்கு இன்னொரு விஷயத்தையும் குறிப்பிட்டாக வேண்டும். காவடி ஊர்வலம் வெற்றிகரமாக முடிந்த பின்னர், ஒரு மாதம் கழித்து ராம.கோபாலன்ஜி கலந்துகொண்ட இந்து முன்னணி பொதுக்கூட்டம், வந்தவாசி தேரடியில் நடந்தது. காவடி ஊர்வலம் பற்றிய அனைத்து விஷயங்களைக் கேட்டறிந்த பின், கோபால்ஜி பொதுக்கூட்டத்தில் பேசும்போது, “பஜார் வீதியில் மசூதிக்கு இருபுறத்திலும் ‘இந்துக்கள் மேளதாளம் வாசிக்கக் கூடாது’ என்று போர்டுகள் வைக்கப்பட்டுள்ளன. நான் மூன்று நாட்கள் அவகாசம் தருகிறேன். யார் போர்டை வைத்தார்களோ, அவர்களே அதை எடுத்துவிட வேண்டும். இல்லையேல், நாங்கள் வந்து போர்டை எடுப்போம்” என்று இறுதி எச்சரிக்கை விடுத்தார். மறுநாளே அந்த போர்டுகள் இரண்டும் அங்கிருந்து எடுக்கப்பட்டுவிட்டன; சாலையில் இருந்த வெள்ளைக் கோடுகளையும் காணவில்லை.
**********
![]() |
| தவளகிரீஸ்வரர் கோயில் |
வந்தவாசியில் இருந்து செய்யாறுக்கும் காஞ்சிபுரத்துக்கும் சாலை பிரியும் இடத்தில், மலைக்குன்று ஒன்று உள்ளது. அந்த மலைக்குன்றுக்கு வெண்குன்றம் என்று பெயர். மலையின் மீது சிவாலயம் – தவளகிரீஸ்வரர் கோயில் உள்ளது. உள்ளூர் மக்கள் பிரதோஷக் காலங்களிலும், கார்த்திகை தீபத் திருநாட்களிலும் இறைவனை வழிபட அதிக எண்ணிக்கையில் அங்கு செல்வர். வீரபாகுஜி வந்தவாசியில் இருந்தபோது, ஒரு சம்பவம் நடந்தது. மலைப்பாதையில் ஓரிடத்தில் குகை போன்று குறுகலான பாதை உள்ளது. அந்த இடத்தில் பக்தர்கள் செல்லும்போது, முரட்டு முஸ்லிம் இளைஞர்கள் சிலர் நின்று கொண்டு, கோயிலுக்குச் செல்லும் பெண்களை கேலி செய்வதும், ஆபாச செய்கை காட்டுவதுமாக இருந்தனர். இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டதும், வீரபாகுஜி தன்னுடன் ஸ்வயம்சேவர்களையும் அழைத்துக்கொண்டு, மலை மீது சென்றார்; அந்தக் கயவர்களை நையப் புடைத்தனர். சிலருக்கு எலும்புகள் முறிந்தன. அவர்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். அந்த உதைக்குப் பிறகு, அத்தகைய கீழ்த்தரமான சம்பவம் நடப்பது நின்று போனது.
அந்த மலை மீது சிறிய கிராமம் உள்ளது. பூச்செடிகளைப் பயிரிட்டு, பூக்களை நகரத்துக்குக் கொண்டுவந்து விற்பனை செய்வர் அந்தக் கிராமத்து மக்கள். அங்கிருந்த இளைஞர்கள் சிலர் வந்தவாசி கார்யாலயத்துக்கு வந்து, இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடந்து வந்ததாகவும், தங்களால் எதுவும் செய்ய முடியாத நிலையில் இருந்ததால் தங்கள் மனதில் பாதிப்பை ஏற்படுத்தி வந்ததாகவும், இன்று இப்பிரச்னைக்கு ஆர்.எஸ்.எஸ்.ஸால் முடிவு கட்டப்பட்டு விட்டதாகவும் கூறினர்; உடனே தங்கள் மலைக் கிராமத்தில் ஆர்.எஸ்.எஸ். கிளை துவக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். அதன்படி, அங்கே பிரபாத் ஷாகா ஆரம்பிக்கப்பட்டது.
**********
மேற்கண்ட காவடி ஊர்வல வெற்றிச் சம்பவம், வெண்குன்றம் சம்பவம் ஆகியவை, வந்தவாசி தாலுகா முழுவதும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தின. இளைஞர்கள் ஆர்வத்துடன் ஆர்.எஸ்.எஸ்.ஸில் இணைந்தனர். பல கிராமங்களில் ஷாகாக்கள் ஆரம்பிக்கப்பட்டன.
கொடியாலம் கிருஷ்ணமூர்த்தி, வெள்ளிமேடுபேட்டை கண்ணன், தெள்ளாறு பானுகுமார், ராமசமுத்திரம் சுவாமிநாதன், கூனம்பாடி ஆதிகேசவன் – இவர்களெல்லாம் பள்ளிக்கூட ஆசிரியர்கள்; தங்கள் தங்கள் ஊர்களில் ஷாகா ஆரம்பித்தனர். வெகு விரைவில் இயக்கத்தில் வளர்ந்து முக்கிய காரியகர்த்தகர்களாக உருவாகினர்; தாலுகா மற்றும் ஒன்றிய அளவில் பொறுப்பேற்றுக் கொண்டனர்; கிராமப்புற மாணவர்களைத் தொடர்புகொண்டு ஷாகாவில் இணைத்தனர். பட்டதாரி இளைஞரும் உள்ளூர் மக்களுக்கு நன்கு அறிமுகமானவருமான தெள்ளாறு ராமநாதன்ஜி, வந்தவாசி தாலுகா காரியவாஹ் எனப் பொறுப்பேற்றுச் செயல்பட்டு வந்தார்.
1982-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கடைசி வாரம், பிராத்மிக் சிக்ஷண வர்காவும் (அறிமுக சங்க முகாம்) கோஷ் வர்காவும் (சங்க தாள வாத்தியப் பயிற்சி முகாம்) இணைந்து வந்தவாசியில் நடந்தன. பாண்டிச்சேரியைச் சேர்ந்த இந்திரேசன் அவர்கள் கோஷ் வர்காவுக்குப் பொறுப்பாளராக இருந்தார். வர்காவின் கடைசி நாளன்று அணிவகுப்பு ஊர்வலம் மற்றும் பொது விழா நடைபெற்றது. குறிப்பிட்ட இடத்தை குறிப்பிட்ட நேரத்தில் அணிவகுப்பு ஊர்வலம் கடக்கும் என்று அழைப்பிதழ் அச்சிட்டு, ஊர் முழுவதும் விநியோகம் செய்யப்பட்டது. மக்கள் ஆச்சரியத்துடன் அணிவகுப்பு ஊர்வலத்தைக் காண்பதற்காக வீதிகளின் இருபுறமும் பெரும் எண்ணிக்கையில் திரண்டிருந்தனர். அணிவகுப்பு ஊர்வலம் கோஷ் வாத்தியம் முழங்க பஜார் வீதியில் கம்பீரமாகச் சென்றது.
வேலூர் தணிகைவேல் காவிக் கொடியை கையில் ஏந்தி, த்வஜ பிரமுக்காக ஊர்வலத்தில் சென்றார். மக்கள் பூச்சொரிந்து ஊர்வலத்தை வரவேற்றனர். பஜார் வீதியில் மசூதி முன்பு ஒரு பதற்றமான சூழ்நிலை இருந்தது. ஆயினும், எந்தத் தடையும் இன்றி கம்பீரமாக அணிவகுப்பு ஊர்வலம் மசூதியைக் கடந்து சென்றது. வேலூர் எஸ்.பி. வால்டர் தேவாரம் முன்கூட்டியே வந்தவாசிக்கு வந்திருந்து, பந்தோபஸ்து ஏற்பாடுகளைக் கவனித்துக் கொண்டார். இந்த வர்காவுக்குப் பிறகு, வேலூர் விபாக்கிற்கு என்று தனி கோஷ் குழு உருவானது தனிச்சிறப்பாகும்.
**********
1983-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வேலூரில் நடந்த பிராந்த ஷிபிரில் (மாநில மாநாடு) அப்போதைய ஆர்.எஸ்.எஸ். அகில பாரதத் தலைவர் பரமபூஜனீய பாளாசாகேப் தேவரஸ்ஜி கலந்து கொண்டார். வந்தவாசி தாலுகாவிலிருந்து 70 ஸ்வயம்சேவகர்கள் கணவேஷ் தாரியாக (சங்கச் சீருடையுடன்) சைக்கிளிலேயே பயணித்து வந்து ஷிபிரில் கலந்துகொண்டனர்.
அதே ஆண்டு மே மாதம், திருப்பராய்த்துறையில் நடந்த சங்க சிக்ஷா வர்காவுக்கு (முதலாம் ஆண்டு பயிற்சி முகாம்), தாலுகா கார்யவாஹ் ராமநாதன்ஜி தலைமையில் வந்தவாசி தாலுகாவிலிருந்து மட்டும் 30 ஸ்வயம்சேவகர்கள் பயிற்சிக்குச் சென்றனர் என்றால், சங்கப் பணியின் குதிரை வேகத்தைக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள். அவர்கள் அனைவரும் பயிற்சி முடித்து ஊர் திரும்பிய பின்னர், புதிய ஷாகாக்கள் மலர்ந்தன. அந்தக் காலகட்டத்தில் (1982– 85) வந்தவாசி தாலுகாவில் மட்டும் 50-க்கும் மேற்பட்ட ஷாகாக்கள் இருந்தன.
அப்போது புதுமையும் வேடிக்கையும் கொண்ட ஒரு நிகழ்ச்சி திட்டமிடப்பட்டது என் நினைவுக்கு வருகிறது. ஒரே நாளில் 7 ஷாகாக்களுக்கு த்வஜம் வழங்கும் நிகழ்ச்சி அது. (முறையாகவும் முழுமையான சங்க அமைப்பிலும் நடைபெறும் ஷாகாக்கள் காவிக்கொடியேற்றி நடத்த அனுமதிக்கப்படும். அதற்கு காவிக்கொடி- த்வஜம்- அதிகாரிகளால் வழங்கப்படும்).
ஏழு ஊர்களுக்கும் த்வஜம் வழங்கும் அதிகாரியாக விபாக் பிரசாரக் வீரபாகுஜி வந்தார். ஒரே நாளில், ஒரே அதிகாரி 7 ஊர்களுக்கும் சென்று த்வஜம் வழங்க முடியுமா? முடித்துக் காட்டினர். அதற்காக தாலுகா பைட்டக்கில் தெளிவாகத் திட்டமிட்டனர்.
ஒரு ஊருக்கு இரண்டு மணி நேரம் ஒதுக்கப்பட்டது. காலையில் 6 மணி முதல் 8 மணி வரை, 8 மணி முதல் 10 மணி வரை, 10 மணி முதல் 12 மணி வரை, 12 மணி முதல் 2 மணி வரை, (2 மணி முதல் 3 மணி வரை உணவு இடைவேளை) மாலை 3 மணி முதல் 5 மணி வரை, மாலை 5 மணி முதல் 7 மணி வரை, இரவு 7 மணிமுதல் 9 வரை. ஊர்களுக்கு இடைப்பட்ட தூரம் சுமாராக 3 - 6 கி.மீ.க்குள் இருக்கும். அனைத்து ஊர்களுக்கும் டாக்டர்ஜி, குருஜி, பாரத மாதா படங்கள் தயார் செய்யப்பட்டு, முன்கூட்டியே அனுப்பி வைக்கப்பட்டன. நிகழ்ச்சி தினம்: 1984 ஜன. 15, தைப் பொங்கல் நாள்.
தெள்ளாறு கண்டாவில் (ஒன்றியம்) மெட்டோடர் வேனில் வீரபாகுஜியும் தாலுகா காரியகர்த்தர்களும் காலை 5.30 மணிக்குப் புறப்பட்டுச் சென்றனர். 7 புதிய த்வஜங்கள், பீடங்கள், கம்பங்கள் வேனில் ஏற்றப்பட்டு, வேன் புறப்பட்டது. அந்தந்த ஊர்களின் சங்க ஸ்தானத்தில் ஸ்வயம்சேவகர்களும் சங்க ஆதரவாளர்களும் திட்டமிட்ட நேரத்தில் குழுமி இருந்தனர். ஷாகா நடந்தது; வீரபாகுஜி த்வஜம் வழங்கினார். ஷாகா நிறைவுக்குப் பிறகு சிறிதுநேரம் ஸ்வயம்சேவர்களுடன் அறிமுக பைட்டக் சங்க ஸ்தானத்திலேயே இருந்தது. நீராகாரம் அருந்திய பின், வேன் அடுத்த ஊருக்குக் கிளம்பியது. இப்படி 7 ஊர்களுக்கும் த்வஜம் வழங்கிய பின், இரவு 10 மணிக்கு வேன் தெள்ளாறுக்குத் திரும்பியது.
அன்பர்களே! மேற்கண்ட சம்பவங்கள் எல்லாம் வந்தவாசி தாலுகாவில் சங்கத்தின் பொற்காலத்தை எப்போதும் நமக்கு நினைவூட்டிக் கொண்டிருக்கும். அதேசமயத்தில், அமரர் வீரபாகுஜியின் தனித்துவமான தலைமைப் பண்புக்கு அவை எடுத்துக்காட்டுகளாகவும் என்றும் ஒளிவீசி நிற்கும்.
*****************************
சகோதரர்களே!
‘பூஜ்ஜியத்திலிருந்து ஒரு ராஜ்ஜியம்’ என்ற சொலவடை உண்டு. ஒன்றுமே இல்லாத இடத்தில்கூட காரியத்தைச் சாதித்து கொளுத்திவிட்டு வந்துவிடுவார் நம் வீரபாகுஜி. அப்படி ஓர் ஊரில், பூஜ்ஜியத்தில் இருந்து சங்கத்தின் ஜீவிதத்தை உருவாக்கிய அவரின் பிரதாபக் கதையுடன் அடுத்து வரும் சிரத்தாஞ்சலி புஷ்பத்தில் உங்களைச் சந்திக்கிறேன்.
வணக்கம்.
வணக்கம்.


No comments:
Post a Comment