Friday

தீபத் திருவிழாவில் வீரபாகுஜியின் ஒரு ‘கலக்கல்’ ஐடியா!


ஆர்.எஸ்.எஸ். புக் ஸ்டாலில் வைத்திருந்த 
சுவாமி விவேகானந்தர் படம்


சிரத்தாஞ்சலி புஷ்பம் – 4 

**************************** 

1979-இல் சங்கத்தின் மக்கள் தொடர்பு இயக்கம் (ஜன ஜாக்ரண்) நாடு முழுவதும் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரம். திருவண்ணாமலையில் சூரிஜியின் பொதுக்கூட்ட நிகழ்ச்சிக்குப் பிறகு, ஒரு மாதம் கழித்து வீரபாகுஜி திருவண்ணாமலை வந்திருந்தார். அப்போது திருவண்ணாமலையில் பிரபாத்– சாயம் என 2 ஷாகாக்கள் இருந்தன. 

அண்ணாமலையார் கோயில் மேற்கு ராஜகோபுரத்தை ஒட்டியுள்ள வெளிப்பிரகாரத்தில் பிரபாத் (அதிகாலை) ஷாகா நடந்து கொண்டிருந்தது. மாவட்ட கூட்டுறவு வங்கியில் பணிபுரியும் கணேசன்ஜி ஷாகா முக்ய சிக்ஷக். ராஜகோபுரத்தை ஒட்டி அமைந்திருக்கும் திட்டி வாசலில் சாயம் (மாலை) ஷாகா நடந்து கொண்டிருந்தது. தருணர், பாலர் என 25 சங்க்யா இருக்கும். ஷாகா முடிந்த பிறகு, நாங்கள் இருவரும் அண்ணாமலையாரை தரிசனம் செய்ய கோயிலுக்குள் சென்றோம். கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு ஆரம்ப நிலை ஏற்பாடுகள் கோயிலில் நடைபெற்றுக் கொண்டிருந்தன.

“ஜோதி! எப்போதும் போல வருடா வருடம் தீபத் திருவிழா வருகிறது. நாமும் மக்களோடு மக்களாக வந்து தரிசனம் செய்துவிட்டுப் போகிறோம்! பலவிதமான கேளிக்கை நிகழ்ச்சிகளும், கச்சேரிகளும் ஊரைச் சுற்றிலும் நடக்கின்றன. வியாபார நிறுவனங்கள் தங்கள் பொருள்களை ஸ்டால் போட்டு காட்சிப்படுத்தி விளம்பரம் செய்கிறார்கள். ஆனால் ஆர்.எஸ்.எஸ். போன்ற பெரிய ஸ்தாபனமாகிய நம் சங்கத்தைப் பற்றி மக்களுக்கு எடுத்துச் சொல்ல நாம் எதுவும் செய்யாமல் இருக்கிறோமே! ஜன ஜாக்ரண் நடைபெறும் இந்த சமயத்திலாவது நாம் ஏதாவது செய்தாக வேண்டும்” என்றார் வீரபாகுஜி.

“நல்லது ஜி! நம் சங்கத்தைப் பற்றி நோட்டீஸ் போட்டு மக்களுக்கு விநியோகிப்போம்” என்றேன் நான்.

“ஆமாம், ஆமாம், பாதி நோட்டீஸ் - தெருவில் குப்பையாகத்தான் கிடக்கும். சிலர் படிப்பார்கள். சிலர் படிக்காமலேயே வீசியெறிந்துவிட்டுப் போய் விடுவார்கள்” என்றார் வீரபாகுஜி.

அன்று இரவு உணவு முடித்த பின்னர், காரியாலயத்தில் இதுபற்றி பேச்சு மேலும் தொடர்ந்தது.

“நாம் ஏன் ஆர்.எஸ்.எஸ். ஸ்டால் போடக் கூடாது? சங்கத்தின் பேனர் கட்டி, சங்கப் புத்தகங்களை மக்களுக்கு அறிமுகப்படுத்தும் ஸ்டால் போடலாமே?” என்றார் வீரபாகுஜி.
“ஜி! ஸ்டால் போடும் அளவிற்கு நம்மிடம் புத்தகங்கள் எங்கே இருக்கின்றன? பிரார்த்தனா புத்தகம், பாமாலை, சாரீரிக் புத்தகம், டாக்டர்ஜி – குருஜி – சிவாஜி புத்தகங்கள் என எண்ணினால் 10 அயிட்டம் கூட தேறாது” என்றேன் நான்.

“நாம் என்ன புத்தக வியாபாரிகளா, வியாபாரம் செய்து பணம் பார்ப்பதற்கு? ஆயிரக்கணக்கில் மக்கள் வருகிறார்கள். பலருக்கு சங்கத்தைப் பற்றி தெரிந்து கொள்ளவும், உறுப்பினராகச் சேரவும் ஆர்வம் இருக்கும். ஆனால் எங்கு யாரைத் தொடர்பு கொள்வது என்பது அவர்களுக்குத் தெரியாது. நம் ஸ்டாலைப் பார்த்ததும் நம்மை அணுகுவார்கள். அதன்மூலம் பல கிராமங்கள் தொடர்புக்கு வரும். ஆங்காங்கே இருக்கும் பழைய ஸ்வயம்சேவகர்கள் தங்கள் தொடர்பை மீண்டும் ஏற்படுத்திக் கொள்ளவும் இந்த ஸ்டால் வாய்ப்பாக அமையும்” என்றார் வீரபாகுஜி.

“ஜி! ஸ்டால் என்றால் பொதுமக்களின் பார்வைக்கு நிறைய புத்தகங்கள் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் பார்ப்பதற்கு கவர்ச்சியாக இருக்கும்” என்றேன் நான்.

“ராமகிருஷ்ண மடம், விவேகானந்தா கேந்திரம், வானதி பதிப்பகம், திருப்பராய்த்துறை தபோவனம் ஆகிய நிறுவனங்களிடமிருந்து புத்தகங்களை வரவழைத்து ஸ்டாலில் வைக்கலாம். கருத்து ஒன்றுதானே! கால தாமதம் செய்யாமல் வேலையை ஆரம்பிக்க வேண்டும். நான் நாளை வேலூர் சென்றதும் சென்னைக்குப் புறப்பட்டுச் சென்று புத்தகங்களைக் கொள்முதல் செய்வேன். நீங்கள் ஸ்டால் போடுவதற்கு ஒரு நல்ல இடத்தைத் தேர்வு செய்து, அனுமதி பெற்று வையுங்கள்” என்றார் வீரபாகுஜி.

திருவண்ணாமலையில் ‘திருவூடல் வீதி’ என்பது பிரதான சாலை ஆகும். தீப தரிசனத்திற்கும் கிரிவலத்திற்கும் வருகின்ற பக்தர்கள் இந்த பிரதான சாலையைக் கடந்தே செல்ல வேண்டும். அந்த வீதியில் ஓயாமடத்திற்கு எதிரில், ஸ்டால் போடுவதற்கு எடுப்பானதொரு இடம் கிடைத்தது.

தீபத் திருவிழா என்பது பத்து நாள் உற்சவம். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் இறைவனும் இறைவியும் நகர்வலம் வருவார்கள். அதிகார நந்தி வாகனம், இந்திர விமானம், சிம்ம வாகனம், காமதேனு, கற்பக விருக்ஷம், வெள்ளித்தேர், ராவணன் தன் பத்துத் தலை மீது சுமந்து நிற்கும் கைலாய வாகனம்… என தினசரி திருவூடல் வீதி வழியே சுவாமி புறப்பாடு செல்லும்.

ஏபிடி பார்சல் சர்வீஸ் மற்றும் ரயிலில் பார்சல்கள் மூலம் புத்தகங்கள் வந்து சேர்ந்தன. தீபத் திருவிழாவிற்கு இரண்டு நாள் முன்னதாக வீரபாகுஜி வந்து சேர்ந்தார். திருவூடல் வீதியில் மினர்வா டைப்ரைட்டிங் இன்ஸ்டிட்யூட் இருந்தது. அதன் உரிமையாளர் குமார், சங்கத்தின் ஆதரவாளர். அங்கிருந்து மேஜைகள், நாற்காலிகள், பெஞ்சுகள், கரும்பலகை எல்லாம் கொடுத்து உதவினார். மின்விளக்குகள் அலங்காரத்துடன், அனைவரின் பார்வையையும் இழுக்கும் வண்ணம் ஜொலிப்பாக ஸ்டாலை வடிவமைத்தார் வீரபாகுஜி. சுவாமி விவேகானந்தரின் படம் பிரதானமாக வைக்கப்பட்டது. கொட்டையெழுத்தில் ஆர்.எஸ்.எஸ். பேனர்களும் காவித் தோரணங்களும் கட்டப்பட்டன.

(வேலூர் ஜில்லா கார்யாலயத்தில் கண்ணாடி ஃப்ரேம் போடப்பட்ட பெரிய சைஸ் சுவாமி விவேகானந்தர் படம் ஒன்று இருந்தது. இடுப்பில் காவிக் கச்சையுடன், நெஞ்சுக் குழியின் மீது இரண்டு கைகளையும் கோர்த்து கட்டிக் கொண்டிருப்பார் சுவாமிகள். சிங்கத்தின் பார்வைக்கு ஒப்பான, சிகாகோ பிரசங்க உருவப்படம் அது. படத்தின் கீழே Swami Vivekananda – The Hindoo monk of India என்று ஆங்கிலத்தில் பொறிக்கப்பட்டிருக்கும். விவேகானந்தரின் வெளிநாட்டு சிஷ்யத் தம்பதிகளால் நைனிடாலில் ஆரம்பிக்கப்பட்ட ‘அத்வைத ஆசிரம’த்தின் காப்பிரைட் படம் அது. மிகவும் சிரமப்பட்டு சர்வ ஜாக்கிரதையாக வேலூரிலிருந்து திருவண்ணாமலைக்கு பேருந்தில் கொண்டுவந்து ஸ்டாலில் வைத்தார்).

முதல் நாளன்று நகர காவல் ஆய்வாளர் புத்தக அரங்கிற்கு அழைக்கப்பட்டார். விவேகானந்தரின் படத்திற்கு மாலை அணிவித்து, அரங்கத்தின் முதல் விற்பனையை அவர் துவக்கி வைத்தார். பள்ளிக்கூடத்தில் இருப்பது போல, ஸ்டாண்டுடன் கூடிய கரும்பலகை ஒன்று அரங்கின் பக்கவாட்டில் வைக்கப்பட்டது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புத்தகம் பற்றி ‘அறிமுகம்’ செய்து, சாக்பீஸ் கட்டியால் எழுதி வைப்பார். உதாரணத்திற்கு குருஜியின் ‘ஞான கங்கை’, ராம.கோபாலன்ஜியின் ‘நெருக்கடி நிலையை எதிர்த்து போராட்டம்’, ஸ்வராஜ்யம் கண்ட அருந்திறல் வீரன், ஏகநாத் ரானடேயின் ‘எழுமின்! விழிமின்!’, சுவாமி சித்பவானந்தரின் ‘பகவத்கீதை, திருவாசகம்’ போன்ற புத்தகங்கள். அதைப் படித்தவர்கள் மனதில், இதை வாங்கியே ஆக வேண்டும் என சங்கல்பம் கொள்ளும் விதமாக கரும்பலகையின் வாசகங்கள் இருக்கும்.

ஜன ஜாக்ரணின் பொருட்டு ‘இந்துக்களின் இதயக்குரல் ஆர்.எஸ்.எஸ்’ என்ற புத்தகத்தை ஒரு ரூபாய் விலைக்கு சங்கம் வெளியிட்டது. வேலூர் விபாக் முழுவதும் கைவசம் இருந்த புத்தகங்கள் திருவண்ணாமலைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. சென்னை கார்யாலயத்திலிருந்தும் புத்தகங்கள் வந்தன. கிட்டத்தட்ட 1,500 புத்தகங்கள் இருக்கும். இவை அனைத்தையும் மக்களிடம் கொண்டு சேர்ப்பது பற்றி தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தார் வீரபாகுஜி.

தீபத் திருவிழாவின் மூன்றாம் நாளன்று, அவருக்கு ஏதோ பொறி தட்டியது. “நீங்கள் ஸ்டாலைப் பார்த்துக் கொள்ளுங்கள். நான் திரும்பிவர சில மணி நேரம் ஆகும்” என்று என்னிடம் கூறிவிட்டு, இரண்டு தருண ஸ்வயம்சேவகர்களை உடன் அழைத்துக்கொண்டு வேகமாகச் சென்றார்.

மூன்று மணி நேரம் கழித்து, வெள்ளை நிற மெட்டோடர் வேன் ஒன்று அரங்கத்திற்கு முன்பாக வந்து நின்றது. வேனின் முன்னும் பின்னும் ஆர்.எஸ்.எஸ். பேனர்கள் கட்டப்பட்டிருந்தன. மேலே காவிக் கொடிகள் பறந்தன. ஒலிபெருக்கியும் பொருத்தப்பட்டிருந்தது. கார்யாலயத்தில் கட்டுக் கட்டாக வைக்கப்பட்டிருந்த ‘இந்துக்களின் இதயக்குரல் ஆர்.எஸ்.எஸ்’ புத்தகங்கள் வேனில் ஏற்றப்பட்டிருந்தன. வீரபாகுஜி வேனின் டாப்பில் ஏறி நின்று, கை மைக்கைப் பிடித்தபடி பேச ஆரம்பித்தார்.

“பெரியோர்களே! தாய்மார்களே! இந்துக்களை ஒற்றுமைப்படுத்தும் இயக்கம் ஆர்.எஸ்.எஸ். தேச பக்தியை வளர்க்கும் இயக்கம் ஆர்.எஸ்.எஸ். பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமா?இதோ ஒரு ரூபாய் விலையில். ஒரே ஒரு ரூபாய்தான். இந்துக்களின் இதயக்குரல் ஆர்.எஸ்.எஸ் புத்தகம் உங்களுக்குக் கிடைக்கும்” என்று முழங்கினார்.

அரங்கத்தைச் சுற்றி சூழ்நிலை பரபரப்பாகி விட்டது. ஐந்தாறு ஸ்வயம்சேவகர்கள் கையில் புத்தகத்துடன் மக்களிடம் விற்பனை செய்ய ஆரம்பித்தனர். “இதோ அந்த அக்காவிடம் கொடுங்கள்; அந்த ஐயாவிடம் கொடுங்கள்; இதோ அந்த அண்ணனிடம் கொடுங்கள்” என்று நபர்களை சுட்டிக்காட்டி புத்தகத்தைக் கொடுக்கச் சொல்லுவார். அரங்கத்தின் விற்பனைச் சூழலில் ஒரு கம்பீரத்தையே ஏற்படுத்தி விட்டார்.

கிரிவலப் பாதையில் ஆங்காங்கே வேனை நிறுத்தி, பிரசாரமும் விற்பனையும் செய்துவிட்டு வருவதாகவும், காவல் நிலைய ஆய்வாளரைப் பார்த்து வேன் பிரசாரத்திற்கு விசேஷ அனுமதி பெற்றுள்ளதாகவும் கூறிவிட்டு ஸ்வயம்சேவகர்களை அழைத்துக்கொண்டு வேனில் புறப்பட்டுச் சென்றார்.

கிரிவலப் பாதை 14 கி.மீ. நீளமுடையது. மாலை மூன்று மணியளவில் புறப்பட்டுச் சென்ற வீரபாகுஜி இரவு 10 மணியளவில் திரும்பி வந்தார்.

இரண்டாம் நாள் வேன் பிரசாரம் திருவண்ணாமலை நகருக்குள்ளேயே இருந்தது. பக்தர்கள் பலரின் கைகளில் ‘இந்துக்களின் இதயக்குரல்’ புத்தகத்தைக் காண முடிந்தது. சிலர் ஸ்டாலை நெருங்கிச் செல்லும்போது, கையில் இருக்கும் புத்தகத்தை தூக்கிக் காண்பித்தபடி புன்முறுவல் பூத்துவிட்டுச் செல்வர்.

சுவாமி புறப்பாடு இரவு 10 மணிக்கு மேல்தான் இருக்கும். இரவு 8 மணிக்கே மக்கள் வீதிகளில் ஆங்காங்கே இடம் பிடித்து உட்கார்ந்து விடுவார்கள். கூட்டம் அலைமோதும். அந்தச் சமயத்தில் வீரபாகுஜி அரங்கத்தின் பக்கத்தில் நாற்காலி மீது ஏறி நின்று, சுவாமி சித்பவானந்தர் இயற்றிய பகவத்கீதை புத்தகத்தை அறிமுகம் செய்து சிறிய சொற்பொழிவே நடத்தி விடுவார். அதைக் கேட்டவர்கள் பலர் காசு கொடுத்து புத்தகத்தை வாங்கிச் செல்வர். இதுபோன்று தினசரி பத்து, பதினைந்து புத்தகங்கள் விற்பனையாகிக் கொண்டிருந்தன. என் அனுமானத்தின்படி, சுவாமி சித்பவானந்தரின் கீதை புத்தகத்தை தனியொரு நபராக அதிக எண்ணிக்கையில் மக்களிடம் கொண்டு சேர்த்தவர் என எவரையாவது சுட்டிக்காட்ட வேண்டும் என்றால் அது நம் வீரபாகுஜியாகத் தான் இருக்கும்.

மூன்றாம் நாள், மதிய உணவு முடித்தபின்பு, வேனை ஓரமாக நிறுத்திவிட்டு, எதிரில் உள்ள ஓயாமடத்தில் வீரபாகுஜியும் ஸ்வயம்சேவகர்களும் சற்றே ஓய்வெடுத்துக் கொண்டிருந்தனர். கிரிவலம் சென்று வந்த ஒரு ஸ்வயம்சேவகர் “ஜி! கிரிவலப் பாதையில் ஏழெட்டு இடங்களில் கிறிஸ்தவர்கள் துண்டுப் பிரசுரங்கள் கொடுத்து மதப்பிரசாரம் செய்கிறார்கள். கிரிவலம் வரும் பக்தர்களைப் பார்த்து ‘ஏ, பாவிகளே! பிசாசுகளை வணங்காதீர்கள்’ என்று கூறுகிறார்கள். மதமாற்றம் செய்ய முயற்சி நடக்கிறது. எப்படியாவது அதைத் தடுத்து நிறுத்த வேண்டும்” என்று ஸ்டாலில் முறையிட்டார். “ஓயாமடத்தில் வீரபாகுஜி இருக்கிறார். அவரிடம் நேரில் சென்று சொல்லுங்கள்” என்றேன் நான்.

அவ்வளவுதான்! செய்தியைக் கேட்ட வீரபாகுஜி கொந்தளிப்பாகி விட்டார். ஸ்வயம்சேவகர்களை வேனில் ஏற்றிக்கொண்டு உடனே புறப்பட்டு விட்டார். தண்டாக்களும் ஏற்றப்பட்டன. வேன் நேராக நகர காவல்நிலையத்திற்குச் சென்றது. இந்து திருவிழாவில் இந்து தெய்வங்களை இழிவுபடுத்தி மதமாற்றம் செய்யும் கிறிஸ்தவ பிரசாரம் குறித்து புகார் மனு அளிக்கப்பட்டது. பிறகு கிரிவலப் பாதையை நோக்கி வேன் பறந்தது. ‘அண்ணாமலைக்கு அரோகரா! ஓம் காளி, ஜெய் காளி!’ என்ற கோஷங்கள் மலையின் மீது எதிரொலித்தன. ஆங்காங்கே இருந்த கிறிஸ்தவ மத பிரசாரக் கும்பல்கள் நன்கு கவனிக்கப்பட்டு விரட்டியடிக்கப்பட்டனர். அவர்கள் வைத்திருந்த நோட்டீஸ்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டு, அங்கேயே தீவைத்து கொளுத்தப்பட்டன.

ஓரிடத்தில் கிறிஸ்தவ போதகர் ஒருவர் “மதப் பிரசாரம் செய்வது எங்கள் உரிமை” என்று கூறி சண்டைக்கு வந்தார். “கிறிஸ்தவர்கள் மத்தியில் கிறிஸ்தவம் பற்றி பிரசாரம் செய்ய மட்டுமே உங்களுக்கு உரிமை உண்டு. இந்து திருவிழாவில் இந்து பக்தர்களிடம் உங்கள் மதத்தைத் திணிக்க எவ்வித அதிகாரமும் உங்களுக்கு இல்லை” என்று வீரபாகுஜி கூறினார். அப்போதும் அந்த கிறிஸ்தவர் முரண்டு பிடித்து சண்டையிட்டார். அவரை குண்டுக்கட்டாகத் தூக்கி வேனில் ஏற்றி, நகர காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். திருவிழா முடியும் வரை அவர் ரிமாண்டில் வைக்கப்பட்டார்.

மூன்று நாட்கள் தொடர்ந்து வேன் பிரசார விற்பனை இருந்தது. ‘இந்துக்களின் இதயக்குரல் ஆர்.எஸ்.எஸ்.’ புத்தகம் கைவசத்துக்கு ஒன்றுகூட இல்லாத வகையில் அனைத்தும் விற்றுத் தீர்ந்தன. எழுமின், விழிமின்! சுவாமி சித்பவானந்தரின் பகவத்கீதை புத்தகங்களும் மிச்சம் மீதி இல்லாமல் விற்றுத் தீர்ந்தன. மொத்தத்தில், ஆர்டர் எடுத்த புத்தகங்களில் கிட்டத்தட்ட 80 சதவிகிதம் விற்பனையாகின.

அரங்கத்தில் ஏராளமான விலாசங்கள் கிடைத்தன. பாண்டிச்சேரி, கடலூர், சேலம் - இப்படி பல்வேறு மாவட்டங்களின் விலாசங்களும் இருந்தன. அவர்களைத் தொடர்பு செய்ய, அந்தந்தப் பகுதி பிரசாரகர்களுக்கு விலாசங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. முக்கியமாக திருவண்ணாமலை நகரைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் பற்றிக் குறிப்பிட்டாக வேண்டும்.

கடம்பராயன் தெரு, சோனாசலம் அடகுக் கடையின் உரிமையாளரின் மகன் ராஜேந்திரன், ஏபிடி பார்சல் சர்வீஸ் உரிமையாளரின் மகன் சக்திவேல் ஆகிய இருவரும் விலாசம் தந்திருந்தனர். பின்னாட்களில் இவர்கள் நமது இயக்கப்பணியில் முழுமையாக இணைந்தனர். ராஜேந்திரன் திருவண்ணாமலை நகர ஆர்.எஸ்.எஸ். செயலாளர் ஆனார். சக்திவேல் திருவண்ணாமலை மாவட்ட விஸ்வ ஹிந்து பரிஷத்தின் செயலாளர் ஆனார்.

அன்பர்களே!

1979-இல் திருவண்ணாமலை தீபத்தின்போது திட்டமிடப்பட்ட ஆர்.எஸ்.எஸ். புக் ஸ்டால் வீரபாகுஜியின் ஒரு கன்னி முயற்சி ஆகும். அது அவர் மூளையில் உதித்த யோசனை; வெற்றிகரமாக முடிந்தது. அதன் பின்னர் வேலூர் விபாக்கில் பல ஊர்களில் இந்து சமய திருவிழாக்களில் புக் ஸ்டால் போடும் பழக்கத்தை கார்யகர்த்தர்களிடம் அவர் ஏற்படுத்தினார். 


**************************** 

அன்பர்களே!

ஐப்பசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி அன்று தீபாவளித் திருநாள் வரும். அதற்கு அடுத்த நாள் அமாவாசை. அமாவாசைக்குப் பிறகு வருகின்ற வளர்பிறை ஆறு நாட்களும் சஷ்டி விரத நாட்களாகும். நம் அன்பிற்குரிய வீரபாகுஜி தீவிரமான முருக பக்தர். திருச்செந்தூர் முருகப்பெருமான் மீது அதீத அன்பு கொண்டவர். அவர் தங்கியிருக்கும் அறையில் இடது கை மார்போடு வேலாயுதத்தை அணைத்தவாறு, வலது கை ‘அபயகரம்’ காட்டும் பாலமுருகனின் படம் பிரதானமாக இருக்கும்.

எனக்குத் தெரிந்த வரையில், ஒவ்வோர் ஆண்டும் தவறாமல் கந்தர் சஷ்டி விரதத்தை அவர் அனுஷ்டித்து வந்தார். காலையிலிருந்து மாலை வரை அன்ன ஆகாரம் எதுவும் சாப்பிட மாட்டார். மாலையில் குளித்துவிட்டு, விளக்கேற்றி சுப்ரமணியர் படத்திற்கு முன்பு அமர்ந்து கந்தர் சஷ்டிக் கவசம் வாசித்த பிறகுதான் பலகாரம் உட்கொள்வார். உபவாசம் இருக்கும் தினங்களில்கூட, எப்பொழுதும் போலவே ஓயாமல் வேலை செய்து கொண்டிருப்பார். அவர் முகத்தில் களைப்பையோ சோர்வையோ பார்க்க முடியாது.

வேலூர் ஜில்லாவில் ஆடிக் கிருத்திகை காவடி ஊர்வலம் பிரசித்தி பெற்றதாகும். பேர்ணாம்பட்டு ஏரிக்குத்தி ஊர்வலம், ஆற்காடு ரத்தினகிரி ஊர்வலம், வந்தவாசி- மாம்பட்டு காவடி ஊர்வலங்கள் முக்கியமானவை. ஏரிக்குத்தியிலும் வந்தவாசியிலும் காவடி ஊர்வலங்கள் மாற்று மதத்தினரால் தாக்கப்பட்டன; இந்து சமுதாயம் அவமானப்படுத்தப்பட்டது. அந்தச் சமயத்தில் வீரபாகுஜி ஒரு சூரரைப் போல களத்தில் நின்று சமர் புரிந்தார்; அந்த இடங்களில் இந்துக்களின் உரிமையை மீட்டெடுத்தார். அடுத்து வரும் சிரத்தாஞ்சலி புஷ்பங்களில் அன்னார் காட்டிய சூரத்தனத்தை உங்கள் முன் வைக்கிறேன்.

வணக்கம்.

No comments:

Post a Comment