![]() |
| செங்கத்தில் ஷாகா துவங்கிய பெருமாள் கோயில் வளாக மைதானம்: செங்கத்தின் முதல் சங்கஸ்தான். |
சிரத்தாஞ்சலி புஷ்பம் -8
பாகம் – 2 / தேவ துர்லப காரியகர்த்தர்கள் குழு
இளைஞர் மன்றச் செயலாளர் டெய்லர் பழனி அவர்கள், செங்கம் நகரத்தில் ஆர்.எஸ்.எஸ். கிளை துவக்குவதற்கான அவசியம் ஏன் ஏற்பட்டது என்பது பற்றி சுருக்கமாகச் சொல்லி, செங்கம் நகர மக்கள் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை மனதார வரவேற்பதாகவும் கூறி, 5 நிமிடத்தில் தன் உரையை முடித்துக் கொண்டார்.
‘இந்து ராஷ்டிரம் இது… இந்து மைந்தர் நாம்’எனும் சங்கப் பாடல், கூட்டுப் பாடலாகப் பாடப்பட்டது. வீரபாகுஜி ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அடைமழை போன்று வீர உரை நிகழ்த்தினார்; தனது உரையில் சங்கத்தின் அனைத்துப் பரிமாணங்களையும் முன்வைத்தார். கோயிலுக்குள் நிலவிய நிசப்தமான சூழலால், நிகழ்ச்சிக்கு வந்த அனைவரும் ஒருமனதோடு அவரது உரையை உள்வாங்கிக் கொண்டிருந்தனர்.
பிறகு கேள்வி – பதில் நிகழ்ச்சி இருந்தது. ஆர்.எஸ்.எஸ். மேல் ஜாதி இயக்கமா? வடநாட்டு இயக்கமா? ரகசிய இயக்கமா? காந்தியைக் கொலை செய்த இயக்கமா? இதுபோன்று நிறையக் கேள்விகளைக் கேட்டனர். அனைத்திற்கும் வீரபாகுஜி தெளிவாக பதிலளித்தார். அனைவர் மனதிலும் முழுத் திருப்தி ஏற்பட்டது. அதை அவர்களின் மலர்ந்த முகங்கள் காட்டின.
வந்திருந்தவர்கள் வீரபாகுஜியின் கரங்களைப் பற்றி பாராட்டுத் தெரிவித்தனர். இறுதியாக, ஷாகாவை உடனே துவக்க வேண்டும் என்பதில் ஆர்வமாக இருந்தனர். கொஞ்ச நாட்களுக்கு வாரம் இரண்டு நாட்கள் (சனி, ஞாயிறு) சந்திப்பது என்றும், பிறகு தினசரி சந்திப்பாக ஆக்குவது என்றும் முடிவாகியது.

செங்கம் அருள்மிகு வேணுகோபால சுவாமி கோயில்.
அதன்படி,
பெருமாள் கோயில் சுற்றுப் பிரகாரத்தில் உள்ள மைதானத்தில் வாரக் கூடுதல் துவக்கப்பட்டது; கிட்டத்தட்ட 50 இளைஞர்கள் வந்தனர். தனியொரு ஆளாக பயிற்சி
அளிப்பதில் எனக்கு சிரமம் இருந்தது. அதனால், அடுத்தடுத்த கூடுதல்களுக்கு இறையூர் ஷாகாவிலிருந்து இரண்டு பேர் சிக்ஷகர்களாக வரவழைக்கப்பட்டனர்.
மெல்ல வாராந்திர பைடக் (வாரம் ஒருமுறை ஆலோசனைக் கூட்டம்) ஆரம்பமானது; தன்னார்வம் கொண்ட, செயல் துடிப்புள்ள குழு ஒன்று தயாரானது. பன்னீர்செல்வம், தாயுமானவன், ராஜா, ஸ்ரீனிசாச ரவிசந்திரன், காந்தி, பூக்கடை ரவி, வெங்கோபன், கருப்பு ரவி என காரியகர்த்தர்கள் பட்டாளம் தயாராகியது.
வாரக் கூடுதலின் பிரமுக்காக பன்னீர்செல்வம் பொறுப்பேற்றார். அவரிடம் காணப்பட்ட மென்மையான பேச்சும், அரவணைக்கும் பண்பும், இதமாகப் பழகும் முறையும், சமுதாய பக்தியும் அவரை குழுவின் மையப் புள்ளியாக ஆக்கின. தன் உடன்பிறந்த அண்ணனோடு சேர்ந்து சொந்தமாக முடிதிருத்தும் கடையை நடந்தி வந்தார் பன்னீர்செல்வம். அந்தக் கடை ஸ்வயம்சேவகர்கள் அடிக்கடி சந்தித்துக் கொள்ளும் கேந்திரமானது.
அந்த ஆண்டு (1980) மதுரை அருகிலுள்ள திருவேடகத்தில் நடந்த சங்க சிக்ஷா வர்காவுக்கு சிக்ஷார்த்தியாகப் பயிற்சி பெற பன்னீர்செல்வம் சென்றார். ஒரு மாத காலம் தொழிலை விட்டுச் செல்வது அவருடைய அண்ணனுக்கு ஏற்புடையதாக இல்லை. அண்ணனுக்கு சமாதானங்களைச் சொல்லிவிட்டு, தான் பயிற்சி பெற வேண்டியதன் அவசியத்தைப் பற்றியும் சொல்லி, முகாமிற்கு செங்கத்தின் ஏக பிரதிநிதியாக அவர் சென்றார்.
திருவேடக முகாம் முடித்துவந்த பன்னீர்செல்வம், வாரக் குழுவை தினசரி ஷாகாவாக ஆக்கினார். ஷாகாவில் முக்கிய சிக்ஷக் (ஆர்.எஸ்.எஸ். ஷாகாவை நடத்துபவர்) ஆனார். ஷாகாவுக்கு த்வஜம் வழங்கும் நிகழ்ச்சிக்கு அன்றைய விபாக் பிரசாரக் திரு. கோவிந்தன்ஜி வந்திருந்தார். நடந்த சம்பவங்களைக் கேட்டறிந்த அவரது உள்ளம் பூரிப்பால் தளும்பியது. பல ஆண்டுகளாக ஷாகா பட்டியலில் செங்கம் நகரம் இல்லாமல் இருந்த நிலை மாறியது கண்டு அவருக்கு பரம சந்தோஷம். செங்கத்திலேயே இரண்டு நாட்கள் தங்கியிருந்து, அனைத்து காரியகர்த்தகர்கள் வீட்டிற்கும் சென்றார் கோவிந்தன்ஜி. தனிப்பட்ட முறையிலும் நேரடியாகவும் அவர்களைப் பற்றியும், குடும்பத்தைப் பற்றியும் தெரிந்து கொண்டார்.
ஷாகாவின் சராசரி சங்க்யா 30 என்பது நிரந்தரமாக இருந்தது. அந்த ஆண்டு குருபூஜை விழாவுக்கு 100 பேர் வந்திருந்தனர். ஆனால் குருதட்சிணை இலக்கைஅடைய முடியாமல் போனது குறித்து பன்னீர்செல்வத்துக்கு மிகுந்த மனவருத்தம். அதற்காக, அடுத்த ஆண்டு குருதட்சிணை இலக்கை அடைய கங்காஜலி (சிறுசேமிப்பு) முறையை தீவிரமாகச் செயல்படுத்த எண்ணினார் பன்னீர்செல்வம். அதற்கு தாமே உதாரணமாகவும் இருந்தார். காலை 5.30 மணிக்கு முடிதிருத்தும் கடையைத் திறந்துவிடுவார். முதல் வாடிக்கையாளர் தரும் கட்டணத்தை – எவ்வளவு தொகையாக இருந்தாலும் – கங்காஜலி உண்டியலில் போட்டுவிடுவார். குரு பூஜை விழாவின்போது, ஆண்டு முழுவதும் சேர்த்த உண்டியல் பணத்தை அப்படியே சமர்ப்பணம் செய்துவிடுவார்.
![]() |
| செங்கம் பெருமாள் கோயிலில் அர்த்த மண்டபம் (வீரபாகுஜி வீர உரை நிகழ்த்திய இடம்) |
அந்த ஆண்டு விஜயதசமி விழாவுக்கு வீரபாகுஜி வர வேண்டுமென்று தேதியைக் கேட்டுப் பெற்றார். அவரது இலக்கு, விழாவில் கணவேஷ்தாரி ஸ்வயம்சேவர்கள் குறைந்தது 20 பேர் இருக்க வேண்டும் என்பதே. அதை விழாவின் போது சாத்தியமாக்கியும் காட்டினார்.
அடுத்த ஆண்டு (1981) இரண்டாம் ஆண்டு சங்க சிக்ஷா வர்காவில் கலந்துகொள்ள அதே திருவேடகத்துக்குச் சென்றார். அப்போது தம்முடன் தாயுமானவன், ராஜா, பூக்கடை ரவி ஆகிய மூன்று ஸ்வயம்சேவகர்களை முதலாமாண்டு வர்காவுக்கு அழைத்துச் சென்றார். முகாம் முடிந்து திரும்பி வந்ததும், தாயுமானவன் ஷாகாவின் முக்கிய சிக்ஷக் ஆனார்; பன்னீர்செல்வம் ஷாகாவின் காரியவாஹ் (செயலாளர்) ஆனார்.
இதனிடையே, பன்னீர்செல்வத்தின் தீவிரமான சங்க ஈடுபாட்டைக் கண்ணுற்ற உள்ளூர் முஸ்லிம் வாடிக்கையாளர்கள் முடி
திருத்தம் செய்ய பன்னீர்செல்வம் கடைக்கு வருவதை நிறுத்திக் கொண்டனர். முஸ்லிம்கள் வாழும் பகுதிக்கு அருகில்தான் அவர் கடை இருந்தது. இதன்
காரணமாக, கடையின் வருமானத்தில் வீழ்ச்சி ஏற்பட்டது. இதனால் அவரது அண்ணன் பாலகிருஷ்ணனுக்கும் அவருக்குமிடையே சிறிய மனக்கசப்பு உண்டானது. ஆயினும், குடும்பத்திலும் தொழிலிலும் பிளவு ஏற்பட சங்கம் காரணமாகிவிடக் கூடாது என்பதில் பன்னீர்செல்வம் கவனமாக இருந்தார். தன்னுடைய மென்மையான குணத்தினாலும், நேர்மறையான
அணுகுமுறையாலும் பிரச்னைகளை அவர் சமாளித்து வந்தார். விஜயபாரதம் பத்திரிகை அவரது கடைக்கு தபாலில் வரும். தொடர்ந்து விஜயபாரதம் இதழைப் படித்து வந்த அவரது அண்ணன் பாலகிருஷ்ணனின் மனநிலையிலும் மாற்றம் படிப்படியாக ஏற்பட்டது. தம்பியின் சமுதாயப் பணி உன்னதமானது என்பதையும், சங்கம் தேசத்திற்கு அவசியமானது என்பதையும் புரிந்துகொண்டார். அதன்பிறகு அமைதியானார்.
![]() |
| தீர்த்தகிரி |
1982-ஆம் ஆண்டு பன்னீர்செல்வம் மூன்றாம் ஆண்டு பயிற்சிக்காக நாகபுரி சென்றார். ராஜாவும் காந்தியும் முதலாமாண்டுப் பயிற்சிக்காகவும், தாயுமானவனும் பூக்கடை ரவியும் இரண்டாமாண்டுப் பயிற்சிக்காகவும் சேலம் சாரதா கல்லூரிக்குச் சென்றனர். முகாம் முடித்து வந்த பிறகு, பன்னீர்செல்வம் செங்கம் தாலுகா காரியவாஹ் ஆனார்.
![]() |
| பன்னீர்செல்வம் |
இந்தச் சமயத்தில் திருவண்ணாமலையில் ஈசானிய மடத்தில் வேலூர் விபாகின் காரியகர்த்தர்களுக்கான வர்கா நடந்தது. மானனீய கி.சூரிய நாராயணராவ்ஜி வந்திருந்தார். ஷாகா விஸ்தார் பணிகள் சம்பந்தமாக சூரிஜி பைடக்கில் பேசினார்; “தமிழ்நாட்டில் தற்போது சங்கத்திற்கு ஆதரவான சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது. அதைப் பயன்படுத்திக் கொள்ள மனித பலம் தேவை. அதனால், இளைஞர்கள் சிலர் முழுநேரம் கொடுத்து விஸ்தாராக்காக வர வேண்டும்” என்று அறைகூவல் விடுத்தார்.
அதை ஏற்றுக் கொண்டு, அந்த ஆண்டு வேலூர் விபாகிலிருந்து 10 பேர் விஸ்தாரக்காக வந்தனர். செங்கத்திலிருந்து தாயுமானவன் திருவள்ளூருக்கும், ராஜா ஆற்காட்டிற்கும் விஸ்தாரகர்களாகச் சென்றனர். செங்கம் ஷாகாவின் முக்கிய சிக்ஷக்காக பூக்கடை ரவி பொறுபேற்றுக் கொண்டார்.
![]() |
ஏ.தாயுமானவன்
|
பன்னீர்செல்வத்துக்கு திருமணமாகியது; இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தனர். மூத்த மகனுக்கு டாக்டர்ஜி நினைவாக கேசவன் என்றும், இளைய மகனுக்கு குருஜியின் நினைவாக மாதவன் என்றும் பெயரிட்டு மகிழ்ந்தார். தற்போது பன்னீர்செல்வம், திருமணமான தன் இரு புதல்வர்களுடன் திருப்பூரில் வசித்து வருகிறார். மூத்த மகன் கேசவன் பாஜகவிலும், இளையவன் மாதவன் சங்கத்தின் பிரசாரப் பிரிவிலும் காரியகர்த்தர்களாகப் பணியாற்றி வருகின்றனர்.
இரண்டு ஆண்டுகள் விஸ்தாரக் பணிக்குப் பின் திருவள்ளூரிலிருந்து திரும்பிய தாயுமானவன், செங்கம் பஸ் ஸ்டாண்ட் எதிரில் ஸ்வீட் கடை வைத்தார். தினசரி மாலை நேரத்தில் அவர் போடும் ஜிலேபியும் வெங்காயபகோடாவும் ஊர் மக்களிடையே பிரபலமாகின. கடையின் ஸ்வீட் மாஸ்டர் – விற்பனையாளர் – முதலாளி எல்லாமே அவர்தான்; பணியாளர் யாரும் கிடையாது. 1986-ஆம் ஆண்டு நாகபுரியில் நடைபெறும் மூன்றாம் ஆண்டு பயிற்சிக்குச் செல்ல தாயுமானவன் தயாரானார். ஆனால் ஸ்வீட் கடையை ஒரு மாதகாலம் மூடிவிட்டுச் சென்றால், வியாபார நோக்கில் அது சரிப்பட்டு வராது. ஏனென்றால், அவருக்கென்று ஊரில் ரெகுலர் கஸ்டமர்கள் இருந்தனர். அப்போது தாலுகா காரியவாஹ் ஆக இருந்த பன்னீர்செல்வத்திடம் இதுபற்றிப் பேசினார். இந்த சமயத்தில் ஆற்காட்டில் விஸ்தாரக்காக இருந்த ராஜா ஊருக்குத் திரும்பி வந்தார். ஸ்வீட் போடுவதற்கு தனியாக மாஸ்டர் ஒருவரை ஏற்பாடு செய்துகொள்வது என்றும், நகர் காரியவாஹ் பொறுப்பேற்றுக் கொண்ட ராஜா அந்தக் கடையை ஒரு மாத காலம் நிர்வகிப்பது என்றும் முடிவாகியது. தாயுமானவன் நாகபுரி சென்று பயிற்சி முடித்து திரும்பி வந்தார்.
![]() |
| ராஜா |
பூக்கடை ரவி பல இன்னல்களுக்கு இடையே சங்கப்பணி புரிந்துவந்தார். வீட்டில் சங்கப்பனிக்கு ஆதரவில்லை; அவரது பெரிய அண்ணன் ராமசாமியிடம் பலமுறை அடி வாங்கி இருக்கிறார். சங்க சிக்ஷா வர்கா செல்வதற்கு, கையில் கிடைக்கும் கொஞ்சம் பணத்தை சிறுசேமிப்பாக பன்னீர்செல்வத்திடம் கொடுத்து சேமித்து வந்தார். இப்படித்தான் ரவியும் காந்தியும் முதலாமாண்டுப் பயிற்சிக்குச் சென்றனர்.
தொடர்ந்து
வீட்டினரின் எதிர்ப்புக்கிடையே பூக்கடை ரவி, இரண்டாமாண்டுப் பயிற்சியையும் நாகபுரியில்
(1983) மூன்றாமாண்டுப் பயிற்சியையும் முடித்தார். பயிற்சி முடித்துவந்து தளவநாயகன்
பேட்டையில் புதிய ஷாகா ஆரம்பித்தார். அடுத்த ஆண்டு ஈரோட்டில் நடைபெற்ற சிக்ஷா வர்காவிற்கு
சிக்ஷக்காக்ச் சென்றார். அப்போது, அவருடன் சென்று, பெயின்ட் கடை சபரிநாதன், பார்த்திபன்,
ரவீந்திரன் ஆகிய ஸ்வயம்சேவகர்கள் முதலாமாண்டுப் பயிற்சி முடித்தனர்.
![]() |
| பூக்கடை ராஜேந்திரன் |
பூக்கடை ரவிக்கு ராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற மிகுந்த ஆர்வம் இருந்தது. அவரது எண்ணப்படியே ராணுவத்தில் தேர்வானார். லடாக்கில் உள்ள லே பனி மலைப் பகுதிக்கு, தேசத்தைக் காக்கும் ராணுவ வீரராகப் பணிபுரிய செங்கம் நகரை விட்டு புறப்பட்டுச் சென்றார். போகும்போது தன்னுடைய இளைய அண்ணன் ராஜேந்திரனிடம், ‘‘எனக்குப் பிறகு சங்கப் பணியை நீங்கள்தான் தொடர வேண்டும். இதுவரை சங்கத்துக்கு ஆதரவாளராக இருந்தீர்கள். இனி, சங்கத்தில் பொறுப்பேற்றுச் செயல்பட வேண்டும். இதுவே என் ஆசை” என்று கூறிச் சென்றார்.
தம்பியின் வாக்குப்படியே பூக்கடை ராஜேந்திரன் சங்கப் பணியில் தீவிரமானார்; பெரிய அண்ணன் ராமசாமியின் எதிர்ப்பையும் மீறி ஷாகா பணியில் தீவிரமானார். முதலாமாண்டுப் பயிற்சியை வடலூரிலும், இரண்டாமாண்டு பயிற்சியை தெனாலியிலும் முடித்தார். தெனாலி வர்கா முடித்து வந்தபின் செஞ்சி தாலுகாவில் உள்ள சத்தியமங்கலத்துக்கு விஸ்தாரக்காகச் சென்றார். அங்கிருந்து மூன்றாமாண்டுப் பயிற்சிக்கு நாகபுரி சென்றார். நாகபுரி பயிற்சி முடித்து திரும்பியதும், திருத்தணிக்கு பிரசாரக்காகச் சென்றார்.
![]() |
| ஆசிரியர் ரவிசந்திரன் |
இந்த சமயத்தில் ஷாகா முக்கிய சிக்ஷக்காக இருந்த ஸ்ரீனிவாச ரவிசந்திரன் வந்தவாசி தாலுகாவில் உள்ள வெள்ளிமேடு பேட்டைக்கு விஸ்தாரக்காகச் சென்றார். ஒரு வருடம் கழித்து இருவரும் ஊருக்குத் திரும்பி வந்தனர். ஸ்ரீனிவாச ரவிசந்திரன் நகர பெளதிக் பிரமுக்காகப் பொறுப்பேற்றார். அவருக்கு அரசுப் பள்ளியில் ஆசிரியராக வேலை கிடைத்தது. பூக்கடை ராஜேந்திரன் தாலுகா சாரீரிக் பிரமுக்காகப் பொறுப்பேற்றார்.
தற்போது பூக்கடை ராஜேந்திரன் பாரதீய கிசான் சங்கத்தின் வேலூர் கோட்டப் பொறுப்பாளராகவும், ராஜா பாரதீய மஸ்தூர் சங்கத்தின் நிர்வாகக்குழு உறுப்பினராகவும் உள்ளனர். தாயுமானவன் பத்தாண்டுகள் இந்து முன்னணியின் மாவட்டத் தலைவராகப் பணியாற்றிவிட்டு, இன்று பாரதீய ஜனதா கட்சியில் மாவட்டத் துணைத் தலைவராகச் செயல்பட்டு வருகிறார்.
அன்பர்களே! செங்கம் பெருமாள் கோயில் ஷாகா தொடர்ந்து காரியகர்த்தகர்களை உருவாக்குவதில் வெற்றிகரமாகச் செயல்பட்டு வந்ததைப் பார்த்தீர்கள். முதலாமாண்டு சங்க சிக்ஷா வர்கா முடித்தவர்கள்தான் ஷாகாவில் முக்கிய சிக்ஷக்காக இருப்பது என்கிற நடைமுறை பல ஆண்டுகளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. செங்கம் பெருமாள் கோயில் ஷாகாவில் உருவான ஆரம்பக்கால காரியகர்த்தகர்கள் குழு பெருமைப்படத்தக்க அணியாக விளங்கியது. அவர்களது ஒருங்கிணைந்த செயல்பாட்டின் காரணமாக பல ஆண்டு காலம் ஜீவனோடு ஷாகா செயல்பட்டுக் கொண்டிருந்தது; பல தரமான ஸ்வயம்சேவகர்களை உருவாக்கிக் கொண்டிருந்தது.
‘தான் வேறு, சங்கம் வேறு’ என்றில்லாமல், சங்க லட்சியத்தை உள்வாங்கிக் கொண்டு, தன்னையே சங்கத்தில் கரைத்துக் கொள்கின்ற, சங்கமயமாகவே ஆகிவிடும் காரியகர்த்தர்களின் குழுதான் சங்கப் பணிக்கு ஆதார சக்தியாகும். இத்தகைய குழுவைத்தான் நமது பரமபூஜனீய பாளாசாகேப் தேவரஸ் அவர்கள் “தேவ துர்லப காரியகர்த்தர்கள் குழு” (தேவர்களுக்கும் கிடைக்க அரிதான செயல்வீரர்கள் அணி) என்றார்.
வேலூர் விபாக் முழுவதும் அத்தகையதொரு அணி ஒவ்வொரு தாலுகாவிலும் அஸ்திவாரமாக இருந்த காரணத்தால்தான் – வீரபாகுஜி எனும் இயக்கக் கலைஞனால் அசாதாரணமான காரியங்களை எல்லாம் சாதிக்க முடிந்தது. தேவ துர்லப காரியகர்த்தர் குழுவும் (Dedicated Team) தேவை; வீரபாகுஜி போன்ற வழிநடத்தும் சீரிய தலைமையும் (Perfect Organiser) தேவை! இவர்களே அமைப்பு (Organision) என்கிற நாணயத்தின் இரு பக்கங்கள்.
இரண்டாண்டுகளுக்கு (2018) முன்னர், தாயுமானவனின் மகன் திருமணத்திற்காக நான் செங்கம் சென்றிருந்தேன். திருமண வைபவத்தில் கலந்துகொண்ட பின், ஊரை வலம்வரக் கிளம்பினேன். டெய்லர் பழனி அவர்கள் வீட்டுக்கும், தீர்த்தகிரி அவர்களின் வீட்டுக்கும் சென்றேன். ‘‘இன்று செங்கத்தில் ஆலமரமாக வளர்த்திருக்கும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு அன்று வித்திட்டவர்கள் நாங்கள் தான்” என்று உணர்ச்சி ததும்ப பெருமையாகக் கூறினர். கடந்தகால நிகழ்வுகளை அவர்கள் இன்றும் பசுமையாக அசைபோடுகின்றனர்.

செங்கம் பெருமாள் கோயில்:
கலையழகு மிளிரும் அர்த்த மண்டபத் தூண்கள்
நான் பெருமாள் கோயிலைப் பார்க்கச் சென்றேன். கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு முன்னர் எந்த இடத்தில் ஷாகா தொடங்கப்பட்டதோ அந்த இடத்தின் தரையைத் தொட்டு வணங்கினேன். அன்று பார்த்த மணல் நிரம்பிய மைதானம் இன்று முழுவதும் கான்கிரீட் தரையாக மாறி இருந்தது. சுற்றியிருந்த மரங்களையும் காணோம். கோயிலின் உள்ளே அர்த்தமண்டபத்திற்குள் சென்றேன். இந்த சிரத்தாஞ்சலி புஷ்பங்களின் நாயகனான
அடலேறு வீரபாகுஜி எந்த இடத்தில் நின்று
இந்து கொள்கைகளை கர்ஜனை செய்தாரோ, அந்த இடத்தை மீண்டும் ஒருமுறை கண்ணுற்று மகிழ்ந்தேன். அங்குதான் சங்கத்தின் துவக்கவிழா நடந்தது!
அர்த்தமண்டபத்தில் உள்ள ஒவ்வொரு தூணையும் தொட்டுத் தொட்டுப் பார்த்து பரவச நிலையை அடைந்தேன். என் தாய் அளித்த இந்த ஜென்மத்தை அர்த்தமுள்ளதாக்கியது மூன்றெழுத்து ‘ஆர்.எஸ்.எஸ்.’ கருவறைக்குள் சென்று வேணுகோபால சுவாமியை வணங்கினேன். நீங்காத நினைவுகளுடன் ஆலயத்தை விட்டு வெளியே வந்தேன்.
*****************************
1985-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் வாரத்தில், பூஜனீய ரஜுபையா அவர்கள் (சங்கத்தின் நான்காவது தலைவராக பின்னாளில் ஆனவர்) செங்கம் நகருக்கு வருகை தந்தார். ஜில்லா பதசஞ்சலனும் பொது விழாவும் திட்டமிடப்பட்டன. அதைச் சீர்குலைக்க முஸ்லிம்கள் செய்த அழிச்சாட்டியம் – போலீஸ் குவிக்கப்பட்டு தாலுகா அலுவலகத்தில் நடந்த அமைதிக் கூட்டம் – வீரபாகுஜி கையாண்ட வியூக தந்திர அணுகுமுறை – அதனால் செங்கத்தில் உண்டான வரலாறு காணாத இந்து எழுச்சி ஆகியவை பற்றி அடுத்து வரும் சிரத்தாஞ்சலி புஷ்பத்தில் விளக்கமாகக் கூறுகிறேன்.
வணக்கம்!









No comments:
Post a Comment