 |
| தவளகிரி மலை, வந்தவாசி |
சிரத்தாஞ்சலி புஷ்பம் – 6
*****************************
1981-ஆம் ஆண்டு நடந்த சம்பவம் இது.
வந்தவாசி - திருவண்ணாமலை சாலையில் உள்ள கிராமம் மாம்பட்டு. அந்தக் கிராமத்து மக்கள் ஆடிக்கிருத்திகையன்று திருத்தணிகையில் உள்ள முருகப் பெருமானுக்கு காவடி ஏந்தி, புனிதப் பயணம் செல்வர். மாம்பட்டு கிராமத்திலிருந்து நடைப்பயணமாக, வந்தவாசி பேருந்து நிலையம் வரை வந்து, திருத்தணிகைக்கு பேருந்தில் பயணிப்பர். கிராம மக்களுடன் அக்கம்பக்கத்து ஊர்களைச் சேர்ந்தவர்களும், வந்தவாசி நகரைச் சேர்ந்தவர்களும் விரதம் இருந்து, காவடி சுமந்து உடன் செல்வர்.
1981ஆம் ஆண்டு ஆடிக்கிருத்திகையின்போது, மாம்பட்டு காவடி ஊர்வலம் வந்தவாசி பஜார் வீதி வழியாகச் சென்றது. அங்கிருந்த மசூதியைக் கடந்து சென்றபோது, காவடி ஊர்வலம் மீது முஸ்லிம்கள் தாக்குதல் நடத்தினர். மசூதிக்குள்ளிலிருந்து கற்களும், செருப்புகளும், மூத்திரச் சட்டிகளும் (சிறு பானைகள்) வீசப்பட்டன. காவடி பக்தர்கள் படுகாயம் அடைந்தனர். காவடி ஊர்வலம் தடைப்பட்டுப் போனது.
அதுமட்டுமல்லாமல், இரண்டு நாட்கள் கழித்து, மசூதியின் முன்புள்ள சாலையில், வலது மற்றும் இடதுபக்க திசைகளில் 100 மீட்டர் இடைவெளியில் வெள்ளை நிறக் கோடுகளைப் போட்டனர் முஸ்லிம்கள். ஒரு வெள்ளைக் கோட்டிலிருந்து மற்றொரு வெள்ளைக்கோட்டைத் தொடும் தூரம் வரை மேளதாளம் வாசிக்கக் கூடாது என்றும், கோஷங்கள் போடக் கூடாது என்றும், மசூதியின் இருபுறத்திலும் கம்பங்கள் நட்டு, பெரிய அறிவிப்புப் பலகைகளில் (போர்டு) எழுதி வைத்தனர்.
அதன்பிறகு, வந்தவாசி- பஜார் வீதியில் இந்துக்களின் எந்த ஊர்வலமாக இருந்தாலும், மசூதியின் முன்பாக மேளம் கொட்டுவதை நிறுத்திவிட்டு, மெளன ஊர்வலமாகச் செல்லும் வழக்கம் ஏற்பட்டது. இந்த அவமானகரமான நிலை குறித்து, இந்துக்களின் மனதில் கொந்தளிப்பு இருந்து வந்தது இயல்புதான். இச்சந்தர்ப்பத்தில் வந்தவாசியில் இந்து முன்னணியின் கிளை அமைக்கப்பட்டது. பிரின்டிங் பிரஸ் நடத்தி வரும் ராஜாராம் அவர்கள் வந்தவாசி நகர இந்து முன்னணி தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்தக் காலகட்டத்தில், எல்.மோகன் வந்தவாசி தாலுகா பிரசாரகராக இருந்தார். கடலூர்- மஞ்சக்குப்பம் ஷாகாவைச் சேர்ந்த சீனிவாசன் ஆரணியில் பிரசாரகராக இருந்தார். பென்னாடம் ரத்னசபாபதி வேலூர் நகர் பிரசாரகராக இருந்தார். மாம்பலம் ஷாகா சு.விஸ்வநாதன், கடலூர் ஜில்லா பிரசாரகராக இருந்தார். பரமக்குடி டி.ஆர்.நாராயனன் திருக்கோவிலூரில் பிரசாரகராக இருந்தார். நான் வேலூர் ஜில்லா பிரசாரகராக இருந்தேன். செங்கத்தைச் சேர்ந்த ராஜா ஆற்காட்டிலும், தாயுமானவன் திருவள்ளூரிலும் பிரசாரகர்களாக இருந்தனர்.
மாதந்தோறும் பிரசாரக் பைட்டக் (சங்க அமைப்பாளர்கள் ஆலோசனை அமர்வு) நடக்கும். அந்த நாள் எப்போது வரும் என்று காத்திருப்போம். காரணம், பிரசாரக் பைடக்குகளை விபாக் பிரசாரக் (கோட்ட அமைப்பாளர்) வீரபாகுஜி கலகலப்பாக நடத்துவார்; உற்சாகமாக இருக்கும்; பொழுதுபோவதே தெரியாது. அவரிடம் சுற்றுப்பயணத் தேதி வாங்குவதில் பிரசாரகர்களிடையே போட்டியும் முந்துதலும் இருக்கும்.
1982-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் வேலூர் விபாகின் பிரசாரகர்கள் பைட்டக் வந்தவாசியில் நடந்தது. அதில், சென்ற ஆண்டு இதே ஆகஸ்ட் மாதம் காவடி ஊர்வலம் தாக்கப்பட்டு, தடைப்பட்டுப் போனது குறித்து சர்ச்சை நடந்தது. இதை மாற்றியாக வேண்டும் என்று தீர்மானித்தோம். இறுதியில் வீரபாகுஜி, வரும் ஆடிக்கிருத்திகை அன்று தான் வந்தவாசியில் இருப்பதாகவும், காவடி ஊர்வலத்தில் கலந்து கொள்வதாகவும், அதிக எண்ணிக்கையில் ஸ்வயம்சேவகர்கள் காவடி ஏந்தி, ஊர்வலத்தில் கலந்துகொள்ளச் செய்ய வேண்டும் என்றும் கூறினார்.
காவடி ஊர்வலத்தில் வீரபாகுஜி கலந்து கொள்கிறார் என்ற செய்தி, வந்தவாசி தாலுகாவில் உள்ள ஸ்வயம்சேவகர்களுக்கு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.